Published:Updated:

என்ன நடக்கிறது இலங்கையில்?

என்ன நடக்கிறது இலங்கையில்?
பிரீமியம் ஸ்டோரி
என்ன நடக்கிறது இலங்கையில்?

பொருளாதார நெருக்கடி... மின்வெட்டு... விலைவாசி உயர்வு... மக்கள் கிளர்ச்சி...

என்ன நடக்கிறது இலங்கையில்?

பொருளாதார நெருக்கடி... மின்வெட்டு... விலைவாசி உயர்வு... மக்கள் கிளர்ச்சி...

Published:Updated:
என்ன நடக்கிறது இலங்கையில்?
பிரீமியம் ஸ்டோரி
என்ன நடக்கிறது இலங்கையில்?

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் பங்க்குகள், பால் நிலையங்கள், மளிகைக் கடைகள் என அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்காக மிக நீண்ட வரிசையில் நின்ற இலங்கை மக்கள், தற்போது வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். கடும் பொருளாதாரச் சரிவால் அங்கு மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது. கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள் இலங்கை மக்கள். என்னதான் நடக்கிறது இலங்கையில்?

சீனாவின் கடன் வலை!

2009-ம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே, தனது சொந்தத் தொகுதியான அம்பாந்தோட்டையில் துறைமுகமும், விமான நிலையமும் அமைக்க அடிக்கல் நாட்டினார். கொழும்பிலுள்ள துறைமுகம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் நிலையில் புதிதாகத் துறைமுகம் அமைத்தால், நாட்டுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதனால் இலங்கையின் இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடனுதவி வழங்க மறுத்தன. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு துறைமுகம் அமைப்பதற்கான மொத்தச் செலவில், 85 சதவிகிதத்தைக் கடனாக வழங்கியது சீனா. அன்று சீனா விரித்த கடன் வலையில் சிக்கிய இலங்கையால் இன்றுவரை மீள முடியவில்லை. திருப்பியளிக்க முடியாத அளவுக்கான கடனை வழங்கி, இலங்கையில் அதிகாரம் செலுத்த வேண்டுமென்பதுதான் சீனாவின் திட்டம். ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், இலங்கை மட்டுமல்லாமல் பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிக அளவில் கடனுதவி அளித்திருக்கிறது சீனா.

என்ன நடக்கிறது இலங்கையில்?

2009 தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளைச் சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றது இலங்கை. விளைவு 2020-ம் ஆண்டில், இலங்கை அரசுக்குக் கிடைத்த மொத்த வருவாயில் 80 சதவிகிதம், பெற்ற கடனுக்கு வட்டி செலுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சீனாவிடம் பெற்ற அதீத கடன் தொகைக்கு வட்டி செலுத்தவே இலங்கை திணறியதால், அந்நாட்டில் தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது சீனா.

பெருந்தொற்றால் ஏற்பட்ட பெருந்துயரம்!

இதற்கிடையில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஈஸ்டர் பெருநாளன்று இலங்கையிலுள்ள முக்கிய தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இவற்றில், 45 வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைய, அரசு கஜானாவின் வருவாயும் குறையத் தொடங்கியது. 2020-ம் ஆண்டு தொடக்கத்தில், உலகம் முழுக்கப் பரவிய கொரோனா பெருந்தொற்றால், இலங்கையின் சுற்றுலாத்துறை முழுவதுமாக முடங்கிப்போனது. வருவாய்க்குச் சுற்றுலாத்துறையையே பெரிதும் நம்பியிருக்கும் இலங்கைக்கு, இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

விலைவாசி உயர்வு... மக்கள் அவதி!

அதீத கடன் சுமை, வருவாய் இழப்புகளால் இலங்கையில் வேலைவாய்ப்பின்மையும் பணவீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்தன. நிதி நெருக்கடி ஏற்பட்டு, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதல பாதாளத்துக்குச் சென்றது. இதனால், வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படவே, இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உப விளைவாக, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்வைச் சந்தித்தது. அங்கு, ஒரு கிலோ அரிசியின் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் 448-ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு லிட்டர் பாலின் விலை இலங்கை ரூபாயில் 263-க்கு விற்கப்படுகிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பும் 265 ரூபாயாகக் குறைந்துள்ளது.

என்ன நடக்கிறது இலங்கையில்?

காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இலங்கையின் முக்கிய நிறுவனங்களான லிட்ரோ காஸ், லாஃப்ஸ் காஸ் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. உணவுப் பொருள்கள், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் 90 சதவிகித உணவகங்களும் அடைக்கப்பட்டு விட்டன. வறுமைக்கோட்டுக்குக் கீழிருக்கும் மக்கள் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு நாளொன்றுக்குச் சுமார் ஐந்து மணி நேரம் மின்வெட்டும் நடைமுறையிலிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் அமலிலுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் மக்கள். ஆனால், பாதி வரிசை வரும்போதே பொருள்கள் தீர்ந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. நிதி நெருக்கடியால் இலங்கையில் காகிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. காகிதங்களை இறக்குமதி செய்ய, போதிய அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லாததால், 45 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதவிருந்த தேர்வுகளைக் காலவரையின்றி ஒத்திவைத்திருக்கிறது கல்வித்துறை அமைச்சகம்.

வெடித்த மக்கள் கிளர்ச்சி!

மார்ச் 15 அன்று, இலங்கையின் அதிபர் மாளிகை முன்பாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி, அவர்களது புகைப்படங்களையும் எரித்துப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, ``தற்போதைய இலங்கை அரசு, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. உங்களால் முடியவில்லையென்றால், எங்களிடம் நாட்டை ஒப்படை யுங்கள். 2024-ல் நடக்கவேண்டிய அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துங்கள்’’ என்றவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி, ``இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறீர்கள். மேலும் அவதிப்பட வேண்டுமா? ஆட்சிக் கவிழ்ப்புக்கான இயக்கம் இப்போது தொடங்கிவிட்டது!’’ என்றார் ஆவேசமாக.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, இலங்கையின் முக்கிய நகரங்களில் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கினர். அரசுக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் பலரும், ``எதிர்க்கட்சி உட்பட எந்த அரசியல் கட்சிமீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசியல்வாதிகள்தாம் இந்த நாட்டை நாசமாக்கிவிட்டனர். நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லாதது வருத்தமளிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. ஏழை மக்கள் வீதிக்கு வர சில வாரங்களே இருக்கின்றன’’ என்று ஊடகங்களில் பேசியிருக்கிறார்கள். ட்விட்டரில், #GoHomeGotabaya என்ற ஹேஷ்டேக்கும் இலங்கையில் டிரெண்டாகி வருகிறது.

சமீபத்தில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது அதானி குழுமம். இதற்கு இலங்கையின் எதிர்க்கட்சயினர், ``புறவாசல் வழியாக அதானி குழுமம் இலங்கைக்குள் நுழைவது, நம் நாட்டின் மின் உற்பத்தி முறையைச் சீர்குலைத்துவிடும். இந்தியப் பிரதமர் மோடி நிதியுதவி செய்வதால், இலங்கையின் வளங்களை அவரின் நண்பர் அதானிக்கு விற்க முடியாது’’ என்று ராஜபக்சே அரசுக்குக் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

என்ன நடக்கிறது இலங்கையில்?

ஈழ ஆதரவாளர்கள் காட்டம்!

இலங்கையின் நிலை குறித்து தமிழீழ ஆதரவாளர்கள் சிலர், ``இலங்கையின் முன்னாள் அதிபரும், இந்நாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே, `விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம். இனி இலங்கை வளர்ச்சிப்பாதையில் மட்டுமே செல்லும்’ என்றார். ஆனால் இன்று, சிங்கள பெளத்த பேரினவாத அரசியல்வாதிகள் இலங்கையை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டனர். குறிப்பாக ராஜபக்சே குடும்பம், இலங்கையைத் திவாலாகும் நிலைக்குக் கொண்டுசென்றுவிட்டது’’ என்று சமூக வலைதளங்களில் கொந்தளிக் கிறார்கள். சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ``பிரபாகரனுக்கு வடக்கு, கிழக்குப் பகுதிகளைக் கொடுத் திருந்தால், அவர்களிடமிருந்து கடன் பெற்றாவது பிழைத்திருக்கலாம்’’ என்று பேசும் காணொலியையும் வைரலாக்கிவருகின்றனர்.

என்ன செய்யப்போகிறது இலங்கை?

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சில நாடுகளிடம் மீண்டும் கடனுதவி பெற்றுவருகிறது இலங்கை. இந்தியா, இலங்கைக்குக் கடந்த மாதம் 3,750 கோடி ரூபாயும், இந்த மாதம் 7,500 கோடி ரூபாயும் கடனுதவி வழங்கியிருக்கிறது. இதற்காக, பிரதமர் மோடியைச் சந்தித்து நன்றி தெரிவிக்க, கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே.

``ஏற்கெனவே கடனில் சிக்கித்தவிக்கும் இலங்கை, தற்போது மேலும் கடன் பெறுவதன் மூலம் திவாலாகும் நிலையிலிருந்து வேண்டுமானால் தப்பிக்கலாம். தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாப்பயணிகளை அதிகரித்தல் உள்ளிட்டவை மூலம் வருவாயை அதிகரித்தால்கூட, பெற்றிருக்கும் கடன் தொகைக்கு வட்டி செலுத்தவே சரியாக இருக்கும். எனவே இலங்கை, மற்ற நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி அந்நியச் செலாவணியை அதிகரித்தால் மட்டுமே நிதி நெருக்கடியிலிருந்து ஓரளவுக்காவது மீள முடியும்’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism