அலசல்
சமூகம்
Published:Updated:

தொடரும் மின் விபத்து... அடுத்தடுத்து உயிரிழப்புகள்... அச்சத்தில் பொதுமக்கள்!

மின் விபத்து
பிரீமியம் ஸ்டோரி
News
மின் விபத்து

ஒவ்வொரு சம்பவத்துக்கும் தணிக்கை நடத்துகிறோம். அப்போது எதனால் விபத்து நடக்கிறது... அதைச் சரிசெய்வது எப்படி போன்ற விவரங்களைச் சேகரித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

கடந்த 5-ம் தேதி சென்னை கோடம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி மூர்த்தியும், அவருடைய மனைவி பானுமதியும் வீட்டு வாசலிலேயே மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறார்கள். இதேபோல சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவேந்திரன் சாலையில் தேங்கிக் கிடந்த மழைநீரில் கால்வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார். சென்னை மட்டுல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற மின் விபத்துகள் சமீபநாள்களில் அதிகரித்து வருகின்றன.

தொடரும் மின் விபத்து... அடுத்தடுத்து உயிரிழப்புகள்... அச்சத்தில் பொதுமக்கள்!

தொடரும் விபத்துகள்!

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகிலுள்ள கேசவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இரண்டு வாரங்களுக்கு முன்பு மின்கம்பி அறுந்து அவரின் மாட்டுக் கொட்டகையில் விழுந்தது. கம்பி தூண் வழியாக மின்சாரம் பாய்ந்து முருகேசன் அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். சேலம் மாவட்டம், ஆத்தூர், தென்னங்குடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், தனது விவசாயத் தோட்டத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி. வயலில் கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் 17 ஆடுகள் உயிரிழந்தன.

ஒருபுறம் மழைக்காலப் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். ஆனால், ஊழியர் பற்றாக்குறை, பராமரிப்பில் அலட்சியம் போன்ற காரணங்களால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக மின் ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். மின்துறையில் என்னதான் நடக்கிறது என்று விசாரித்தோம்.

ஆராயாத அதிகாரிகள்...

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.செல்வராஜ், “இந்த அளவுக்கு விபத்துகள் அதிகரித்துவருவதற்கு முக்கியக் காரணமே பராமரிப்புப் பணிகள் போதுமான அளவுக்கு நடைபெறாததுதான். மேலும், ஆள் பற்றாக்குறை காரணமாகப் பல இடங்களில் லைன்களைப் பராமரிக்கும் பணிகள் சரிவர நடக்கவில்லை. உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின்கம்பிகளுக்காக அலுமினியத்தால் ஆன கம்பி வடங்களே பயன்படுத்தப்படுகின்றன. பராமரிக்கப்படாத அலுமினியக் கம்பி வடங்களில் சிறிது நாள்களுக்குப் பிறகு சாம்பல் படியும். நாளடைவில் கண்ணுக்குத் தெரியாத ஓட்டை ஏற்படும். பிறகு அது சேதமடைந்து, எதிர்பாராத நேரத்தில் அறுந்து விழும். மேலும் சில கம்பி வடங்கள் உயர் அழுத்த மின்சாரம் பாயும்போது அதிக வெப்பத்துக்குள்ளாகி, சேதமடையும்.

நிலத்தில் பதிக்கப்பட்ட மின் அமைப்புகளில் பழுது ஏற்பட்டால், அதைப் பராமரித்த பிறகு சரியாக மூடாத நிலை இருக்கிறது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்போது மின்கசிவு ஏற்பட்டு, அதனால் விபத்து, உயிரிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. உயரதிகாரிகள் பழுதுநீக்கம் செய்யப்படும் இடங்களை நேரில் சென்று ஆராயாமல் விடுவதும், இது போன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம்” என்றார்.

சுப்பிரமணி, செல்வராஜ்
சுப்பிரமணி, செல்வராஜ்

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.சுப்பிரமணி, “தினம்தோறும் மின்சாரம் தாக்கி மின் ஊழியர்களும், பொதுமக்களும், கால்நடைகளும் உயிரிழப்புகளைச் சந்தித்துவருவது தொடர்கதையாகி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதால் கூடுதல் வேலைப்பளுவும் அதிகரித்திருக்கிறது. முக்கியமாக, உரிய பாதுகாப்பு சாதனங்கள் ஊழியர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இதனாலேயே கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 700-க்கும் அதிகமான மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் 9,300-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 2,100-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் மின் விபத்தால் பலியாகியிருக்கிறார்கள். பணிச்சுமையைக் குறைக்க, களப் பணியாளர் பொறுப்புக்குத் தகுதிவாய்ந்த ஐ.டி.ஐ பணியாளர்கள் நேரடித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும்” என்றார்.

இது குறித்து மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, “ஒவ்வொரு சம்பவத்துக்கும் தணிக்கை நடத்துகிறோம். அப்போது எதனால் விபத்து நடக்கிறது... அதைச் சரிசெய்வது எப்படி போன்ற விவரங்களைச் சேகரித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஊழியர்கள் பற்றாக்குறைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை” என்றார்.

வார்த்தைக்கு வார்த்தை, `முன்னேறிய மாநிலம்’ என்கிறார்கள். இத்தனை மின் விபத்துகள் நடப்பது முன்னேறிய மாநிலத்துக்கு அழகா?!