Published:Updated:

7 கின்னஸ்; ஏழைகளுக்கு இலவசம்!- அரசு வேலையை உதறிய காஞ்சிபுரம் டாக்டர்

ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க, அரசு வேலையை உதறிவிட்டு 20 ஆண்டுகளாகச் சேவைசெய்துவருகிறார், காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன் வெங்கடசாமி.

காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்
காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்

காஞ்சிபுரத்தில், ஏழைகளுக்கு இலவசமாகவும் நடுத்தர மக்களுக்கு 50 ரூபாய் கட்டணத்திலும் சிகிச்சை அளித்துவருகிறார், டாக்டர் சத்தியநாராயணன் வெங்கடசாமி. வசதியானவர்களுக்கு மட்டும் 100 ரூபாய் கட்டணம். இவர், நீரிழிவு நோய் தொடர்பாக 7 கின்னஸ் சாதனை செய்துள்ளார். 3 ஆண்டுகள் அரசு டாக்டர் பணி, 20 ஆண்டுகள் ஏழைகளுக்கு சேவை என காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன் வெங்கடசாமி பிஸியாக இருந்துவருகிறார்.

காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்
காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்

ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

நீங்கள் எப்படி குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறீர்கள்?

காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்
காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரத்தில்தான். நான் படிக்கும்போது என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அம்மாதான் கஷ்டப்பட்டு என்னைப் படிக்கவைத்தார். கஷ்டம் என்றால் எனக்கு நன்றாகத் தெரியும். இதனால்தான் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முடிவுசெய்தேன்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி படித்தேன். அதன்பிறகு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஐ.எம்.சி பிரிவில் பணியாற்றினேன். அப்போது, என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவந்தேன். அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மட்டும்தான் சேவை செய்ய முடிகிறது என்று கருதி, அந்த வேலையை உதறிவிட்டு கிளினிக் ஆரம்பித்து சேவை செய்துவருகிறேன்.

உங்களைச் சந்திக்க வரும் நோயாளிகளிடம் எவ்வளவு கட்டணம் வாங்குவீர்கள்?

காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்
காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்

ஃபீஸ் என யாரிடமும் நான் கேட்க மாட்டேன். குறிப்பாக, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துவருகிறேன். நீரிழிவு நோய் தொடர்பான மருத்துவம் படித்த நான், அதற்காக சிகிச்சை அளிக்கிறேன். தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு நோயாளிகள் வரும்வரை கிளினிக்கில்தான் இருப்பேன். என்னைச் சந்திக்க, சில ஆண்டுகளுக்கு முன் தயிர் விற்கும் பாட்டி ஒருவர் வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த பிறகு, எவ்வளவு ஃபீஸ் என அந்தப் பாட்டி கேட்டபடியே சுருக்குப் பையில் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்தார். அதில் 5 ரூபாய், 10 ரூபாய் தாள்கள் மடித்தபடி இருந்தன. அதைப் பார்த்ததும் பாட்டி, நீங்கள் ஃபீஸ் தர வேண்டாம் என்று கூறிவிட்டேன். தெருத் தெருவாக தயிர் விற்று, கிடைத்த பணத்தில் ஃபீஸ் வாங்க எனக்கு மனம் இல்லை. இதனால்தான் யாரிடமும் நான் ஃபீஸ் கேட்பதில்லை. ஆனால், கிளினிக் நடத்தும் மற்ற டாக்டர்களுக்காக நடுத்தர மக்களிடம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் எது?

Vikatan

அரசு வேலையை விட்டுவிட்டு தனியாக கிளினிக் நடத்தியபோது எல்லோரும் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். ஆனால், நான் ஃபீஸே வாங்காமல் கிளினிக் நடத்தியபோது, எத்தனை நாளுக்கு தாக்குப்பிடிப்பார் என்று என் காதுபடப் பேசினார்கள். அதை நான் கண்டுகொள்ளவில்லை. கிளினிக்கில் ஒரே ஒருவரை மட்டும் உதவிக்கு வைத்துள்ளேன். மற்றப்படி லாபக்கணக்கில் கிளினிக்கை நடத்தவில்லை. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பல்வேறு பிரச்னைகளோடுதான் வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சையோடு மனஆறுதல்களும் தேவை. அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவரிடம் பேசியபோது, அவர் படித்த பள்ளியில் இலவச மருத்துவ முகாமை நடத்த முடியுமா என என்னிடம் கேட்டார். உடனே அடுத்த சில தினங்களில் ராமேஸ்வரத்தில் இலவச முகாமை நடத்தினேன். அதன்பிறகு, அப்துல் கலாமை நான் சந்தித்தபோது, மருத்துவ முகாமின் அனுபவம் குறித்து என்னிடம் கேட்டார். அதற்கு நான், 'ஏராளமான ஏழை மாணவர்கள் சட்டைக்குக்கூட பட்டன் இல்லாமல் வந்ததைப் பார்க்க முடிந்தது' என்று கூறினேன். அப்போது அவர், 'எந்தச் செயலையும் கடமைக்காகச் செய்யாதே, கடமையாக செய்' என்று கூறினார். அந்த வரிகளை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

வாழ்நாள் சாதனை என்றால் எதைக் குறிப்பிடுவீர்கள்?

காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்
காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால்தான் எம்.டி படித்த பிறகு நீரிழிவு நோய் சிகிச்சை தொடர்பாகப் படித்தேன். நீரிழிவு நோயால் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையைச் செலவழித்துவருகின்றனர். நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும். அதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறேன். 500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளேன். அப்போதுதான், கின்னஸ் ரெக்கார்டு செய்தால் நீரிழிவு நோய் குறித்து எளிதாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று கருதினேன். இதற்காக, 2011-ம் ஆண்டு முதல் தொடங்கி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறேன். 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 7 கின்னஸ் ரெக்கார்டுகளை நிகழ்த்தியுள்ளேன். இதை விளம்பரத்துக்காக என்றுமே நான் செய்ததில்லை. மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என் நோக்கம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்.