85 கோடி ஹவாலா முதலீடு.. அமெரிக்க டாலர்கள்.. ஃபெமா சட்டம்.. அடுத்தடுத்த சிக்கலில் `கல்கி பகவான்'!

கல்கி பகவான் அவரது குடும்பத்தினர் மீது மத்திய அமலாக்கத்துறை ஃபெமா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் இந்த ஆசிரமத்தை நிறுவி ஆன்மிகப் பணிகளைச் செய்து வருகிறார். வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து கல்கி பகவான் நடத்திவந்த நிறுவனங்களில் கடந்த 16-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

6 நாள்களாக நடந்த இந்தச் சோதனையில் கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா நடத்திவந்த வையிட் லோட்டஸ் நிறுவனத்திலிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.93 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
26 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி மதிப்புள்ள 1,271 கேரட் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு கரன்சிகள் 2.5 மில்லியன் டாலர்கள் கைப்பற்றப்பட்டன. ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சில ஆவணங்களும் சிக்கின.

வெளிநாடுகளில் செய்த முதலீடு வருமான வரி சோதனையில் சிக்கிய அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட காரணங்களால் ‘ஃபெமா’ எனப்படும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கல்கி பகவான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்கி பகவான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.