Published:Updated:

சாலை விரிவாக்கமா... காடழிப்பா? - குன்னூரில் சூறையாடப்படும் யானைகள் வழித்தடம்!

நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் ஏராளமான யானை வழித்தடங்கள் உள்ளன. அவற்றில், கல்லார் முதல் குன்னூர் வரை யானைகள் பயன்படுத்தும் வழித்தடம் மிக முக்கியமான ஒன்று.

சாலை விரிவாக்கமா... காடழிப்பா? - குன்னூரில் சூறையாடப்படும் யானைகள் வழித்தடம்!

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் ஏராளமான யானை வழித்தடங்கள் உள்ளன. அவற்றில், கல்லார் முதல் குன்னூர் வரை யானைகள் பயன்படுத்தும் வழித்தடம் மிக முக்கியமான ஒன்று.

Published:Updated:
நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

குன்னூர் மலைச்சரிவில், காட்டுப்பலாக்கள் காய்த்துத் தொங்கும் சீஸனிலும், மலையடிவாரத்தில் வறட்சி தலைதூக்கும் காலங்களிலும் சொல்லி வைத்தாற்போல யானைகள் கூட்டம் கூட்டமாக குன்னூர் மலையை நோக்கி வருவது வழக்கம். அப்படித்தான் இம்முறையும் வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்க இரண்டு குட்டிகள் உட்பட எட்டு யானைகளைக் கூட்டிக்கொண்டு மூத்த பெண் யானை ஒன்று குன்னூர் மலையேறத் தொடங்கியது. ஆனால், பாதி மலையேற்றத்திலேயே மொத்தக் கூட்டமும் தடுமாறின. மூத்த யானைகள் வழக்கமாகப் பயன்படுத்திவந்த வலசைப் பாதைகள் நெடுக, பெரிய பெரிய பள்ளங்களையும், பிரமாண்ட தடுப்புச்சுவர்களையும் கண்டு குழம்பின. தட்டுத் தடுமாறி அடிமேல் அடிவைத்து ஒருவழியாக மரப்பாலம் பகுதிவரை வந்தடைந்தன. ‘யானைகள் கடக்கும் பகுதி’ என்று பெரிய அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகிலேயே, பள்ளத்தைத் தோண்டி 40 அடி உயரத்தில் தடுப்புச்சுவர்களை எழுப்பிக்கொண்டிருந்ததால், அந்த யானைகளால் அடுத்த அடியைக்கூட எடுத்துவைக்க முடியவில்லை!

சாலை விரிவாக்கமா... காடழிப்பா? - குன்னூரில் சூறையாடப்படும் யானைகள் வழித்தடம்!

மரப்பாலம் பகுதியிலிருக்கும் வழக்கமான வழித்தடத்தில், மலைபோலக் குவித்துவைக்கப்பட்டிருந்த மண்சரிவில் இறங்கிக் கடப்பது மட்டுமே அந்த யானைகளுக்கு இருந்த ஒரே சாய்ஸ். பல மணி நேரம் யோசித்த மூத்த பெண் யானை, வேறு வழியின்றி ஆபத்தான அந்தச் சரிவில் இறங்கியது. பெரிய‌ யானைகள் சறுக்கிக்கொண்டே அருகிலுள்ள மலை ரயில் பாதையை அடைந்தன. அடிசறுக்கிய ஒரு யானைக்குட்டியோ, சுமார் 100 அடி‌ பள்ளத்தில் உருண்டு தண்டவாளத்தின் அருகில் விழுந்தது. இந்தத் துயரச் சம்பவத்தை, அருகில் சாலை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள் சிலர் வீடியோ எடுத்திருக்கிறார்கள். இணையத்தில் பரவிய அந்த வீடியோ, காண்போரைப் பதைபதைக்கச் செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் வரை இந்த வீடியோ செல்ல... தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். யானைகள் வழித்தடப் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். வழிதவறிய அந்த யானைக் கூட்டம் ரன்னிமேடு எதிரிலிருக்கும் ஒரு தனியார் தேயிலைத் தோட்டக் குடியிருப்பு அருகில் உலவிக்கொண்டிருக்கிறது. ஒரு வாரத்துக்கும் மேலாக வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சாலை விரிவாக்கமா... காடழிப்பா? - குன்னூரில் சூறையாடப்படும் யானைகள் வழித்தடம்!

இந்தச் சாலை விரிவாக்கப் பணிகளில் அப்படி என்னதான் நடக்கிறது? குன்னூர் மலைச்சரிவில் அமைந்திருக்கும் பசுமை மாறாக் காடுகளின் குறுக்கே சுமார் 30 கி.மீ நீளத்துக்கு, 14 கொண்டை ஊசி வளைவுகளுடன் வனத்தைப் பிளக்கும் அந்தச் சாலையில் பயணித்தோம். ராட்சத ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு சாலையோரத் திட்டுகளைக் குடைந்தும், காட்டு மரங்களை வேரோடு பிடிங்கியும் கொண்டிருந்தார்கள். `யானைகள் கடக்கும் பகுதி’, `வன விலங்குகள் நடமாடும் இடம்’, `பாறைகள் சரியும் பகுதி’ என்று சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பதாகைகளைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், அவற்றின் அருகிலேயே பிரமாண்டமான பள்ளங்களைத் தோண்டி உயரமான தடுப்புச்சுவர்களை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். பாறைகளைத் தகர்த்து, படு விசாலமாகச் சாலைகளை அகலப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

சாலை விரிவாக்கமா... காடழிப்பா? - குன்னூரில் சூறையாடப்படும் யானைகள் வழித்தடம்!

நீலகிரி மலையைக் கடக்கும் ஒரே தேசிய நெடுஞ்சாலையாக என்.ஹெச் 67 நாகப்பட்டினம் டு மைசூரு சாலை அமைக்கப்பட்டுள்ளது. கல்லாரில் தொடங்கி நீலகிரி - மைசூரு எல்லையான கக்கநள்ளா வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. ‘‘மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சாலைகளை விரிவாக்கம் செய்யவேண்டியது அவசியம்தான். அதேசமயம் வனவிலங்குகளை, சூழலியல் பிரச்னைகளைப் பொருட்படுத்தாமல் பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது. யானைகள் கடக்கும் பாதைகளில் தடுப்புச்சுவர்கள் எழுப்பியிருந்தால், தயக்கமின்றி உடனே இடித்து அகற்ற வேண்டும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார் குன்னூரைச் சேர்ந்த செயற்பாட்டாளர் மனோகரன்.

யானைகள் வழித்தடப் பாதுகாப்பு குறித்துக் குரலெழுப்பிவரும் ஊட்டியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் சிவதாஸ், ‘‘நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் ஏராளமான யானை வழித்தடங்கள் உள்ளன. அவற்றில், கல்லார் முதல் குன்னூர் வரை யானைகள் பயன்படுத்தும் வழித்தடம் மிக முக்கியமான ஒன்று. இந்தப் பகுதிகளிலிருந்துதான் கெத்தை, அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு யானைகள் வலசை செல்கின்றன. சாலை விரிவாக்கம் எனும் பெயரால், பல அடி உயரத்துக்கு பிரமாண்ட தடுப்புச் சுவர்களைச் சாலையோரங்களில் எழுப்புவதால், யானைகளின் நடமாட்டம் முழுமையாகத் தடைப்படும். இந்தப் பகுதியில் யானைகள் நீண்டகாலமாகப் பயன்படுத்திவரும் வலசைப் பாதைகளை அறிவியல்ரீதியாக ஆய்வுசெய்து, அவை கடப்பதற்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் வழிவகை செய்துகொடுக்க வேண்டும்’’ என்றார்.

மனோகரன், சிவதாஸ், போஸலே சச்சின் துக்காராம், அம்ரித்
மனோகரன், சிவதாஸ், போஸலே சச்சின் துக்காராம், அம்ரித்

நீலகிரி வனக்கோட்ட மாவட்ட அலுவலர் போஸலே சச்சின் துக்காராமிடம் பேசினோம். ‘‘யானைகள் சாலையைக் கடக்கும் பகுதிகளைக் கூட்டாக அளவை செய்யச் சொல்லி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ரயில்வே, வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து நில அளவை மேற்கொண்டுவருகிறோம். வன விலங்குகள் கடக்க இடையூறு இல்லாத வகையில் வழிவகை செய்வோம்’’ என்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் பேசினோம். ‘‘அதிகாரிகளைக் களத்தில் ஆய்வுசெய்ய அனுப்பியிருக்கிறோம். அறிக்கை வந்தவுடன் யானைகள் வழித்தடத்தில் இடையூறுகள் இருந்தால், அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

‘வன நிலத்தில் அத்துமீறி மரங்களை அகற்றவும், பாறைகளைத் தகர்க்கவும், யானைகள் கடக்கும் வழித்தடத்தில் பிரமாண்ட தடுப்புச்சுவர்களை எழுப்பவும் யார் அனுமதி வழங்கியது?’ என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டார்கள். சரி, வேறு யார்தான் பதில் சொல்வார்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism