Published:Updated:

சரிந்தது பொருளாதாரம்... வெடித்தது போராட்டம்!

பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

அச்சத்தில் உலகநாடுகள்

சரிந்தது பொருளாதாரம்... வெடித்தது போராட்டம்!

அச்சத்தில் உலகநாடுகள்

Published:Updated:
பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

ஈராக், சூடான், ரஷ்யா, ஹாங்காங், எகிப்து, உகாண்டா, இந்தோனேஷியா, உக்ரைன், பெரு, கொலம்பியா, ஜிம்பாப்வே, பிரான்ஸ், துருக்கி, பிரேசில், அல்ஜீரியா முதலான நாடுகளில் அமைதியாகவும் வன்முறையாகவும் அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்திருக்கின்றனர் பொதுமக்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் செழிப்பான நாடாகக் கருதப்படுகிறது சிலி. உலகச்சந்தையில் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை காரணமாகவும், நாட்டின் பணமதிப்பு குறைந்ததன் காரணமாகவும், மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தியது சிலி அரசு. மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்திவந்த மாணவர்கள், போராடத் தொடங்கினர். அமைதியாகத் தொடங்கப்பட்டப் போராட்டம் வன்முறையாக மாறியது. சிலி தலைநகர் சாண்டியாகோவின் 164 மெட்ரோ ரயில் நிலையங்களும் மொத்தமாக அடித்து நொறுக்கப்பட்டன; ரயில்கள் கொளுத்தப் பட்டன.

சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா, உடனே எமெர்ஜென்சி அமல்படுத்தினார். மேலும், ‘நாம் போரில் இருக்கிறோம். நம் எதிரிகள் சக்திவாய்ந்தவர்களாக இருப்பதுடன், எல்லையற்ற வன்முறையை முன்னெடுப்பவர் களாகவும் இருக்கின்றனர்’ என்று போராட்டக் காரர்களைக் குறிப்பிட்டுள்ளார். வீதிகளில் முகாமிட்டுள்ள ராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர் சிலி மக்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மற்றொரு லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரிலும் எரிபொருள் விலை உயர்வு விவகாரம் லட்சக்கணக்கான மக்களைப் போராடச் செய்திருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான மானியங்களைக் குறைத்து, சர்வதேச நிதி அமைப்புகளிடம் பெற்ற கடனை அடைக்கத் திட்டமிட்டது ஈக்வடார் அரசு. மக்கள் போராட்டங்களின் தீவிரத்தை உணர்ந்த அரசு, உடனடியாக தனது தலைநகரத்தை குய்டோவிலிருந்து கயாக்வில் நகரத்துக்கு மாற்றியுள்ளது. போராட்டத்தை ஒடுக்க, வீதிகளில் ராணுவம் அணிவகுத்துள்ளது.

இன்னொரு பக்கம், அமைதியான வழியில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக் கின்றார்கள் லெபனான் மக்கள். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான், சர்வதேச நாடுகள் தன்மீது விதித்த கடன் சுமையை அந்நாட்டு மக்கள்மீது இறக்கிவைத்திருக்கிறது. ‘வாட்ஸ்அப்’ முதலான ஆப்களைப் பயன்படுத்த வரிவிதித்து அரசு உத்தரவிட்டது. லெபனான் கொடியுடனும் மதத்தலைவர்களுடனும் அமர்ந்து அமைதியாகப் போராடிவருகின்றனர் லெபனான் மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி, ‘பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக அரசியல்வாதிகளின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்படும்’ என அறிவித்தும் கூட்டம் கலையவில்லை. ‘அதிபர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் பதவி விலக வேண்டும். மக்கள் பணத்தை ஊழல் செய்து, பணக்காரர்களாக வாழும் அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று போராட்டத்தைத் தொடர்கின்றனர் லெபனான் மக்கள்.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியிலும், மக்கள் போராடிவருகின்றனர். ஏழைநாடான ஹைதி, பெட்ரோல்... டீசல் முதலான எரிபொருள்களுக்காக வெனிசுலாவிடம் நிதியுதவியைப் பெற்றுவந்தது. எரிபொருள்மீதான வரியை ஹைதி அரசு அதிகரித்து வருவதை, கடந்த சில மாதங்களாகவே எதிர்த்து வந்துள்ளனர் ஹைதி மக்கள். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போராட்டங்களில், அரசுப் படைகளுக்கும் மக்களுக்கும் நடந்த மோதல்களில் 41 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். இதை கண்டித்து அக்டோபர் 4-ம் தேதி, ஹைதி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர். ஹைதி அதிபர் ஜொவெனெல் மாய்ஸ், அமெரிக்காவின் ஆதரவு பெற்றவர். அதிபர் மாய்ஸ் பதவி விலக வேண்டும் என மக்கள் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்க, ஹைதியின் கத்தோலிக்கத் திருச்சபையும் மக்கள் போராட்டத்தை ஆதரித்து களம் இறங்கியுள்ளது.

இவை அனைத்தும், கடந்த இரண்டு வாரங்களுக்குள் நிகழ்ந்தவை. இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் பொதுவான காரணம், ‘பொருளாதார மந்தநிலை’. சிலியில் மெட்ரோ கட்டண உயர்வு, ஈக்வடாரில் பெட்ரோல் விலை உயர்வு, லெபனானின் ‘வாட்ஸ்அப்’ வரி, ஹைதியின் பெட்ரோல் விலை உயர்வு ஆகிய பிரச்னைகள், போராட்டம் வெடிப்பதற்கான காரணங்கள் மட்டுமே. தொடர்ந்து நிகழும் விலைவாசி உயர்வு, மானியங்கள் வெட்டு, ஊழல் அமைச்சர்கள், மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதிக்குறைப்பு, கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கான வரிவிலக்கு முதலியவை போராட்டத்தை நீடிக்கச் செய்யும் காரணிகள்.

பொருளாதாரம்
பொருளாதாரம்

தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளில் நம்பிக்கை இழந்துள்ள சாமானியர்களே போராட்டங்களை முன்னெடுத்துள் ளனர். சர்வதேச நிதி நிறுவனங்கள், கடந்த 30 ஆண்டுகளாக வகுத்துள்ள கொள்கைகளான மானியங்கள் ரத்து, இலவசக் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை ரத்து ஆகியவை உலக நாடுகளில் சாமானியர்களின் போராட்டங்களாக எதிரொலித்துள்ளன.

பொருளாதார மந்தநிலை உட்பட இந்தியாவிலும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றனதான். ஆனால் இங்கு, மேற்கண்ட நாடுகளைப்போல் பரவலான போராட்டங்கள் வெடிக்கவில்லை. ஒருவேளை இந்தியர்களின் ‘அளப்பரிய’ சகிப்புத்தன்மை அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அது எத்தனை காலம் நீடிக்கும் எனச் சொல்வதற்கில்லை. விழித்துக்கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மத்திய அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism