Published:Updated:

`க்ளைமேட் எமர்ஜென்சி!' - 11,000-த்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எச்சரிக்க என்ன காரணம்?

பூமி
பூமி

காலநிலை மாற்றம் தொடர்பாக 11,000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

`பூமி, ஒரு காலநிலை மாற்றம் குறித்த அவசரநிலையை எதிர்கொண்டிருக்கிறது' - என்று எச்சரிக்கை மணியடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் ஒரேகான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ரிப்பிள் மற்றும் கிறிஸ்டோபர் வோல்ஃப் தலைமையில் 11,000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளைக்கொண்ட ஒரு சர்வதேச கூட்டமைப்பு காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கையுடன் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக மனித இனத்தின் செயல்பாடுகள் பூமியை எவ்வாறு பாதித்தன என்பது பற்றிய புதிய ஆய்வு, தீங்கு விளைவிக்கும் பசுமை இல்ல வாயு உமிழ்வு (harmful greenhouse gas emissions) வேகமாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறது. மேலும், இதுபோன்ற நெருக்கடியைச் சமாளிப்பதில் அரசுகள் போதுமான முன்னேற்றம் அடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், ``எந்தவொரு பேரழிவு அச்சுறுத்தலிருந்தும் மனிதகுலத்தை தெளிவாக எச்சரிக்க ஒரு நிர்பந்தம் உள்ளது" என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

`க்ளைமேட் எமர்ஜென்சி!' -  11,000-த்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எச்சரிக்க என்ன காரணம்?

அரசாங்கங்கள், வணிகம் மற்றும் பொதுமக்கள் எடுக்கவேண்டிய புவியின் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது உட்பட முக்கியமான 6 முக்கிய உடனடி நடவடிக்கைகளை அடையாளம் காட்டியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 80 மில்லியனாக அதிகரித்துவரும் உலக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் குடும்பக்கட்டுப்பாடு திட்டமிடல் சேவைகள் மற்றும் முழு பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வில் முக்கிய பங்கு வகித்தவர்களுள் ஒருவரான டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையின் தலைவர் ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் கூறுகையில், ``மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தும் என பெரும்பாலான ஆய்வாளர்கள் அதுகுறித்து பேசுவதிலிருந்து விலகிவிடுகிறார்கள். ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது'' என்கிறார். வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்தெடுப்பதற்கான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் அதே வேளையில் நாடுகள் புதைபடிவ எரிபொருள்களை நம்பியிருப்பதில் இருந்து விலகி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தும் என பெரும்பாலான ஆய்வாளர்கள் அதுகுறித்து பேசுவதிலிருந்து விலகிவிடுகிறார்கள்
ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக்

`புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களையும் அரசாங்கங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். பணக்கார நாடுகள் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கு ஏழை நாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். கூடுதலாக, குளிர்பதன மற்றும் ஏரோசோல்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட சேர்மங்களான மீத்தேன் மற்றும் ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்கள் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை உலக நாடுகள் கணிசமாகக் குறைக்க வேண்டும்'' என்றும் ஆய்வு வலியுறுத்துகிறது. இந்தக் குறுகிய கால மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் பூமியின் குறுகிய கால வெப்பமயமாதல் போக்கை 50 சதவிகிதத்துக்கும் மேலாக குறைக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

`உங்க நாடுகளிலேயே பிரச்னை இருக்கு; எனக்கு விருது வேண்டாம்!'- சர்வதேச விருதை உதறிய கிரேட்டா தன்பர்க்

புதைபடிவ எரிபொருள் நுகர்வு, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு, காடுகள் அழிப்பு விகிதங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் கிரகத்தை நமது பூமியை எவ்வாறு பாதித்தன என்பதைக் காட்டும் 40 ஆண்டுக்கால தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலான விஞ்ஞானிகள் கணித்ததைவிட காலநிலை மாற்றம் வேகமாக தீவிரமடைந்து வருவதாகவும், `இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மனிதகுலத்தின் தலைவிதியையும் அச்சுறுத்துகிறது' என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

மக்கள் பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவை உண்ண வேண்டும். இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு கால்நடைகளிடமிருந்து வரும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தையும் குறைக்கும். மேலும், பொருளாதாரம் கார்பன் இல்லாத முன்முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைத் தக்கவைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கின்றனர்.

இந்த ஆய்வில் கலந்துகொள்ளத் தமக்கு உந்துதலாக இருந்தவர்கள் காலநிலை மாறுபாட்டுக்கு எதிராக சமீபத்திய போராட்டத்தை முன்னெடுத்த இளம் வயதினர் என்கிறார் ஈஸ்டர்ப்ரூக். அவர் கூறுகையில், `` அவர்கள் அறிவியலைப் புரிந்துகொள்ளவில்லை என இந்தக் குழந்தைகளை விமர்சிக்க நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கும் ஏராளமான இளைஞர்கள், அறிவியலை நம்மில் எவரையும்விட நன்றாக புரிந்துகொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது" என்று அவர் கூறினார்.

பின் செல்ல