Published:Updated:

`இப்படியொரு ஆட்டத்தைப் பார்த்ததில்லை!'- காரின் நடுவில் அமர்ந்த யானை; அச்சப்பட்ட பயணிகள் #Viralvideo

சுற்றுலாப் பயணிகளின் கார் மீது யானை ஒன்று அமர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

யானை
யானை

தாய்லாந்தின் `காவோ யாய்' தேசிய பூங்கா வன விலங்குகளின் தாயகமாகப் பார்க்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியில் காட்டு மான்கள், கரடிகள், யானைகள் மற்றும் ஏராளமான பறவை இனங்களைக் காணலாம். பூங்காவின் உள்ளே அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது.

மழைக்காடுகள் பசுமையான புல்வெளிகள் என 2,168 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் காவோ யாய் தேசிய பூங்காவுக்குத் தவறாமல் விசிட் அடிப்பார்கள். பூங்காவில் உள்ள மான்கள், கரடிகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை நேரில் கண்டு ரசிக்கலாம்.

யானை
யானை

இந்நிலையில், காவோ யாய் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கார் மீது யானை ஒன்று அமர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த பெரிய யானை ஒன்று காரை வழிமறித்தது. காரின் முன்பக்கம் யானை அமர முயன்றது.

அதன்பின் காரின் பக்கவாட்டுப் பகுதியில் சென்ற யானை காரின் மீது ஏற முயல்கிறது. பின்னர், பின்பக்கத்தில் ஏறி அமர்ந்தது. யானை மெல்ல நகர்ந்து கால்களுக்கு நடுவில் காரை வயிற்றுப் பகுதியோடு அழுத்தியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளுடன் இருந்த அந்தக் கார் வேகமாக அங்கிருந்து நகர்ந்து செல்கிறது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காரில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. காரின் ரியர் விண்டோ, ரூஃப் ஆகியவை இதில் சேதமடைந்தது. காவோ யாய் தேசிய பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை வனவிலங்குகள் உலாவும் பகுதிக்கு 30 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். அதைமீறி சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது இதுபோன்ற மோதல்கள் ஏற்படுகின்றன.

தாய்லாந்து தேசிய பூங்கா
தாய்லாந்து தேசிய பூங்கா

இதுகுறித்து பேசிய காவோ யாய் தேசிய பூங்கா ஊழியர்கள். ``35 வயது மதிக்கத்தக்க யானை குளிர்காலங்களில் வெளிவரும். ஆனால், இதுவரை யாரையும் தாக்கியதில்லை என்கின்றனர்.”

காரில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் தங்கை இதைப் புகைப்படமாக எடுத்துள்ளார். அதை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.