Published:Updated:

இ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, சட்டவிரோத முறையில் இ-பாஸ் பெற்றுக்கொடுக்கும் இந்தக் கும்பல் குறித்த விவரம் ஜூனியர் விகடனுக்குக் கிடைத்தது.

பிரீமியம் ஸ்டோரி

“தாம்பரம் கோபிங்களா... வாட்ஸ்அப்ல உங்க டிராவல்ஸ் நம்பர் வந்தது. நான் மதுரை. எனக்கு ஊருக்குப் போகணுங்க. அதான்...’’

‘‘எங்கிருந்து பேசறீங்க?’’ என்று விவரங்களைக் கேட்டுவிட்டு, “உங்ககிட்ட இ-பாஸ் இருக்கா? இல்லைன்னா கஷ்டமாச்சே...’’ என்றார் தாம்பரம் கோபி எதிர்முனையில்.

‘‘நான் முயற்சி பண்ணி இ-பாஸ் கெடைக்கலைங்க... உங்ககிட்ட சொன்னா ஏற்பாடு பண்ணித் தருவீங்கனு சொன்னாங்க. அதான், கான்டாக்ட் பண்ணினேன்...’’

‘‘ம்ம்ம்... சரி... அதுக்கெல்லாம் ஆள் இருக்கு பார்த்துக்கலாம். ரெண்டாயிரம் ரூவா ஆகும். டிராவல்ஸ் கணக்கு தனி...’’

‘‘சரிங்க... பணத்தைப் பத்தி கவலையில்லை... பார்த்துக்கலாம்.’’

***

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரஸ் தொற்று குறித்த அச்சமும் மக்கள் மனதில் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெருநகரங்களி லிருந்து சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழகத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

மருத்துவத் தேவைகளுக்காகவும், திருமணம், இறப்பு மற்றும் தொழில் சார்ந்த பயணங்களுக்கும் இணையம் வழியாக அனுமதி பெறும் ‘இ-பாஸ்’ முறை செயல்பாட்டிலிருக்கிறது. தகுந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே இ-பாஸ் பெற முடியும்!

சென்னையிலிருந்து சரியான ஆவணங்கள் ஏதுமில்லாமல் இ-பாஸ் வாங்குவது சுலபமில்லை. ஆனால், எந்தவொரு ஆவணமும் இல்லாமல் இ-பாஸ் வாங்கிக் கொடுத்து லட்ச லட்சமாய் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

மனோஜைக் கைதுசெய்ய சென்றபோது...
மனோஜைக் கைதுசெய்ய சென்றபோது...

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, சட்டவிரோத முறையில் இ-பாஸ் பெற்றுக்கொடுக்கும் இந்தக் கும்பல் குறித்த விவரம் ஜூனியர் விகடனுக்குக் கிடைத்தது. இந்தக் கும்பலை கையும் களவுமாகப் பிடிக்க ஆயத்தமானது ஜூ.வி குழு. அந்த மோசடிக்குழு குறித்த தகவல் களைச் சேகரிக்க ஆரம்பித்த போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தமிழகம் முழுக்கவுள்ள பாஸ் கொடுக்கும் அலுவலகங்களில் உள்ள சிலர், புரோக்கர்கள் மற்றும் டிரைவர்கள் கொண்ட நெட்வொர்க் உருவாக்கப்பட்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுவருவது தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏ.சி.எஃப் Vs இ.சி.எஃப்

நேஷனல் கல்லூரியில் படித்த தீரமுள்ள தோழர்கள் பலரையும் ஒருங்கிணைத்து, ‘ஏ.சி.எஃப்’ (Anti Corruption Force) என்ற நெட்வொர்க்கை ‘ரமணா’ படத்தில் உருவாக்குவார் விஜயகாந்த். இதிலிருப்பவர்கள், தமிழகம் முழுக்க அரசு அலுவலகங்களில் பணியில் சேர்வார்கள். அவர்களுக்குள் ஒவ்வோர் அலுவலகத்திலிருந்தும் ரகசியத் தகவல் பரிமாற்றம் நடக்கும். இதன் மூலமாக லஞ்ச லாவண்யப் பேர்வழிகளை (கான்ட்ராக்டர்கள், அரசு உயரதிகாரிகள்) ஆதார பூர்வமாகக் கண்டறிந்து பழிவாங்குவார் ரமணா. இதே ஸ்டைலில், தமிழகம் முழுக்கவுள்ள இ-பாஸ் வழங்கும் அலுவலகங்களிலுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களில் பலரையும் இணைத்து லஞ்சம் வாங்குவதற்கென்றே இந்த நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளனர். இந்த நெட்வொர்க்குக்கு ‘இ.சி.எஃப்’ (E-pass Corruption Force) என்று பெயர் கொடுத்துள்ளோம். தமிழகம் முழுக்கப் பணத்தை வாங்கிக்கொண்டு, இ-பாஸ் களை இந்த ‘இ.சி.எஃப்’ அள்ளி வழங்கியுள்ளது.

கிடைத்த தகவல்களைக்கொண்டு தாமதிக்காமல் களத்தில் இறங்கினோம். இ.சி.எஃப்-பின் ஆரம்பப்புள்ளியாக இருப்பவர்கள் டிராவல்ஸ் நடத்துபவர்கள்தான் என்று நமக்குக் கிடைத்த தகவலின்படி விசாரித்து, பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு டிராவல்ஸ் நடத்தும் ‘தாம்பரம் கோபி’ என்பவரின் எண்ணைப் பிடித்து, அழைத்தோம்.

அப்படிப் பேசியதுதான் மேலே நீங்கள் படித்தது... நாம் `ஓ.கே’ சொன்னதும் தாம்பரம் கோபி, ‘‘கொஞ்ச நேரத்துல உங்களுக்கு கால் வரும்’’ என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

சிறிது நேரத்தில் மனோஜ் என்பவரிடமிருந்து அழைப்பு வந்தது. ‘‘கோபி உங்ககிட்ட பேசச் சொன்னார். என்கிட்ட ஏற்கெனவே ஒரு இ-பாஸ் இருக்கு. அதுல மதுரைக்குப் போயிடலாங்க.’’

‘‘இல்லை சார்... அதுல போய் வாகன சோதனையில மாட்டிக்கிட்டா சிக்கல் சார். நாம புதுசாவே எடுத்துடலாமே... எடுக்க முடியுமா?’’

‘‘அதெல்லாம் எடுத்துடலாம்... 2,000 ரூவா ஆகும். உங்க ஆதார் கார்டு விவரங்களைக் கொடுங்க...’’

சிறிது நேரத்தில், நமது எண்ணுக்கு இ-பாஸ் விண்ணப்பிக்கப்பட்டதாக ஒரு விண்ணப்ப எண் அவரிடமிருந்து வந்தது. சில மணி நேரத்தில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவரே தகவல் அனுப்பினார். உடனே நாம் அழைக்க, ‘‘முழு ஊரடங்கு வேற போட்டுட்டாங்க. சென்னையி லிருந்து போறதுக்கு ரொம்ப கெடுபிடி பண்றாங்க...’’ என்று இழுத்தார்.

இ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்

நாம் அவரிடம், ‘‘வேற வழி இல்லைங்களா...” என்று கேட்க, ‘‘நமக்கு உள்ளே ஆளுக இருக்காங்க... அவங்க மூலமா வாங்கலாம். ஆனா, கொஞ்சம் அதிகமா செலவாகும். ரெண்டு மடங்குகூட ஆகலாம்’’ என்றார்.

‘‘பணம் பத்திக் கவலை இல்லை’’ என்று ‘ரமணா’ பட டயலாக்கைச் சொல்லி ‘‘ஊருக்குப் போயே ஆகணும்’’ என்றோம். “அப்ப சரி... வாங்கிடலாம்’’ என்றார் மனோஜ்.

அடுத்த அழைப்பு ஜெமினி மணி என்பவரிட மிருந்து வந்தது. ஒரு சில விவரங்களை வாங்கிக் கொண்ட அவர், ‘‘நைட் ஆகிருச்சு. காலையில கண்டிப்பா பாஸ் கெடைச்சுரும்’’ என்றார். சில நிமிடங்களில் முன்பு பேசிய மனோஜின் எண்ணி லிருந்து நமக்கு இ-பாஸ் விண்ணப்பித்ததற்கான விண்ணப்ப எண் வந்தது.

அடுத்த நாள் காலை மனோஜைத் தொடர்பு கொண்டோம். ‘‘மதியத்துக்குள்ள பாஸ் கிடைச்சுரும்’’ என்றார். அவர் சொன்னதுபோலவே மதியம் நம்மைத் தொடர்புகொண்டு, ‘‘பாஸ் கிடைத்து விட்டது’’ என்றார். தான் முன்பு வைத்திருந்த பாஸில் ஒருவரை அழைத்துக்கொண்டு மதுரை வந்திருப்பதாகவும், `இரவு சென்னை திரும்பிவிடுவேன்’ என்றும் கூறியதுடன், தன் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பிவைக்கக் கூறினார். நாமும் அனுப்பிவைத்தோம். இ-பாஸ் காபி நமக்கு வந்து சேர்ந்தது. அந்த பாஸில் மருத்துவ அவசரத்துக்காகச் செல்வதாகக் காரணம் கூறி இ-பாஸ் பெறப்பட்டிருந்தது.

நாம் அவரிடம் ஆதார் கார்டு விவரங்களை மட்டும்தான் கொடுத்திருந்தோம். மற்ற எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. ஆனால், `மருத்துவ அவசரம்’ என்று இ-பாஸ் பெறப்பட்டிருந்தது. இப்படி எத்தனை நபர்களுக்கு இந்த கும்பல் இ-பாஸ் பெற்றுக்கொடுத்திருக்கும்? பிணத்துடன் வந்த ஆம்புலன்ஸையே பாஸ் இல்லாததால், சோதனைச் சாவடியில் காக்கவைக்கிற சம்பவங்களெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்க, இன்னொருபுறம் இப்படியொரு கும்பல் செய்துகொண்டிருப்பது அநீதி அல்லவா?

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நோக்கமே, வைரஸ் தொற்றைக் குறைப்பதற்காகத்தான். ஆனால், இப்படியான கும்பல் காசுக்காக இ-பாஸ் கொடுத்து, ஊர்விட்டு ஊர் மக்களை அனுப்பி அரசு உத்தரவுகளை மீறி வருகிறது. ‘இனியும் தாமதப்படுத்தக் கூடாது’ என்று முடிவு செய்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் ஜூ.வி சார்பில் இதைப் புகாராகக் கொண்டு சென்றோம்.

இ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்

அவர், மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் சி.ஈஸ்வரமூர்த்தியிடம் விசாரிக்க உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் உதவி ஆணையர் வேல்முருகன், ஆய்வாளர் துரை, உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் தலைமைக் காவலர் ஜெகநாதன் ஆகிய ஐந்து பேர் அடங்கிய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சட்டவிரோத கும்பலை கையும் களவு மாகப் பிடிக்க ஜூனியர் விகடன் குழு காவல்துறையுடன் கைகோத்து களத்தில் இறங்கியது. நாம் சேகரித்துவைத்திருந்த அனைத்துத் தகவல் களையும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டோம். அந்தக் கும்பலை எப்படிப் பிடிப்பது என்று கலந்தாலோசனை செய்து திட்டம் தீட்டப்பட்டது.

இதற்கிடையில், நாம் தெரிவித்த நபர்களின் விவரங்களையும் அவர்களின் இருப்பிடங்களையும் சேகரித்தனர் காவல்துறையினர். நமக்கு இ-பாஸ் பெற்றுத் தந்த மனோஜை காலை 11 மணியளவில் வடபழனி முருகன் கோயில் அருகில் வரவழைத்து வளைத்துப் பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

11 மணிக்கு முன்பாகவே எல்லாப் பக்கமும் மஃப்டியில் போலீஸார் வந்து நின்றனர். சரியாக 11 மணிக்கு மனோஜ் அங்கு வர, தயாராக இருந்த காவலர்கள் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரை காவல் ஆணையர் அலுவலகம் அழைத்துச் சென்று விசாரணை தொடரப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், தனக்கு வினோத் என்பவர் இ-பாஸ் எடுத்துத் தருவதாகக் கூறியுள்ளார். அடுத்தடுத்த விசாரணையில் கார் ஓட்டுநர் தேவேந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் உதயகுமார் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் குமரன், அம்மா மாளிகையில் இ-பாஸ் வழங்கும் பணியைச் செய்துவந்திருக்கிறார். இந்த ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களின் மொபைல்போன் மற்றும் வாட்ஸ்அப்பில் ஆய்வு மேற்கொண்ட காவலர் களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய பெரும் நெட்வொர்க் செயல்பட்டிருக்கிறது. டிராவல்ஸ் நடத்துபவர் வாட்ஸ்அப்பில் ஒரு குழு ஆரம்பிப்பார். அதில் டிரைவர், இ பாஸ் பெற்றுத் தர உதவும் ஏஜென்ட் ஆகியோரை ஒருங்கிணைப்பார். பயணி பற்றிய விவரங்களை அதில் பகிர்வார்கள். வாட்ஸ்அப்பில் சாதாரணமாகப் பயண விவரங்கள், பாஸ் பெறப்பட்டதா என்பது பற்றி மட்டும் பேசப்படும். அதைத் தாண்டி இ-பாஸ் பெறுவதில் நடக்கும் ரகசியங்களை, போலி ஆவணம் குறித்த விவரங்களை டெலிகிராம் செயலியில் பேசிக் கொள்வார்கள். டெலிகிராம் செயலியில் ‘சீக்ரெட் சாட்’ என்றொரு ஆப்ஷனில், தகவல்கள் எதிரிலிருப் பவர் படித்த உடனே அழிந்துவிடும் வசதி இருக்கிறது என்பதால் இந்தத் திட்டம். ஒருவேளை சோதனைச் சாவடிகளில் மாட்டி விசாரணை தீவிரமானால் டிரைவர் அந்த வாட்ஸ்அப் குழுவைக் காண்பிப்பார். எல்லாம் நார்மலாக நடந்ததுபோல இருக்கும். நம்மிடம் பேசிய தாம்பரம் கோபியிடம் இது போன்ற பல குழுக்களின் விவரங்கள் உள்ளன. அவரது செல்ஃபோன் முகவரியில் அவர் இப்போது இல்லை என்பதால், அவரைத் தேடும் பணிகளைக் காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இந்தத் தகவல்களைக்கொண்டு விசாரணையை முடக்கிவிட்டுள்ளது காவல்துறை. இந்தக் குற்றத்தில் மாவட்டம்தோறும் பல உயர்மட்ட அரசு அதிகாரிகள் சிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறது காவல்துறை.

சமூக அக்கறையோடு ஜூனியர் விகடன் முன்னெடுத்த செயலில் முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. வாசகர்களின் ஆதரவோடு, இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கும்வரை குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஜூ.வி-யின் குரல்.

பிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா? அடுத்த இதழில்...

ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்!

ஜூ.வி டீம் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடத்தி போலீஸ் உதவியுடன் இந்தக் கும்பலை வளைத்தது குறித்த முதற்கட்டத் தகவல்களை, விகடன் டாட்காமில் ‘இ பாஸ்: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்: சிக்கிய போலி இ-பாஸ் கும்பல்’ என்ற தலைப்பில் கட்டுரையாகவும் rb.gy/znphkp விகடன் வெப் டிவியில் ‘கையும் களவுமாக மாட்டிய E-PASS ‘கொள்ளை’யர்கள்..’ என்ற தலைப்பில் வீடியோவாகவும் https://rb.gy/ymhiwz வெளியிட்டிருந்தோம்.

கட்டுரை வெளியானதும், தலைமைச் செயலகம், டி.ஜி.பி அலுவலகங்களில் பரபரப்பு அலை பரவியது. முதல்வர் அலுவலக முக்கிய அதிகாரிகள் அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட விஷயங்கள் பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். தற்போது பிடிபட்டவர்கள் ஆன்லைனில் தாக்கல் செய்த இறப்புச் சான்றிதழ்கள், உடல்நிலை தொடர்பான சான்றிதழ்கள், திருமண பத்திரிகைகள் இவையெல்லாம் உண்மையா என்று சரிபார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, புரோக்கர்களாகச் செயல்பட்டவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது.

சென்னையில் ஒரு மருத்துவர் என்ன ஏது என்று விசாரிக்காமலேயே சான்றிதழ்களை வாரி வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவையெல்லாம் முதல்வர் கவனத்துக்குப் போக, தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸாரிடம் கொடுத்து, அடுத்தகட்ட விசாணையை நடத்தலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் முதல்வர்.

இ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்

இன்னும் சில மோசடி கும்பல்கள்!

தங்களிடம் சிக்கிய ஒரு மோசடிக் கும்பலைப் பற்றி உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘திருவள்ளூர் நபர் ஒருவர் இ-பாஸ் வாங்கித் தருவதாக சமூக வலைதளத்தில் பதியவிட்டிருந்தார். திருவள்ளூர் எஸ்.பி-யிடம் சொல்லி, அந்த நபரைப் பிடித்தார்கள். அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரும் சிக்கினார்கள்.

இன்னொரு மோசடிக் கும்பல் பற்றி தென் மாவட்ட கலெக்டர் ஒருவர் சொன்னார். சுமார் 500 பேர் இ-பாஸ் இல்லாமலேயே மாவட்டத்துக்குள் வந்துவிட்டார்களாம். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவலைச் சொல்லியிருக்கின்றனர். செங்கல்பட்டு அருகேயுள்ள செக்போஸ்ட் வரை சென்னைப் பயணிகளை வேனில் அழைத்துப்போகிறார்கள். செக்போஸ்ட்டுடன் அந்த வேன் திரும்பிவிடும். பயணிகள் நடந்தே செக்போஸ்டைக் கடப்பார்கள். அங்கே தயாராக இன்னொரு வேன் நிற்கும். அதில் ஏறி, அவர்கள் போக வேண்டிய ஊருக்கு அழைத்துச் செல்கிறார்களாம். இப்படியொரு மோசடிக் கும்பல் செயல்படுகிறது. மோசடிப் பேர்வழிகள் அனைவரையும் விரைவில் கைது செய்வோம்’’ என்றார்.

இப்படித்தான் இயங்குகிறது ‘இ.சி.எஃப் நெட்வொர்க்’!

இது, குறைந்தபட்சம் 2,500 நபர்கள் அடங்கிய நெட்வொர்க். இதில் பெரும்பாலானோர் கார் ஓட்டுநர்களே. இவர்களைத் தவிர, இடைத்தரகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் இதில் அடக்கம். இ-பாஸ் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குரியவர்கள், இ-பாஸ் கேட்டு அரசு அலுவலகங்களுக்குப் படையெடுப்பவர்கள், `எப்படியாவது ஊர் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்’ என்று வாடகைக்குக் கார் கேட்டு வருபவர்களெல்லாம் இவர்களுடைய இலக்கு.

ஒவ்வொருவரின் அணுகுமுறையை வைத்தே அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப கார் வாடகையோடு 2,000 முதல் 6,000 ரூபாய் வரை இ-பாஸுக்குச் சேர்த்துப் பேசிவிடுகிறார்கள். ஊருக்குச் செல்பவர்கள் சொல்லும் காரணங்களைப் பொறுத்து அதிகபட்சமாக 15 ஆயிரம்கூட வசூலித்துள்ளனர்.

பயணிகளின் ஆதார் கார்டு விவரங்களை வாங்கிக்கொள்ளும் ஓட்டுநர்கள், இடைத்தரகர்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள். பயணியின் பெயரில் அவர்கள் இ-பாஸ் விண்ணப்பிக்கிறார்கள். இடைத்தரகர்களோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்பிலிருக்கும் இ-பாஸ் வழங்கும் அலுவலகத்தின் அதிகாரிகள், அந்த விண்ணப்ப எண்ணைச் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்தில் தங்களின் தொடர்பிலுள்ள அரசு அதிகாரிக்கு அனுப்பிவைப்பார்கள். உடனே இ-பாஸ் கிடைத்துவிடும். ஓட்டுநர், இடைத்தரகர் மற்றும் அரசு அதிகாரி என்று அனைவருமே பணத்தைப் பங்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் மாவட்ட உயரதிகாரிகள்வரை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- நமது நிருபர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு