Published:Updated:

போலி டிரெண்டிங்குக்கு ‘செக்’ - ஃபேக் ஐ.டி-களுக்கு ‘கெட்-அவுட்’ - ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்...

எலான் மஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
எலான் மஸ்க்

இந்தியாவிலேயே சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கட்சி பா.ஜ.க-தான்

போலி டிரெண்டிங்குக்கு ‘செக்’ - ஃபேக் ஐ.டி-களுக்கு ‘கெட்-அவுட்’ - ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்...

இந்தியாவிலேயே சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கட்சி பா.ஜ.க-தான்

Published:Updated:
எலான் மஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
எலான் மஸ்க்

2006-ல் தொடங்கப்பட்ட சமூக வலைதளமான ட்விட்டரின் 100 சதவிகிதப் பங்குகளை, இந்திய மதிப்பில் சுமார் 3.3 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க். இனி அவரது சி.இ.ஓ விசிட்டிங் கார்டில், `டெஸ்லா’, `ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களோடு ‘ட்விட்டர்’ நிறுவனமும் சேர்ந்துகொள்ளப் போகிறது. ட்விட்டர், மஸ்க்கின் வசம் சென்றதும் இந்தியாவிலுள்ள இணையவாசிகள் பலரும், `இனி பா.ஜ.க-வால், ட்விட்டர் மூலம் போலி ஃபாலோயர்கள், போலி டிரெண்டிங் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியாது’ என்று கிண்டலாகப் பதிவிடத் தொடங்கினர். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியிருப்பதால், பா.ஜ.க-வுக்கு உண்மையிலேயே பாதிப்பா?

போலி டிரெண்டிங்குக்கு ‘செக்’ - ஃபேக் ஐ.டி-களுக்கு ‘கெட்-அவுட்’ - ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்...

முக்கிய அறிவிப்பு!

இந்தியாவிலேயே சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கட்சி பா.ஜ.க-தான். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், `ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி வாக்குகளைப் பெற்றது பா.ஜ.க’ என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதேபோல, ட்விட்டரிலும் போலிக் கணக்குகள் மூலம் குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகளை, பா.ஜ.க டிரெண்ட் செய்வதாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி குற்றம்சாட்டிவந்தன. இந்த நிலையில், மஸ்க்கின் கைகளுக்கு ட்விட்டர் சென்றதும், சில புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்கிற எதிர்பார்ப்புகள் எகிறின. அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் முக்கியமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது பற்றி அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க். `மனிதர்கள் அல்லாமல் மென்பொருள் மூலம் இயக்கப்படும் போலி பாட் (BOT) ட்விட்டர் கணக்குகளை முடக்குவோம். தனிநபர் சரிபார்ப்பு மூலம் இதை அமல்படுத்துவோம்’ என்பதுதான் அந்த முக்கியமான அறிவிப்பு.

இதையடுத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ``இனி பா.ஜ.க-வால் போலி ஹேஷ்டேக்குகளையோ, போலி ஃபாலோயர்களையோ பயன்படுத்திக்கொள்ள முடியாது. மஸ்க் அதை அனுமதிக்க மாட்டார்’’ என்று கிண்டல் செய்யத் தொடங்கினர். மேலும் சில நெட்டிசன்கள், ``இந்தியாவில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களே 2.4 கோடி பேர்தான். ஆனால், பிரதமர் மோடியைப் பின்தொடர்பவர்களோ 7.8 கோடி பேர். இதை எப்படி நம்ப முடியும்... மஸ்க், ட்விட்டர் பாட்களை அகற்றும்போது மோடியைப் பின்தொடர்பவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவரும்’’ என்று பதிவிட்டுவருகிறார்கள்.

“எல்லா கட்சிகளும் அப்படித்தான்!”

அரசியல் தெரிந்த தொழில்நுட்ப வல்லுநர்களைத் தொடர்புகொண்டு இது பற்றிப் பேசினோம். ``அமெரிக்காவில் எட்டு கோடி ட்விட்டர் பயனாளர்கள் இருக்கிறார்கள். அதுவே, சுமார் 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 2.4 கோடி ட்விட்டர் பயனாளர்களே இருக்கிறார்கள். இந்திய மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான மக்களே ட்விட்டரைப் பயன்படுத்துவதால், பா.ஜ.க-வுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது. பெரும்பாலும் பத்திரிகையாளர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மட்டுமே பயன்படுத்தும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிடலாமே தவிர, யாரையும் தங்களுக்கான வாக்காளர்களாக மாற்றிவிட முடியாது.

வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க மட்டுமல்ல... பெரும்பாலான அரசியல் கட்சிகள், 34 கோடி பயனாளர்களைக்கொண்ட ஃபேஸ்புக்கையும், 49 கோடி பயனாளர்களைக்கொண்ட வாட்ஸ்அப்பையுமே நம்பியிருக்கின்றன. இந்திய அளவில், இதில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பது பா.ஜ.க-தான் எனலாம். அந்தந்த மாநில மொழிகளில் ஃபேஸ்புக் குரூப்புகளைத் தொடங்கி, தங்களது கொள்கைகளைப் பரப்பிவருகிறது அக்கட்சி. வாட்ஸ்அப் மூலம் தங்களது கொள்கைகளை மக்கள் மனதில் பதியவைத்து, அவர்களைத் தங்கள் வாக்காளர்களாக மாற்றும் வேலைகளையும் செய்துவருகிறது’’ என்றார்கள்.

அதேசமயத்தில் சில அரசியல் வல்லுநர்கள், ``வாக்காளர்களைக் கவர்வதற்கு ட்விட்டர் பயன்படாது என்பது சரிதான். ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்கு ட்விட்டர் முக்கியமான செயலியாகவே இருக்கும். ட்விட்டரில், பற்றி எரியும் ஹேஷ்டேக்குகள்தான் அன்றைய தினத்தின் முக்கியச் செய்திகளாக இருக்கின்றன. ட்விட்டரில் பிரபலமான ஒருவர் வெளிப்படுத்தும் சர்ச்சைக் கருத்து, குறைந்தது நான்கு நாள்களுக்காவது தலைப்புச் செய்தியாக இருக்கிறது. எனவே, நாட்டின் மிக முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப, பா.ஜ.க அரசுக்கு ட்விட்டர் தேவைப்படுகிறது. பா.ஜ.க வெளிப்படுத்த நினைக்கும் விஷயங்களை மக்களிடம் வேகமாகக் கொண்டுசெல்லவும் ட்விட்டர் உதவுகிறது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், நாடு முழுவதும் எதைப் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியக் கருவிகளுள் ஒன்றாக இருக்கிறது ட்விட்டர். இது போன்ற விஷயங்களைச் செய்வதற்கு நிச்சயம் போலி பாட்களின் உதவியும் தேவைப்படும்!’’ என்கிறார்கள்.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

“முற்றிலுமாக மறுக்கிறோம்!”

இது குறித்து தமிழக பா.ஜ.க-வின் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமாரிடம் கேட்டோம். ``போலி பாட் கணக்குகளை நீக்குவோம் என்று எலான் மஸ்க் கூறியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில் பா.ஜ.க போலியான கணக்குகள் மூலம் டிரெண்ட் செய்கிறது என்கிற குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கிறோம். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் போலி பாட்களை பயன்படுத்தி `கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் ஆட்களைப் பணியமர்த்தி இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது எதிர்க்கட்சிகள்தான். அதற்கான ஆதாரங்கள்கூட எங்களிடம் இருக்கின்றன’’ என்றவரிடம் ``மோடியைப் பின்தொடரும் கணக்குகளில் பாதிக்கும் மேல் போலியானவை என்கிறார்களே?” என்று கேட்டோம்.

அதற்கு, ``முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை 12.9 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். ஆனால், அங்கு 7.6 கோடி பேர் மட்டுமே ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்கள். காரணம், பல்வேறு நாடுகளிலிருப்பவர்களும் ஒபாமாவைப் பின்தொடர்கிறார்கள். அதேபோலத்தான் பிரதமர் மோடியையும் பல்வேறு நாடுகளிலிருந்து பின்தொடர்கிறார்கள்’’ என்றார்.

எலான் மஸ்க் சொன்னபடி ட்விட்டரிலுள்ள பாட் கணக்குகள் நீக்கப்பட்டால், யார் சொல்வது உண்மை என்பது தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism