Published:Updated:

மீம்ஸ் க்ரியேட்டர்களுடன் போட்டிபோடும் காவல்துறை... ட்ரோன் வீடியோக்கள் தனிமனித உரிமையைப் பாதிக்கிறதா?

ட்ரோன் கேமரா
ட்ரோன் கேமரா

கொரோனா ஊரடங்கைக் கண்காணிக்க, காவல்துறையினர் ட்ரோன் கேமராவைப் பயன்படுத்துகின்றனர். இதனால், தனி மனித உரிமை பாதிக்கப்படுவதாகக் குமுறுகின்றனர் `பத்து ரூபாய் இயக்க'த்தினர்!

ஊரடங்கு சட்டத்தை மீறி பொதுவெளியில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் இளசுகளில் ஆரம்பித்து அரச மரத்தடியில் கூடியிருக்கும் பெருசுகள் வரை அனைவரையும் தேடித்தேடி விரட்டும் தமிழ்நாடு காவல்துறையின் ட்ரோன் வீடியோக்கள்தான் இன்றைய தேதியில் தமிழக மக்களுக்கான வைரல் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!

ட்ரோன் கேமரா - காவல்துறை
ட்ரோன் கேமரா - காவல்துறை

கேமராவின் கழுகுக் கண்களிலிருந்து தப்புவதற்காக கேரம் போர்டையே கேடயமாக மாற்றித் தப்பிக்கிறார் ஒருவர்; இலை தழைகளால் முகத்தை மறைத்தபடியே பதுங்குக் குழிகளுக்குள் பதுங்குகிறார்கள் சிலர்; மடிமீது தலைவைத்து ரொமான்ஸில் மூழ்கியிருந்த காதல் ஜோடி, பைக் ஏறி பறக்கிறார்கள்; விடாமல் குறிவைத்து விரட்டும் ட்ரோனை கல்லெறிந்து வீழ்த்த நினைத்து கைதானவர் வரை... தினம் தினம் புதுப்புது வீடியோக்களை வடிவேல் வாய்ஸ் ஓவரோடு வெளியிட்டு, மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு `டஃப் ஃபைட்' கொடுத்துவருகிறது தமிழகக் காவல்துறை!

பொதுமக்களிடையேயும் காவல்துறையின் இந்த வீடியோக்களுக்கு மிகுந்த வரவேற்பு. ஆனால், `ட்ரோன் கேமரா மூலம் தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் காவல்துறை, அதையே காமெடியாக்கி வீடியோவாக வெளியிடுவதும் சட்டத்தை மீறிய செயல்' என்று கொதிக்கிறது `பத்து ரூபாய் இயக்கம்.'

இதுகுறித்துப் பேசும் இவ்வியக்கத்தின் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான நல்வினை விஸ்வராஜு, ``தனி மனித இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் காவல்துறை, ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்துகிறது. ஆனால், கேமராவைப் பயன்படுத்துகிறபோது, அதற்கான சட்ட நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டியது காவல்துறையின் கடமை. பொதுவாக, ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்த காவல்துறை அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த அனுமதியை யாரும் பெற்றிருக்கவில்லை.

ட்ரோன் கேமரா காட்சி
ட்ரோன் கேமரா காட்சி

சாதாரணமாக பொது இடங்களில், சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்தாலே, `நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்' என்ற எச்சரிக்கை வாசகத்தை பொதுமக்களுக்குத் தெரியும்விதத்தில் அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. அப்படியிருக்கும்போது, தினம் தினம் இதுபோல் வீடுகளுக்கு மேலே ட்ரோன் கேமராக்களைப் பறக்கவிடும் காவல்துறை, `கேமராவினால் படம் பிடிக்கப்போகிறோம்' என்று முன்னரே பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு அறிவிப்புகளைக் கொடுக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படுவதில்லை. இது சட்டத்தை மீறிய செயல்.

ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்தவகையான ட்ரோன் கேமராக்கள். அதுமட்டுமல்லாமல், காவல்துறையினர் சென்றுவருவதற்கென மக்களின் வரிப் பணத்தில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளபோது, அவசியமே இல்லாமல் அடிக்கடி மக்கள் குடியிருப்புகளின் மீது கேமராக்களை பறக்கவிடுவதும், படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை எடிட்டிங், ரீரிக்கார்டிங் செய்து வீடியோக்களாக வெளியிடுவதும் மக்களின் சுய உரிமைகளை கேலிக் கூத்தாக்குகிறது; இது அப்பட்டமான மனித உரிமை மீறல்!

எனவே ட்ரோன் கேமராவை பயன்படுத்த சில சட்ட வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு `பத்து ரூபாய் இயக்கம்' சார்பில் மனுக்கொடுத்துள்ளோம்'' என்றார்.

சிஆர்பிஎஃப் வீரரை சங்கிலியால் கட்டிவைத்த கர்நாடக போலீஸ் - லாக்டெளன் சர்ச்சைகள்
நல்வினை விஸ்வராஜு - பாஸ்கர்
நல்வினை விஸ்வராஜு - பாஸ்கர்

`பத்து ரூபாய் இயக்க'த்தின் மாநிலச் செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் கே.பாஸ்கர், ``திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, ட்ரோன் கேமரா வழியே கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதைக் கண்டுபிடித்து கட்டுப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. இதேபோல், மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளைகளையும் கண்டுபிடித்துத் தடுக்க இந்தவகை கேமராக்களைப் பயன்படுத்தலாம்.

அதைவிடுத்து ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக ட்ரோன் பயன்படுத்தப்படுவது பல்வேறு சட்டச் சிக்கல்களையும் மனித உரிமை மீறலையும் ஏற்படுத்துகிறது. அதாவது, திருவள்ளூர் மாவட்டம் அதிகளவில் கிராமப்புறங்களைக் கொண்ட மாவட்டம். இங்குள்ள நடுத்தர மக்களின் வீடுகளில் குளியலறை மற்றும் கழிப்பறைகள் என்பது சுற்றுச் சுவர் மட்டுமே.

அதாவது 3 பக்கம் ஓலைக்கீற்று மற்றும் தகரக் கதவு என எளிமையான முறையிலேயே அமைக்கப்பட்டிருக்கும்; மேல் பகுதியில் மறைப்பு எதுவும் இல்லாமல், திறந்த நிலையிலேயேதான் இருக்கும். நடுத்தரத்துக்கும் கீழேயுள்ள ஏழை - எளிய மக்களோ, ஊருக்கு வெளியே குளம், ஓடை என நீர் நிலை அருகிலும் வயல் வெளியிலும்தான் காலைக்கடன்களை முடிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதுமே கிராமப்புற எளிய மக்களின் நிலை இதுதான்.

இப்படியிருக்கும்போது, திடீரென ட்ரோன் கேமராக்கள் தலைக்கு மேலே பறந்து வந்து படம் பிடிக்கிறது என்றால், அங்கே பெண்களின் நிலை என்னவாகும்? இந்தக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும் ட்ரோன் கேமராக்களும் அதை இயக்குபவர்களும் காவல்துறை அல்லாத தனியார்களாகவே இருப்பது, இன்னும் பயத்தை அதிகப்படுத்துகிறது. கேமரா பறக்கவிடப்படும் திசையில் ஆரம்பித்து, பதிவாகும் காட்சிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுமா என்பதுபோன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. தனி மனித சுதந்திரத்தை, பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் இந்தச் செயலை காவல்துறையே செய்யலாமா?

Viral Drone Video
Viral Drone Video

கொரோனாவைத் தடுக்க, மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது எந்தளவு முக்கியமோ, அதே அளவு அம்மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் முக்கியம். எனவே, குறைந்தபட்சம், கேமரா கண்காணிப்புக்கு உள்ளாகும் பகுதியில், பொதுமக்களிடையே ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்'' என்றார் கோரிக்கையாக.

`பத்து ரூபாய் இயக்க'த்தின் கோரிக்கைகளுக்கு விளக்கம் கேட்டு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் பேசினோம்... ``ட்ரோன் கேமரா வழி கண்காணிப்பு என்பது முழுக்க முழுக்க பொதுநல நோக்கத்தோடு செய்யப்படுகிற பணி; யாருடைய தனிமையையும் பாதிக்கக்கூடிய வகையில் செயல்படுவதற்கானது அல்ல இது. அப்படியான எந்தவொரு புகாரும் இதுவரை வந்ததும் இல்லை.

அடுத்ததாக, சென்னை நகர்ப்புறம் என்பதால், இங்கே நீங்கள் சொல்வதுபோன்ற திறந்தவெளியிலான கழிவறை - குளியலறை கொண்ட அமைப்புகள் கிடையாது. மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முழு நோக்கம். அதனால்தான், `உயிர்க்கொல்லி நோயான கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்' என்ற ஒரே நோக்கில், தங்கள் உயிரையே பணயம் வைத்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் காவல்துறையினர்.

ஏ.கே.விஸ்வநாதன்
ஏ.கே.விஸ்வநாதன்

இந்த நிலையில், மக்கள் ஒன்று கூடினால் ஏற்படவிருக்கும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் பொருட்டுதான் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இது, தினம்தோறும் சாலைகளில் பயணிப்போர் சிசிடிவி கேமரா கண்காணிப்புக்கு உள்ளாவதைப் போன்று சாதாரண நிகழ்வுதான்'' என்றார்.

’சச்சினைக் கண்டதும் கண் கலங்கிட்டேன்!’ - ஹிமாதாஸ் ஷேரிங்ஸ்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அரவிந்தன், ``திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பகுதி. இங்கே சாலை வழியே அல்லாமல் வயல்வெளி மற்றும் காட்டுப் பகுதி வழியேயும்கூட சமூக விரோதிகள் சாராயக் கடத்தலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. காவல்துறையினர் எளிதில் சென்றுவர முடியாத இந்தக் காட்டுப் பகுதியில்தான் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்புப் பணிகளைச் செய்துவருகிறோம். இதன் மூலம்தான் அண்மையில் கள்ளச் சாராயக் கும்பலையும் வளைத்துப் பிடித்தோம்.

பரந்துவிரிந்த காட்டுப் பகுதிகளில் கும்பலாகச் சேர்ந்துகொண்டு சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு அதிகம். இதுமாதிரியான இடங்களில் இன்ச் பை இன்ச்சாக அனைத்தையும் காவல்துறையே நேரில் சென்று கண்காணிப்பதென்பது சாத்தியமில்லாததும்கூட. எனவேதான் ட்ரோன் பயன்படுத்தவேண்டியுள்ளது.

அரவிந்தன்
அரவிந்தன்

நாடு முழுக்க 144 தடையுத்தரவு அமலில் இருந்துவரும் இந்தச் சூழலில், மக்கள் அனைவருமே `வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும்' என்ற விழிப்புணர்வோடுதான் இருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து தனியாக அவர்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது இல்லை. அடுத்ததாக, ட்ரோன் கேமராவை இயக்குவது, தகவல்களைப் பதிவு செய்வது என அனைத்தும் காவல்துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில்தான் நடந்துவருகிறது. எனவே, பாதுகாப்பு குறித்தும் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை!'' என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு