Published:Updated:

சமூக நோய்க்கும் மருத்துவர் சாந்தா!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

பிரீமியம் ஸ்டோரி

நான் மருத்துவம் படித்த 1965-களில் புற்றுநோயைக் கண்டுபிடிக்கவோ சிகிச்சை அளிக்கவோ எந்த வசதிகளுமில்லை. மருத்துவர்கள், ‘கட்டி’ என்று மட்டும் அறிந்து அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிட்டு, அதுவே சரியான மருத்துவம் என்று நம்பினார்கள். தேன்கூட்டில் கை வைத்ததுபோல, அது உடலின் பல பாகங்களிலும் பரவி ஒரு கட்டத்தில் உயிரைப் பறிக்கும் கொடூரநோய் என்ற புரிதல் அப்போது இல்லை.

இன்று பலமைல் தூரம் முன்னேறியிருக்கிறோம். அறுவைசிகிச்சை, மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை எனப் புற்றுநோய்க்கென்றே மூன்று உயர் சிறப்புப் பட்டப் படிப்புகளே வந்துவிட்டன. மரணம்தான் முடிவு என்றிருந்த நிலைமாறி மார்பகப் புற்று, கருப்பைப் புற்று, ரத்தப்புற்று எனப் பலவற்றுக்கும் முழுமையான மருத்துவம் வந்துவிட்டது. புற்றுநோயை வென்று பலர் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

 டாக்டர் சாந்தா
டாக்டர் சாந்தா

இந்த மகத்தான மாற்றத்திற்கான முதல் வித்து தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் விதைக்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா இருவரும் அதை வளர்த்தெடுத்தார்கள். அடையாறு ஆலமரம் போல நின்று லட்சக்கணக்கானவர்களுக்குப் புதுவாழ்வு கொடுத்துக்கொண்டிருக்கிற அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வேரும் விழுதும் சாந்தாதான்.

சாந்தா புற்றுநோய் மருத்துவரல்ல; மகப்பேறு மருத்துவர். எப்படி முத்துலெட்சுமி ரெட்டி எம்.பி.பி.எஸ் மட்டுமே படித்துவிட்டு புற்றுநோயின் கொடுமை உணர்ந்து அதற்கான மருத்துவத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாரோ அப்படித்தான் சாந்தாவும் தன்னை அர்ப்பணித்தார்.

சாந்தாவின் பெரும் மருத்துவப் பங்களிப்பாக நான் கருதுவது, புற்றுநோய் வைத்தியத்தை எல்லோருக்குமானதாக மாற்றியதையும், சமூகத்தில் நம்பிக்கையை விதைத்ததையும்தான்.

புற்றுநோய் பற்றி நிறைய மூடநம்பிக்கைகள் நம்மிடமிருந்தன. நோயுற்றவர்களைப் புறக்கணித்து ஒதுக்கும் நிலை இருந்தது. சாந்தா, அந்த சமூகநோய்க்கு வைத்தியம் செய்தார். புற்றுநோய், குணப்படுத்தமுடியாத, ஒதுக்கிவைக்கப்பட வேண்டிய நோயல்ல என்று அடித்தட்டு மக்களுக்கும் நம்பிக்கையை உருவாக்கினார். புற்றுநோய் மருத்துவம் பற்றி அரசுக்கே அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் எழுப்பிய அதிர்வால் சிகிச்சைக்கான செலவில் அரசும் பங்களிப்பு செய்ய முன்வந்தது மிகப்பெரிய மாற்றம்.

தமிழகம் கடந்து இந்தியாவின் எந்த மூலையில் மக்கள் புற்றுநோயால் தாக்குண்டாலும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு நம்பிக்கையோடு வந்து நின்றார்கள். காந்தி வார்தாவில் தன் குடிலுக்கு அருகிலேயே இன்னொரு குடிலமைத்து, தொழுநோய்க்குள்ளான சம்ஸ்கிருத பண்டிதரை தொட்டுக் கழுவி ஆதரவு தந்ததைப்போல் சாந்தா புற்றுநோயாளிகளுக்கு ஏந்தலாக இருந்தார். மருத்துவம் என்பது உடல்நோய்க்கான சிகிச்சையை மட்டும் அளிப்பதல்ல. மனிதாபிமானத்தின் துணைகொண்டு அது சமூகநோயையும் குணப்படுத்த வேண்டும். சாந்தா அதைச் செய்தார். மருத்துவர்களுக்கு அவர் வாழ்க்கை, பாடம்.

டாக்டர் சாந்தாவுடனான எனது அறிமுகமும் உறவும் மிக அண்மைக்காலமாகவே உண்டானது. விரிந்த சேவையளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைப்போல ஒரு மருத்துவமனை தொடங்கவேண்டும் என்ற கனவோடு நாங்கள் தொடங்கிய ஈரோடு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து நல்லாசி தந்தார். புற்றுநோய் பற்றியும், வணிகமயமாகி வரும் மருத்துவத்துறை பற்றியும் அப்போது அவர் எடுத்த அந்த விழுமிய வகுப்பு அங்கிருந்த அத்தனை மருத்துவர் உள்ளங்களிலும் அப்படியே பதிவாகியிருக்கிறது.

சாந்தாவின் சிறிய வீடு மருத்துவர்களுக்கு அறம் போதிக்கும் ஆலயமாக என்றும் திகழும். மருத்துவம் வணிகமாகிவரும் காலத்தில் ஒரு நல்ல சமூக மருத்துவர் எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஒரு துருவ நட்சத்திரமாக டாக்டர் சாந்தா என்றென்றும் வழிகாட்டுவார். மருத்துவத்துறையில் டாக்டர் சாந்தா ஒரு மகாத்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு