Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!

கலைகள் கற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
கலைகள் கற்போம்!

கல்வியாளர் ரமேஷ் பிரபா

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!

கல்வியாளர் ரமேஷ் பிரபா

Published:Updated:
கலைகள் கற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
கலைகள் கற்போம்!

பாடம் தவிர்த்த மற்ற தனித் திறமைகளில் எப்போதுமே நாம் ஆர்வம் காட்டுவோம். பேச்சு, ஆடல், பாடல், ஓவியம் வரைதல் என எத்தனையோ திறமைகள் அதில் அடங்கும். பல சமயங்களில் இந்தத் தனித் திறமைகள் நாம் தேர்ந்தெடுக்கும் முழுநேரப் பட்டப்படிப்புக்குச் சம்பந்தமில்லாமலேயே போய்விடுவதுண்டு. ஆனால் அந்தத் தனித்திறமையே நமது முழுநேரப் படிப்பாக மாறினால் அதைவிட சந்தோஷம் இருக்க முடியாது. எப்போதுமே, படிப்பை முடித்ததும் என்ன வேலைக்குப் போவது என்கிற சிந்தனையே பலருக்கும் இருப்பதால் ஓவியம், இசை, நடனம் போன்றவற்றை முழுநேரமாக எடுத்துக்கொள்கிற தைரியம் நமக்கு வருவதில்லை. ஆனால், இன்று உலக அளவில் இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஓவியம், இசை, நடனம் ஆகியவற்றை முறையாகப் படித்து, அவை சார்ந்த பணிகளில் வெற்றிகரமாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சுயதொழில் செய்து இந்தத் துறைகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையும் இன்று ஏராளம். தவிர, திரைப்படம் போன்ற வெளிச்சம் பரப்பும் துறையில் எண்ணற்ற முன்னணிக் கலைஞர்கள் இதுபோன்ற கல்லூரிகளில் படித்து வந்தவர்களாக இருப்பதும் இன்றைய மாணவர்களுக்கு ஊக்கம் தரும் செய்தியாகும்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!
நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!

ஓவியம் & சிற்பம்: கலையார்வம் கொண்ட மாணவர்களுக்கான முக்கியமான ஒரு படிப்புதான் ஓவியக்கலை சார்ந்த Fine Arts எனப்படும் கவின்கலை பட்டப்படிப்பு. ஓவியக்கல்லூரி என்று அனைவராலும் அறியப்படும் Government College of Fine Arts சென்னை எழும்பூரில் உள்ளது. இது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பழைமைவாய்ந்த கல்லூரி. இதேபோன்ற இன்னொரு பழைமைவாய்ந்த அரசு ஓவியக் கல்லூரி கும்ப கோணத்தில் உள்ளது. புகழ்பெற்ற இந்த இரண்டு கல்லூரிகளிலுமே ‘பேச்சிலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ எனப்படும் நான்கு வருட BFA பட்டப்படிப்பு சொல்லித் தரப்படுகிறது. சென்னைக் கல்லூரியில் சுடுமண் ஆலையக வடிவமைப்பு (Industrial Design in Ceramic), துகிலியல் ஆலையக வடிவமைப்பு (Industrial Design in Textiles), காட்சித்தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design), வண்ணக்கலை (Painting), சிற்பக்கலை (Sculpture), பதிப்போவியம் (Print Making) என 6 வெவ்வேறு பிரிவுகளிலும், கும்ப கோணத்தில் காட்சித் தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design), வண்ணக்கலை (Painting), சிற்பக்கலை (Sculpture) ஆகிய 3 பிரிவுகளிலும் பட்டப்படிப்புகள் உள்ளன.

கலைத் துறைக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களும் முதல் வருடத்தில் கற்றுத் தரப்படும். இரண்டாம் வருடத்திலிருந்து அவரவர் தங்கள் துறை சார்ந்த விஷயங்களைப் படிப்பார்கள். இந்தப் படிப்பைப் பொறுத்த வரையிலும் வகுப்புகளில் நடத்தப்படும் தியரி பாடங்களை விட அதிக அளவில் பிராக்டிகல்ஸ் எனப்படும் செய்முறை அனுபவம் நிறையவே உண்டு என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

சொல்லப்போனால் இந்த நான்கு வருட படிப்பின் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது 20 நாள்களாவது கல்விச் சுற்றுலாவாக இந்திய அளவில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கலை நுணுக்கங்களையும் நேரடியாகக் கற்றுத் தெரிந்துகொள்கிற வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாகச் செல்வதற்கான பயணச் செலவையும் கல்லூரியே ஏற்றுக்கொள்கிறது. இந்தக் கல்லூரிகளிலுள்ள பல்வேறு பாடப்பிரிவுகளும் எவை சார்ந்தவை என்பது பற்றிப் பார்ப்போம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!
நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!

சுடுமண் ஆலையக வடிவமைப்பு (Industrial Design in Ceramic): செராமிக் எனப்படும் பீங்கான் பொருள்கள் சார்ந்த வடிவமைப்பு மற்றும் கலை நுணுக்கங்களைக் கற்றுத் தருவதுதான் இந்தப் படிப்பு. பீங்கான் பொருள்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருள்கள், தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் போன்றவற்றையும், இந்தப் பொருட்களை மக்கள் ரசனைக்கு ஏற்றவாறு எப்படி கலைநயத்தோடு உருவாக்கலாம் என்பதையும் சேர்த்தே இங்கு சொல்லித் தருவார்கள். நாம் பயன்படுத்தும் சாப்பாட்டு தட்டு, காபி கப் தொடங்கி பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் டைல்ஸ், வாஷ் பேசின் என எல்லாவற்றையும் தயாரிக்கும் நிறுவனங்களில் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு.

துகிலியல் ஆலையக வடிவமைப்பு

(Industrial Design in Textile): நெசவுத்துறையின் அடிப்படையில் தொடங்கி இன்றைய முன்னேற்றம் வரையிலான விஷயங்கள் சொல்லித் தரப்படுவதோடு, டையிங், டெக்ஸ்டைல் டிசைன் போன்ற ஆடைகள் சார்ந்த கலை நுணுக் கங்களும் சொல்லித் தரப்படுகின்றன. இதை முடித்தவர்கள் மத்திய மாநில அரசுகளின் கீழ் உள்ள டெக்ஸ்டைல் துறைகளிலும் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற தனியார் டெக்ஸ்டைல் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பைப் பெறுவர்.

காட்சித் தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design): இன்று பல தனியார் கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டுள்ள விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பின் முன்னோடியாக நீண்ட காலத்திற்கு முன்பே இந்த இரண்டு அரசு கல்லூரிகளிலும் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுவிட்டது. வடிவமைப்பு, கிராபிக் டிசைன், ஆடியோ விஷுவல் கம்யூனிகேஷன் போன்றவை சொல்லித் தரப்படுவதால் பத்திரிகை மற்றும் விளம்பரத்துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதோடு, சினிமாத் துறையிலும் ஆர்ட் டைரக்டர் ஆக வாய்ப்புகள் நிறையவே உண்டு.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!
நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!

வண்ணக்கலை (Painting): பெரிதாக விளக்கத் தேவையில்லாத அளவுக்கு பார்த்த உடனே என்ன என்று தெரிகிற இந்தப் படிப்பில் நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவங்களில் தொடங்கி இன்றைய நவீன ஓவியங்கள் வரை அத்தனையும் அறிவியல் பூர்வமாகச் சொல்லித் தரப்படுகின்றன. இந்தப் படிப்பைப் பொறுத்தவரை வேலையைத் தாண்டி சுயதொழில் செய்து சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

சிற்பக்கலை (Sculpture): களிமண்ணில் தொடங்கி மெழுகு, பிளாஸ்டர், கல், மரம், பல்வேறு உலோகங்கள் என அனைத்தைப் பற்றிய தொழில்நுட்பங்களும், சிற்பக்கலைக் கோணத்தில் கலை நுணுக்கங்களோடு இந்தப் படிப்பில் சொல்லித்தரப்படுகின்றன. இங்கும் சுய தொழிலுக்கான வாய்ப்புகள் சற்றே அதிகம்.

பதிப்போவியம் (Print Making): அச்சு வடிவத்தின் பல்வேறு சிறப்பு முறைகளான, எட்சிங், என்கிரேவிங், செரிகிராபி போன்றவற்றை பிராக்டிகலாக செய்து காண்பிப்பது இந்தப் படிப்பின் சிறப்பு அம்சம். இங்கும் வேலையைத் தாண்டிய சுயதொழிலுக்கான வாய்ப்புகள் அதிகம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!
நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!
நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!

இந்த அனைத்துப் படிப்புகளுக்குமே சேர, நீங்கள் +2வில் எந்த குரூப் வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். உங்களுடைய ஓவிய, கலைத் திறமையைச் சோதிக்கக்கூடிய ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விளம்பரம் பிரபல தினசரிகளில் வெளியிடப்படும். இவையனைத்துமே அரசுக் கல்லூரிகள் என்பதால் கம்யூனிட்டி பிரிவிற்கேற்ப ஆண்டுக்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய்தான் கல்விக் கட்டணம் என்பது மிகப்பெரிய ஆறுதல். அதிலும்கூட லலித் கலா அகாடமி மற்றும் பல ஓவிய கவின்கலை அமைப்புகள் பணரீதியாகவும், கலைப் பொருள்களை இலவசமாகக் கொடுத்தும் மாணவர்களுக்கு உதவுகின்றன.

இந்த இரண்டு கல்லூரிகள் தவிர மாமல்லபுரத்தில் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கல்லூரி உள்ளது. இங்கு பாரம்பரிய கட்டடக்கலையில் பொறியியல் படிப்பும், பாரம்பரிய சிற்பக்கலை, பாரம்பரிய ஓவியம் ஆகியவற்றில் B.F.A பட்டப்படிப்பும் சொல்லித்தரப்படுகின்றன. சென்னை, கும்பகோணம், மாமல்லபுரம் ஆகிய மூன்று கல்லூரிகளுமே சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன.

கவின்கலை சார்ந்த B.F.A படிப்பு சமீப ஆண்டுகளில் பல தனியார் கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டிருப்பதால் அவற்றின் தரத்தை ஆராய்ந்து பார்த்து அங்கும்கூட நீங்கள் தாராளமாகச் சேரலாம்.

இசை & நடனம்: ஓவியம் போலவே இசைத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கான முழுநேர பி.ஏ பட்டப்படிப்பு தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் உள்ள நான்கு இசைக் கல்லூரிகளில் உள்ளது. வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகியவற்றில் பி.ஏ பட்டப்படிப்பு; வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், நாகஸ்வரம், தவில், பரத நாட்டியம், நாட்டுப்புறக் கலைமணி, புல்லாங்குழல், நாட்டுப்புறக்கலைகள் ஆகியவற்றில் 3 வருட டிப்ளோமா படிப்பு ஆகியவை உள்ளன. இதில் கல்லூரிக்கு ஏற்றவாறு பாடப்பிரிவுகள் தனித்தனியாக வழங்கப்படுகின்றன. தவிர இந்தக் கல்லூரிகளில் ஒரு வருட டிப்ளோமா மற்றும் இரண்டு வருட சர்ட்டிபிகேட் கோர்ஸ்களும் பல்வேறு துறைகளில் வழங்கப்படுகின்றன. இந்த நான்கு அரசுக் கல்லூரிகள் தவிர இந்தப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறைய தனியார் கல்லூரிகளும் ஓவியம், இசை, நடனம் ஆகியவற்றில் பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன. அவற்றின் தரம் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

- படிப்பு தொடரும்

****

என்ன படிப்பு, எங்கே?

சென்னை, கும்பகோணம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் சென்னை, கும்பகோணம் கல்லூரிகள் ஓவியம் சார்ந்த விஷயங்களுக்கும் மாமல்லபுரம் கல்லூரி சிற்பக்கலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இங்குள்ள பல்வேறு படிப்புகளின் விவரம் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!

எந்த ஊரில் என்ன கலை?

அனைத்து அரசு இசைக் கல்லூரிகளிலும் டிகிரி, டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட் படிப்புகள் வழங்கப்பட்டாலும் அந்தந்த ஏரியாவின் தேவைக்கேற்ப அங்குள்ள சிறப்பு துறைகள் மாறுபடுகின்றன. அவை பற்றிய விவரம் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 14 - கலைகள் கற்போம்!

25.05.22 தேதியிட்ட இதழில் வந்த, 'நாளை என்ன வேலை' தொடரில் ஏப்ரலில் ஒரு ஜேஇஇ மெயின் தேர்வு நடந்து முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தது சரியல்ல. இந்த முறை தேதிகள் பலமுறை மாற்றப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம். ஒரு தேர்வு ஜூன் மாத இறுதியில் நடந்தது. இன்னொரு தேர்வு இப்போது ஜூலை மாத இறுதியில் நடந்துகொண்டிருக்கிறது.