Published:Updated:

‘தயவுசெய்து அதைக் கொடுத்துடுங்க...’ - போதையில் நடுங்கும் கோவை!

போதை
பிரீமியம் ஸ்டோரி
போதை

கோவையில் வலி மருந்து, மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்துவது நீண்டகாலமாகவே இருக்கிறது.

‘தயவுசெய்து அதைக் கொடுத்துடுங்க...’ - போதையில் நடுங்கும் கோவை!

கோவையில் வலி மருந்து, மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்துவது நீண்டகாலமாகவே இருக்கிறது.

Published:Updated:
போதை
பிரீமியம் ஸ்டோரி
போதை

தொழில் நகரமான கோவையை சமீபகாலமாக மிரட்டிக் கொண்டி ருக்கிறது போதை கலாசாரம். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்களைக் குறிவைத்து இயங்கும் இந்த போதைக் கும்பலால் போதையில் நடுங்கிக்கொண்டிருக் கிறது கோவை.

அஜய் குமார்
அஜய் குமார்

இது பற்றி நம்மிடம் கோவை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்துகள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் கூறுகையில், “போதை மாத்திரையும், ஊசியும் ‘அவுட் ஆஃப் ஃபேஷன்’ ஆகிவிட்டது. மிட்டாய்போலச் சப்பி சாப்பிடுவது, பேண்டேஜ்போல கையில் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்வது என்று ‘அப்டேட்’ ஆகிக்கொண்டேயிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் தொழுகைக்குச் செல்லும் போது குளிர்ச்சிக்காகக் கண் பகுதியில் சுருமா (மை போன்ற பொருள்) இடுவது வழக்கம். அதில்கூட போதை மருந்து கலந்து கண்களில் இட்டுக்கொள்கின்றனர். கோவையில் பல ஹோட்டல்களில் போதை பார்ட்டிகளை நடத்துகின்றனர். அவற்றில்தான் இது போன்ற புதுப்புது போதைப் பழக்கங்கள் அறிமுகமாகின் றன. போதைக்குப் பழக்கமான ஒருவர், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்குவார். இதைப் புரிந்துகொண்டு போதை நெட்வொர்க், விலையை ஏற்றி விற்கும். அடிமையானவர்கள் சொந்த வீடுகளிலிருந்தே செல்போன், வாகனம், பணம் போன்றவற்றைத் திருடுகின்றனர். பல நல்ல குடும்பங்கள் இந்த போதைப் பழக்கத்தால் சிதைந்து கொண்டிருக்கின்றன. 140 கிராமுக்கு கீழ் போதைப்பொருள் வைத்திருந்தால் அவர்களை போலீஸார் ஸ்டேஷன் பெயிலில் விட்டுவிடுகின்றனர். அதனால் சிறிய சிறிய அளவிலான வடிவில் விற்கின்றனர். கொஞ்சமோ, அதிகமோ போதைப்பொருள் எவ்வளவு வைத்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் ஒழிய இந்தப் பழக்கத்தை ஒழிக்க முடியாது” என்றார்.

‘தயவுசெய்து அதைக் கொடுத்துடுங்க...’ - போதையில் நடுங்கும் கோவை!

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் BE இரண்டாம் ஆண்டு படிக்கும் அஜய் குமார் என்ற மாணவன் கடுமையான வாந்திக்கு ஆளாகி, கடந்த 13-ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்தான். மாணவனின் தந்தை சௌந்தரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிந்தனர் மதுக்கரை போலீஸார். பிரேத பரிசோதனையில், அவனது இடது முன் கையில் நரம்பு வழியாக போதை மருந்துகளை ஊசி மூலம் ஏற்றியதே இறப்புக்குக் காரணம் என்று தெரியவந்தது. விசாரணையில், அந்த மாணவர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு (Syringe) மூலமாக தனக்குத்தானே செலுத்திக்கொண்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு போதை மருந்து விற்ற, கும்பகோணத்தில் தனியார் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவையின் போதைப் பழக்கம் குறித்த தகவல்களைச் சேகரித்துவரும் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “கோவையில் வலி மருந்து, மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்துவது நீண்டகாலமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு பார்மா மீது நடவடிக்கை எடுத்ததால் இப் போது போதை மருந்து எளிதில் கிடைப்பதில்லை. இதையடுத்து வடமாநிலங்களிலிருந்து போதை மாத்திரைகளை இறக்குகின்றனர். போதைப் பொருள் விற்பதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பு வாட்ஸ் அப் குழுவை ஆரம்பித்து விட்டு, பிசினஸ் முடிந்ததும் கலைத்துவிடு கின்றனர். உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களும்கூட இந்தக் கும்பலில் இருக்கின்றனர். சமீபத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த, டெலிவரி பாய் உள்ளிட்ட ஏழு பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

முகமது பஷீர்
முகமது பஷீர்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவன் விபத்தில் இறந்துவிட் டான். மருத்துவமனையில் அவனுடைய போதை நண்பர்கள் கூடிவிட்டனர். `போஸ்ட்மார்ட்டம் முடிந்துதான் உடலைக் கொடுப்போம்’ என்று கூறிய தால், கடுப்பான அவர்கள் மருத்துவரை அடிக்கப் பாய்ந்ததுடன், அவர்களாகவே பிணவறைக்குள் நுழைந்து உடலை எடுத்துவந்துவிட்டனர்.

பணிக்குச் செல்லும் ஒரு நடுத்தர வயது ஆண் இந்த போதைக்கு அடிமையாகிவிட்டார். ஒரு கட்டத்தில் பணம் இல்லாவிட்டாலும், போதை மருந்து வேண்டும் என்று நச்சரித்திருக் கிறார். கடுப்பான விற்பனைக் கும்பல், ‘காசு இல்லாம எப்படிக் கொடுக்க முடியும்... வேணும்னா... உன் பொண் டாட்டியைக் கூட்டிட்டு வா...’ என்று கொச்சையாகச் சொல்லியிருக்கிறார் கள். அடுத்த நாள் யாரும் எதிர்பாராத வகையில் அந்த நபர் தன் மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார்.

சுல்தான்
சுல்தான்

‘தயவுசெய்து அதைக் கொடுத்துடுங்க... தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டி அடிக்கிறார்... என்னால தாங்க முடியலை... நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்’ என்று கதறியிருக்கிறார் அந்தப் பெண். அவர்கள் அந்தப் பகுதியில் நன்கு பெயரெடுத்த குடும்பம். இப்படி போதையால் தினம் தினம் ஏராளமான குடும்பங் கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, இதை முழுவதுமாகத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர் களுக்கு உளவியல் ஆலோசனை உட்பட மறுவாழ்வுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்” என்றார்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் கேட்டோம். “போதை மருந்து தொடர்பாக சமீபத்தில் வெவ் வேறு வழக்குகளில் 12 பேரைக் கைது செய்திருக் கிறோம். மேற்கொண்டு சிலரைக் கைதுசெய்ய தனிப்படை அமைத்திருக்கி றோம். இவர்களுக்கு உத்தரப்பிரதேசத் திலிருந்து கூரியர் மூலமாக போதை மாத்திரை வருவது தெரியவந்திருக்கிறது. விரைவில் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய விருக்கிறோம். கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் மூலம் அதை வாங்கியவர்களின் பட்டியலையும் எடுத்துவருகிறோம். அவர்களை மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் சென்று, போதைப் பழக்கத்திலிருந்து மீட்போம்” என்றார்.

தீயாய்ப் பரவுகிறது போதைப் பழக்கம். `பக்கத்து வீட்டில்தானே...’ என்று விட்டுவிட்டால், ஆபத்து நமக்கும்தான்!