Published:Updated:

` ரூ.17 லட்சம் அரசுப் பணத்தில் மனைவிக்குத் தேர்தல் செலவு?!' - பஞ்சாயத்துச் செயலர் சஸ்பெண்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பஞ்சாயத்துச் செயலர் பாலசுப்பிரமணியன்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பஞ்சாயத்துச் செயலர் பாலசுப்பிரமணியன்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தன் மனைவியின் தேர்தல் செலவுக்காக அரசு ஒப்பந்ததாரரின் வங்கிக் கணக்குக்கு போலியாக பணத்தை அனுப்பிவைத்த பஞ்சாயத்துச் செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

`அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு செய்யாத வேலைக்கு பில் போட்டு எடுத்துட்டாங்க’ என்று கிராமப் பகுதிகளில் மக்கள் பேசிக்கொள்வது வழக்கம். ஆனால், உண்மையாகவே அப்படியொரு சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்திருக்கிறது. ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தில் அத்தகைய மோசடி அரங்கேறியிருக்கிறது.

`பார் ஏலம் எடுத்துத் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி' - திமுக நிர்வாகிமீது மகளிரணிப் பிரமுகர் புகார்

17 லட்சம் ரூபாய் முறைகேடு நடக்கவிருந்ததை அ.தி.மு.க-வினர் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள்.

இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மைக்கேல் ராயப்பனிடம் பேசினோம். ``ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட கஸ்தூரிரெங்கபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார். அவரது வங்கிக் கணக்குக்கு செப்டம்பர் 29-ம் தேதி இரு கட்டங்களாக 11,74,688 ரூபாய் பணம் வந்திருக்கிறது.

மைக்கேல் ராயப்பன்
மைக்கேல் ராயப்பன்

தனக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது தெரியாததால் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்திருக்கிறார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பணம் வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. புதிதாக அரசு வேலை எதையும் செய்யாத நிலையில், எதற்காகப் பணம் வந்தது என்ற குழப்பத்தில் இருந்த அவர், வங்கி அதிகாரியிடம் புகார் தெரிவித்துவிட்டு வந்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்துச் செயலரான பாலசுப்பிரமணியன் என்பவர் போன் செய்து, ``வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து உங்க வங்கிக் கணக்குக்கு பணம் வந்திருக்கும். நான்தான் அதை அனுப்பச் சொன்னேன். என் மனைவி பஞ்சாயத்துத் தலைவருக்கு போட்டியிடுவதால், தேர்தல் செலவுக்கு அந்தப் பணத்தை சீக்கிரம் எடுத்துக் கொடுங்க" என்று சொல்லியிருக்கிறார்.

பேங்க் பாஸ்புக்
பேங்க் பாஸ்புக்

அரசுப் பணத்தை மோசடியாக எடுப்பதைப் புரிந்துகொண்ட அவர், என்னிடம் தகவல் சொன்னார். நான் இது பற்றி விசாரித்தபோது, இசக்கிமுத்துவுக்கு 11.75 லட்சம் வந்ததுபோலவே, சுப்பையா என்ற ஒப்பந்ததாரரின் வங்கிக் கணக்கில் 5,40,600 ரூபாய் போடப்பட்ட விவரமும் கிடைத்தது.

பணம் வந்ததால் அச்சத்திலிருந்த இசக்கிமுத்துவையும் அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் புகார் அளித்தேன். அவர் உரிய விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழகம் முழுவதும் இதுபோல அரசுப் பணத்தை எடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு ஆளுங்கட்சியினர் பயன்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு ஆளுங்கட்சியினர் அரசுப் பணத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
மைக்கேல் ராயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ

சர்ச்சைக்குரிய பஞ்சாயத்துக்கு கிளார்க் பாலசுப்பிரமணியன் தி.மு.க விசுவாசி. அவருக்குப் பின்னணியில் அதிகாரிகள் மட்டுமல்லாமல் லோக்கல் ஆளுங்கட்சிப் பிரபலங்களும் இருக்கிறார்கள். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பி.டி.ஓ-வான லயோலா ஜோசப் என்பவர் பீட்டர் அல்போன்ஸின் உறவினர் என்கிறார்கள். இத்தகைய மோசடி தமிழகம் முழுவதும் நடந்திருக்கலாம் என்பதால் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த இசக்கிமுத்துவைச் சிலர் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று மிரட்டல்விடுத்தனர் என்கிறார்கள். அதனால் அவர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் எனச் சொல்கின்றனர். இந்த நிலையில் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க-வின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளரான ஐ.எஸ்.இன்பதுரை மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை
முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை

இன்பதுரையிடம் கேட்டதற்கு, ``நூதனமாக மோசடி செய்வதில் கில்லாடிகளான தி.மு.க-வினர் ஊரக உள்ளாட்சித் தேர்தல் செலவுக்காக அந்தந்த யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மூலம் மோசடியாக அரசுப் பணத்தைப் பெற்று தேர்தல் செலவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் விரிவான விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டேன்” என்றார் காட்டமாக.

இது பற்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கேட்டதற்கு, ``இந்த விவகாரம் தொடர்பாக எனக்குப் புகார் வந்ததும் சப்-கலெக்டரை விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். பஞ்சாயத்துச் செயலரான பாலசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்திருக்கிறேன்.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

வேறு எங்கும் இது போன்று முறைகேடு நடந்ததாகப் புகார் எதுவும் வரவில்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். புகாருக்கு உள்ளான ராதாபுரம் பி.டி.ஓ-வான லயோலா ஜோசப், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரத் ஆகியோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

2024-ம் வருடத்துக்குள் நாடு முழுவதுமுள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் இணைப்பு கிடைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரம் காட்டிவரும் ஜல் ஜீவன் திட்டத்தில் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பஞ்சாயத்து செயலர் பாலசுப்பிரமணியன்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பஞ்சாயத்து செயலர் பாலசுப்பிரமணியன்

அதிகாரிகளின் துணை இல்லாமல் ஒப்பந்ததாரரின் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை என்பதால், பஞ்சாயத்துச் செயலர் பாலசுப்பிரமணியனுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள், பா.ஜ.க-வினர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடந்துள்ள முறைகேடு குறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் பா.ஜ.க-வினர் திட்டமிட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு