Published:Updated:

‘முடக்கம் தேவையில்லை; முழுக்கவனம் வேண்டும்!’

தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
News
தடுப்பூசி

வைரஸின் மரபியல் அமைப்பிலும் மாற்றம் நிகழ்கிறது.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகியிருக்கிறது. மக்கள் தைரியமாக நடமாடத் தொடங்கியுள்ளனர். இனி என்னாகும்? கொரோனாத் தொற்றின் அடுத்த அலை தமிழகத்தை பாதிக்குமா? யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? பக்க விளைவுகள் வருமா?

அடுக்கடுக்கான கேள்விகளோடு தொற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் வி.ராமசுப்பிரமணியனைச் சந்தித்துப் பேசினேன்.

``தமிழகத்தில் உண்மையாகவே கொரோனாத் தொற்று குறைந்திருக்கிறதா?’’

“நிச்சயமாக. இப்போது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. முன்பு ஒருநாளில் பத்தாயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 100க்கும் குறைவானவர்களே தொற்றுக்கு ஆளாகிறார்கள். பாதிப்பு, இறப்பு என அனைத்துமே கணிசமாகக் குறைந்திருக்கின்றன. பரிசோதனைகளும் குறைவாக நடப்பதற்குக் காரணம் நோய்த் தொற்று குறைந்திருப்பதே. பல மருத்துவமனைகளில் கோவிட் வார்டு மூடப்படுகிறது.

ஆனால், எவ்வளவு நாள் இப்படி இருக்கும் என்பதுதான் கேள்வியே. நோய்த்தொற்று அதிகரித்து இரண்டாவது அலை ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே நான் கருதுகிறேன். சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இந்தியாவை விட சில மாதங்களுக்கு முன்னதாகவே நோய்த் தொற்று ஆரம்பித்தது. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் மூன்று நான்கு மாதங்கள் பின்தங்கி ஜூன், ஜூலை மாதங்களில்தான் நோய்த் தொற்று உச்சத்திலிருந்தது. இப்போது மற்ற நாடுகளில் எல்லாம் இரண்டாவது அலை முதல் அலையைவிட மோசமாகத் தாக்கியிருக்கிறது. கூடுதல் தீவிரத்துடன் அங்கெல்லாம் பொது முடக்கம் செயல்பாட்டில் இருக்கிறது. அதே நிலை இந்தியாவிற்கும் ஏற்படக்கூடும்.

வைரஸின் மரபியல் அமைப்பிலும் மாற்றம் நிகழ்கிறது. டிசம்பர் மாதம்தான் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அந்தப் புதுவகை வைரஸால் நோய் பரவுதல் அதிகரிக்கும். ஆனால் நோயின் தீவிரம் அதிகரிக்காது என்பது ஆறுதல்.”

‘முடக்கம் தேவையில்லை; முழுக்கவனம் வேண்டும்!’

``அப்படியானால் நாம் பொது முடக்கத்தில் இருப்பது கட்டாயம் என்கிறீர்களா? பள்ளிகள் முதல் திரையரங்குகள் வரை திறக்கப்படுவது சரியா?’’

“இன்று கோவிட், நாளை வேறொரு வைரஸ் எனத் தொடர் அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்காக நம் வாழ்க்கையை முழுவதுமாக மூடி வைத்துச் செயல்படாமல் இருப்பது சாத்தியமில்லை. எட்டு மாதங்கள் வீட்டிற்குள் இருந்ததாலேயே பலரின் வாழ்வாதாரம் பாதிப்படைந்திருக்கிறது. இது தொடர்வது அபாயகரமானது. நாம் இயன்றவரை பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள் என எவை திறக்கப்பட்டாலும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். தியேட்டர்களில் 100 சதவிகிதம் அனுமதி உகந்ததல்ல. பள்ளிகளைத் திறந்தால்கூட முடிந்தவரை வெளியில், மரத்தடிகளில், மைதானத்தில் வகுப்புகள் நடத்துவது நல்லது. மாணவர்களை ஷிப்ட் முறையில் வரச் சொல்வதும் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கட்டாயம் முகக்கவசம் அணியச் செய்வதும் பாதுகாப்பாக இருக்க உதவும். திருமணம் முதல் பொதுக்கூட்டங்கள் வரை திறந்தவெளியில் நடத்துவது சிறந்தது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``எதிர்காலத்தில், கொரோனா மற்றுமொரு சாதாரணக் காய்ச்சல் போல நமக்குப் பழக்கப்பட்டுவிடுமா?’’

“இது மூன்று விதமாக மாற்றம் காணலாம். முதலாவது, சார்ஸ், மெர்ஸ் போல இந்த நோய் சில மாதங்கள் தீவிரமடைந்து பின்னர் நாளடைவில் மிக அரிதாகி, காணாமல் போகலாம். இரண்டாவது, முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை எனத் தொடர்ந்து வந்து, இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரும்பாலான மக்களைத் தொற்றி ஹெர்ட் இம்யூனிட்டி எனும் சமூக எதிர்ப்பு சக்தி உருவாகி கொரோனாத் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரலாம். மூன்றாவது, வைரஸ் மாறுதலடைந்து, அதன் தீவிரம் குறையலாம். அதாவது ஒரு உயிரின் பரிணாம வளர்ச்சி, உயிர்த்திருப்பதையே பிரதான தேவையாகக் கருதும். வைரஸ் பிழைத்திருக்க, அது தன் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டு மக்களிடையே நீடித்திருக்கும்.”

‘முடக்கம் தேவையில்லை; முழுக்கவனம் வேண்டும்!’

``இன்றைய தேதியில் கொரோனாத் தடுப்பூசிகள் மீது பல சந்தேகங்கள் உள்ளன. இந்தத் தடுப்பு மருந்துகள் நம்பகமானவையா?’’

“நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நானே இரு தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். முழுமையாக எல்லா ஆய்வுகளையும் மேற்கொண்டு ‘இது முழுக்க முழுக்க பாதுகாப்பானது’ என உறுதிசெய்யப்பட்ட பின்னர்தான் அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பொதுவாக ஒரு தடுப்பூசி தயாரிக்க 10 வருடங்கள் தேவைப்படுவதெல்லாம் பழைய கதை. இன்றைய பேண்டமிக் சூழலில் அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை. பல நாடுகள் ஒன்றிணைந்து அதிவேகமாகத் தடுப்பூசி கண்டறிய முயல்கிறார்கள். ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.

இன்றைய சூழலின் அவசரத் தேவைக்கு 100 சதவிகிதம் பலனளிக்கும் ஒரு பர்ஃபெக்ட் தடுப்பூசிக்காகக் காத்திராமல், அது பாதுகாப்பானது என்றால் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே சிறந்தது. யூகங்களையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம். ‘கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பதே நாம் அறிய வேண்டியது.”

``யாரெல்லாம் தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டும்?’’

“வாய்ப்பிருக்கும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இப்போதுவரை குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்தத் தடுப்பூசி வழங்க அனுமதி இல்லை. இது உயிருள்ள வைரஸை உடலில் செலுத்தும் லைவ் வாக்சின் கிடையாது. எனவே எல்லோரும் இதில் பயனடையலாம். ஆனால் 130 கோடிக்கு மேல் மக்கள்தொகையுள்ள இந்தியாவில் அனைவருக்கும் உடனே வழங்க இயலாது. அதனால் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், அடுத்து முதியோர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும். இப்படிப் படிப்படியாக.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இந்தக் கொரோனா காலத்தில் மருத்துவராக முன்களத்தில் நின்ற உங்கள் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?’’

“மருத்துவராகப் பல வருடங்கள் இருந்தாலும், இந்த ஒரு வருடம் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்த மிகவும் வித்தியாசமான பணி அனுபவம். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, எதிர்கொள்ள வழியும் தெரியவில்லை. பதில் தெரியாத பல கேள்விகளோடு சஞ்சலங்களோடு இருந்த அனைவரும், பதிலுக்காக மருத்துவர்களை எதிர்பார்த்து இருந்தனர். இந்தச் சூழலில் ஆரம்பக்காலத்தில் மிக அதிகமாகப் படிக்க வேண்டியிருந்தது, நிறைய நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒருபுறம் களத்தில் ஓய்வில்லாது தொடர் பணி, எங்கள் வேலை குடும்பத்தினரை பாதிக்குமோ என்ற கவலை என நாங்கள் மிகவும் அழுத்தமான மனநிலையில்தான் இருந்தோம். இந்த ஓராண்டில் நல்லவை, கெட்டவை என இரண்டையும் நிறைய பார்க்க முடிந்தது.”

‘முடக்கம் தேவையில்லை; முழுக்கவனம் வேண்டும்!’

``கொரோனா ஏற்படுத்திய முக்கிய பாதிப்பாக, மாற்றமாக எதைப் பார்க்கிறீர்கள்?’’

“ஒரு மருத்துவராக நான் என்னிடம் வருபவர்களை எதிர்கொள்வதும், நோயுற்றவர்கள் மருத்துவர்களை அணுகுவதும்கூட மாறியிருக்கிறது. ஒரு நோயாளியின் கரத்தைப் பற்றி ஆறுதல் கூறவோ, தோளில் தட்டி நம்பிக்கையளிக்கவோ முடிவதில்லை. அக்கறையும் அனுசரணையும் இருந்த இடத்தில் சந்தேகமும் பயமும் அதிகரித்திருக்கிறது. பலர் மனதளவில் பாதிப்படைந்திருக்கிறார்கள். இந்த மன அழுத்தம், உளவியல் சிக்கல்தான் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய பாதிப்பாக நான் பார்க்கிறேன். நன்கு தெரிந்த நிரூபணமான தகவல்களை மட்டும் நம்புவதும் பகிர்வதும் இந்தப் பதற்றத்தைக் குறைக்கும்.”

``10 சதவிகிதம் பேர் மட்டுமே தீவிரமாக பாதிக்கப்பட்டு, அதிலும் ஓரிரு சதவிகிதம் பேர் மட்டுமே உயிரிழக்கிறார்கள். இதற்காக நூறு சதவிகித மக்களும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டுமா எனக் கேள்வி முன்வைக்கப்படுகிறதே?’’

“அப்படிக் கேள்வி கேட்பவர்களிடத்தில் என் முதல் கேள்வி, அந்த ஓரிரு சதவிகிதம் பேர் நீங்களாகவோ, உங்கள் குடும்பத்தினராகவோ இருக்கலாம் அல்லவா? இரண்டாவது கேள்வி, 130 கோடிப் பேர் இருக்கும் இந்தியாவில், முறையான கட்டுப்பாடுகளின்றி அனைவரும் பாதிக்கப்பட்டால் அதில் ஒரு சதவிகிதம் என்பது ஒரு கோடியே முப்பது லட்சம் பேர். அத்தனை பேருக்கு பாதிப்பு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லையா? இதை மனதில் கொண்டால் இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்.”

‘முடக்கம் தேவையில்லை; முழுக்கவனம் வேண்டும்!’

``கொரோனாத் தடுப்பில் தனிநபர் கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?’’

“காய்கறிகள், பால் பாக்கெட்டுகள் மூலமெல்லாம் நோய் பரவுதல் இல்லை என இப்போது நன்றாகத் தெரிந்துவிட்டது. மூடிய ஏசி அறைகளைத் தவிர்த்து வெளியில் நிகழ்ச்சிகளை நடத்துங்கள், மாஸ்க் அணியுங்கள், கை கழுவுங்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள், ஆக்சிஜன் குறைந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள், நல்ல சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ளுங்கள். நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருங்கள். தைரியமாக இருங்கள்.”