Published:Updated:

மாயமான மரகதலிங்கங்கள்... ‘மர்மமான’ கதைகள்... மந்தமான விசாரணைகள்...

மௌனம் காக்கும் அரசு!

பிரீமியம் ஸ்டோரி
‘சில பொருள்களை வீட்டில் வைத்திருந்தால், கோடி கோடியாய் செல்வம் பெருகும்; அரசனுக்கு நிகராக அதிகாரத்தோடு வாழலாம்; நோயின்றி நீண்டகாலம் வாழலாம்’ என்பது போன்ற ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகளுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை. அப்படி, `அதிர்ஷ்டம்’ எனச் சொல்லி சந்தையில் ஏமாற்றி விற்கப்படும் பொருள்களில்... நாகரத்தினக்கல், இரிடியம், மண்ணுளிப் பாம்பு, மரகதலிங்கம் ஆகியவை விலையுயர்ந்தவை (இவற்றில் நாகரத்தினக்கல் என்பது முற்றிலும் கற்பனை). எந்தவொரு ஏமாற்றிலும் ஆன்மிகத்தை இணைத்துவிட்டால், அதன் மதிப்பு கூடிவிடும். அந்தவகையில், மரகதலிங்கத்தின் மதிப்போ சில பல கோடிகளில்!

தமிழ்நாட்டில் ஏராளமான கோயில்களில் மரகதலிங்கங்களும் மரகதத்தால் ஆன பல கடவுள் திருவுருவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில், மூன்று அங்குலத்திலிருந்து ஆறடி உயரம் வரையிலான சிலைகள் உண்டு. இவற்றில், மதுரை மீனாட்சி அம்மன் சிலை, உத்திரகோசமங்கை நடராஜர் சிலை போன்றவை மரகதக்கல்லில் உருவான பெரிய சிலைகள். மரகதக்கல்லில் பல்வேறு கடவுள் உருவங்கள் வடிக்கப்பட்டிருந்தாலும்கூட லிங்கத்துக்குத்தான் அதிக ‘பவர்’ என்கிறார்கள். அதனால்தான் தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் மரகத லிங்கங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கள்ளச்சந்தையில் கைமாறியிருக்கின்றன. அப்படிக் கொள்ளைபோன மரகதலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவா... அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்று விசாரணையில் இறங்கினோம்.

மாயமான மரகதலிங்கங்கள்... ‘மர்மமான’ கதைகள்... மந்தமான விசாரணைகள்...

காணமல்போன மரகதலிங்கம்; கணக்கு காட்டப்படும் ஸ்படிக லிங்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில், குன்னத்தூர் சத்திரம் இருக்கிறது. இந்தச் சத்திரம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தச் சத்திரத்தில், அரை அடி உயரமுள்ள மரகதலிங்கம் இருந்தது. அதற்கு தினமும் மூன்று வேளை பூஜையும் செய்யப்பட்டு வந்தது. அந்தக் கட்டடம், சில காலம் மாநகராட்சி வரி வசூல் மையமாகவும் செயல்பட்டுவந்தது. அந்தச் சமயமும்கூட அந்த மரகதலிங்கத்துக்கு தினமும் பூஜைகள் நடந்துவந்தன. கடந்த 2007-ம் ஆண்டு, சத்திரக் கட்டடம் பலவீனமடைந்ததாக, அங்கிருந்த பொருள்களையெல்லாம் மாநகராட்சி அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அதற்குப் பிறகு, கடந்த 2013-ம் ஆண்டு அந்த மரகதலிங்கம் காணாமல்போனதாகப் புகார் எழுந்தது. அது குறித்த வழக்கு விசாரணை படுமும்முரமாக நடந்துவந்த நிலையில், திடீரெனக் கிடப்பில் போடப்பட்டது. ‘அதைக் கண்டுபிடிக்க வேண்டும்!’ என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார், வழக்கறிஞர் முத்துக்குமார்.

அவரிடம் பேசினோம், “குன்னத்தூர் சத்திரத்தி லிருந்த மரகதலிங்கம் ரொம்ப பழைமையானது. மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு அதைக் கொண்டுபோன பிறகுதான் காணாமப்போச்சு. அந்தச் சமயத்தில் மாநகராட்சிக் கூட்டத்தில் மரகதலிங்கம் பற்றிக் கேள்வி எழும்பிச்சு. ஆனா, மாநகராட்சி அதிகாரிகள் சரியான பதில் சொல்லலை. சிலர், மரகதலிங்கத்தை வெளிநாட்டுக்குக் கடத்திட்டாங்கனு சொன்னாங்க. நான், அப்போ தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தேன். ஆனா, ஒரு நடவடிக்கையும் இல்லை. அதுக்கப்புறம்தான், ‘மரகதலிங்கத்தை மீட்கணும்’னு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு போட்டேன். வழக்கு விசாரணையப்போ, மாநகராட்சி அதிகாரிகள் ‘குன்னத்தூர் சத்திரத்தில் இருந்தது, ‘ஸ்படிக லிங்கம்’தான், மரகதலிங்கம் கிடையாது’னு கோர்ட்ல சொன்னாங்க. ஆனா, தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன்லருந்து தாக்கல் செஞ்ச அறிக்கையில, ‘குன்னத்தூர் சத்திரத்தில் பூஜை செய்த அர்ச்சகரிடம் விசாரித்தபோது, அது பச்சை நிற லிங்கம்னு தெரியும். ஆனா, மரகதலிங்கமானு தெரியாது என்று சொன்னார்’னு குறிப்பிட்டிருந் தாங்க. மாநகராட்சி கொடுத்த அறிக்கையும் இதுவும் முரணா இருந்துச்சு. ஏன்னா, மாநகராட்சி குறிப்பிட்ட ஸ்படிக லிங்கம் கண்ணாடி மாதிரி தண்ணீர் நிறத்தில் இருக்கும். மரகதம் பச்சை நிறம்... வெறும் ஸ்படிக லிங்கத்துக்கு மாநகராட்சி சார்பில் தனி பூசாரி நியமித்து, ஊதியம் கொடுத்து பூஜை செய்ய வேண்டிய அவசியம் இல்லையே... இதுல இன்னொரு விஷயம், மாநகராட்சி கருவூல ஆவணப் பதிவேட்டில் மரகதலிங்கமும், விலை மதிக்க முடியாத பல்வேறு பழங்காலப் பொருள்களும் பதியப்பட்டிருந்த நிலையில், `அந்தப் பதிவேட்டையே காணவில்லை’ என்று அதிகாரிகள் சொன்னது அதிர்ச்சியா இருந்துச்சு. பிறகு, கோர்ட் உத்தரவின் பேர்ல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவும், சி.பி.ஐ-யும் விசாரணையை ஆரம்பிச்சாங்க. அப்போ, ஆவணப் பதிவேடு திரும்பக் கிடைச்சதா சொன்னாங்க. ஆனாலும், விசாரணையில் முன்னேற்றமே இல்லை. இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி திடீர்னு மறுபடியும் விசாரணையை ஆரம்பிச்சிருக்காங்க. அதனால, மரகதலிங்கத்தோட மர்மம் விலகும்னு நம்பிக்கை வந்திருக்கு’’ என்றார் முத்துக்குமார்.

மாயமான மரகதலிங்கங்கள்... ‘மர்மமான’ கதைகள்... மந்தமான விசாரணைகள்...

இந்த வழக்கு சம்பந்தமாக ஏழு பேர் கொண்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், மதுரையில் முக்கிய இடங்களில் ரகசிய விசாரணையை மேற்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த ‘அசல் மரகதலிங்கத்தை’ப் பார்த்ததாகச் சொல்லப்படும் அர்ச்சகர் மீனாட்சி சுந்தரம் என்பவர் சமீபத்தில் இறந்துவிட்டார். மாநகராட்சி தரப்பில் நம்மிடம் பேசிய டெபுடி கமிஷனர் நாகஜோதி, “மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழு விசாரித்ததில், குன்னத்தூர் சத்திரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களில் லிங்கம் ஒன்று இருந்ததையும், அதை அப்ரைசர் ஒருவர் மூலம் ஆய்வு செய்ததில் அது ஸ்படிக லிங்கம் என்றும், அதன் மதிப்பு ஆறாயிரம் ரூபாய் என்றும் அறியப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை அப்போதே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, உயர் நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது. மரகதலிங்கம் என்ற ஒன்று இருந்ததற்கு வேறு எந்த ஆவணமும் இங்கு இல்லை. ஒரு யூகமாகத்தான் சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். இதில் வேறெந்தத் தகவலும் இல்லை’’ என்றார். நமக்குத் தூக்கிவாரிப்போட்டது!

பகலிலே வந்தான்... பைக்கில் சிலையுடனே சென்றான்!

நாகப்பட்டினம் நகரில் சுமார் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த காயாரோகண சுவாமி திருக்கோயில் இருக்கிறது. இங்கிருந்த மரகதலிங்கம் 1991-ம் ஆண்டில் காணாமல்போனது. இது குறித்துப் பேசிய கோயில் ஊழியர் ஒருவர், “தியாகராஜர் சந்நிதியில் 11 மணிக்கு மரகதலிங்க பூஜையை முடிச்சிட்டு, சந்தனம் சாத்தி வெள்ளிப்பேழையில்வெச்சுப் பூட்டிடுவோம். மதியம் 12:30 மணிக்குக் கோயில் நடைசாத்திடுவோம். அன்னிக்கும் வழக்கம்போலக் கிளம்பிட்டோம். சாயந்தரம் 4:30 மணிக்கு நடை திறந்தப்போ, உள்ளேயிருந்து ஒருத்தன், எதையோ கையில்வெச்சுக் கிட்டு வெளியே ஓடினான். நாங்க சுதாரிக்கறதுக்குள்ள அவன் பைக்குல தப்பிச்சுட்டான். பிறகுதான், மரகதலிங்கத்தை அவன் திருடிச் சென்ற விஷயம் தெரிஞ்சுது. அப்பவே புகார் கொடுத்தாங்க. இதுவரைக்கும் கண்டுபிடிச்ச பாடில்லை” என்றார்.

ஒரிஜினலா... டூப்ளிகேட்டா? - பரமசிவனுக்குத்தான் தெரியும்!

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி மெயின்ரோட்டில் இருக்கிறது, திருக்காரவாசல் தியாகராஜர் திருக்கோயில். அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள இந்தக் கோயிலிலிருந்த மரகதலிங்கம், 19 ஆண்டுகளுக்கு முன்னர் திருடு போனது. இது பற்றிக் கோயிலில் விசாரித்தபோது அர்ச்சகர், பணியாளர்கள் என ஒருவருமே பதில் சொல்லாமல் நழுவினர். அந்தக் கோயிலின் தீவிர பக்தர் ஒருவர், “போலீஸ்காரங்க பட்டாச்சாரியாரையும் ஊழியர்களையும்தான் குடைஞ்சுக்கிட்டே இருந்தாங்க. ஆனா, ஒண்ணையும் கண்டுபிடிக்கலை. பத்து வருஷத்துக்கு முன்னாடி இங்கே களவுபோன மரகதலிங்கம், விழுப்புரத்தில் இருக்குறதா போலீஸுக்குத் தகவல் வந்திருக்கு. உடனே அங்க போன போலீஸ், லிங்கத்தை வெச்சிருந்த ரெண்டு பேரைப் பிடிச்சு, கேஸ் போட்டாங்க. மரகதலிங்கத்தை விழுப்புரம் கோர்ட்டுல ஒப்படைச்சிட்டாங்க. பத்து வருஷமா லிங்கம் கோயிலுக்கு வந்தபாடில்லை. கேஸ் முடிஞ்சு அந்த ஒரிஜினல் லிங்கம் கோயிலுக்கு வருமா இல்லை டூப்ளிகேட் வருமோ... அது பரமசிவனுக்குத்தான் தெரியும்” என்றார்.

முத்துக்குமார்
முத்துக்குமார்

ரெண்டு பூட்டு லாக்கர்... ஆனாலும் அபேஸான லிங்கம்!

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் இருக்கிறது தியாகராஜர் திருக்கோயில். தருமபுரம் ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில் இது. இங்கிருந்த மரகதலிங்கம் கடந்த 09.10.2016-ம் தேதி களவுபோனது. அது பற்றி கோயில் கண்காணிப்பாளர் சபரிராஜனிடம் பேசினோம். “மரகதலிங்கத்தைவெக்கிற லாக்கர் ரிப்பேரா இருந்ததால, ரெண்டு பூட்டுப் போட்டுத்தான் பூட்டி வெச்சிருந்தோம். கோயில் மெய்க்காப்பாளர் ரவி, மாலை நேர பூஜைக்காக தியாகராஜர் சந்நிதியைத் திறந்துவிட்டு, அம்பாள் சந்நிதியைத் திறக்கப் போயிருக்கார். அந்த இடைவெளியில் யாரோ பூட்டை உடைச்சு மரகதலிங்கத்தைக் களவாடிட் டாங்க. லிங்கம் இன்னும் கிடைக்கலை” என்றார்.

அனைத்து விஷயங்கள் குறித்தும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சிலரிடம் பேசினோம், “திருக்காரவாசல் வழக்கு, விழுப்புரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. திருக்குவளை வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. ஆனால், இந்த வழக்கில் துளிக்கூட முன்னேற்றம் இல்லை. நாகப்பட்டினம் மரகதலிங்கம் வழக்கு விசாரணை என்ன ஆனது என்று தெரியவில்லை” என்றனர்.

சில சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் இது குறித்துப் பேசும்போது, “தேடப்படும் பல சிலைகள், நமது மாநிலத்துக்குள்ளேயே பெரும் அரசியல்வாதிகளின் வீட்டிலேயே இருக்க வாய்ப்புகள் அதிகம். ‘பவர்’ வேண்டும் என்பதற்காக நம் அரசியல்வாதிகள் அன்றாடம் செய்யும் யாகம், சடங்குகள், வேண்டுதல்கள் பற்றிய செய்திகளெல்லாம் அதிர்ச்சிகரமானவை. அந்தவகையில், மரகதலிங்கங்களை போலீஸார் தேட வேண்டிய இடம் எதுவென நாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை” என்று முடித்துக்கொண்டார்கள்.

மதுபானங்களைச் சேமித்துவைத்திருக்கும் டாஸ்மாக் குடோன்களில்கூட பாதுகாப்புக்காகப் பல கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியிருக் கிறது அரசு. ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மரகதச்சிலைகள் இருக்கும் கோயில்களில் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பது வேதனையான விஷயம். மேலும், மொத்தமாக எத்தனை மரகதச் சிலைகள் தமிழகத்தில் இருக்கின்றன என்ற கணக்கும் முறையாக இல்லை. தொடர்ச்சியாக இந்தச் சிலைகள் மிகச் சாதாரணமாகக் களவாடப்பட்டு வருகின்றன என்கிற செய்தி பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அரசியல் தலையீடு இல்லாமல், நேர்மையாக விசாரணை நடத்தினால் மட்டுமே நமது பாரம்பர்ய புராதனச் சின்னங்களான மரகதச் சிலைகளை மீட்க முடியும்.

எல்லாம் அறிந்த அரசு... எப்போது ஆவன செய்யும்?

புதருக்குள் மரகதலிங்கம்!

கடந்த 2017-ம் ஆண்டு, திருவண்ணாமலை, வேட்டவலம் ஜமீன் பங்களா அருகே ‘மனோன்மணி அம்மன்’ கோயிலில் இருந்த தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளுடன் மரகதலிங்கமும் காணமல்போனது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்திவந்த நிலையில், தங்களை போலீஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த கடத்தல்காரர்கள், அந்த மரகதலிங்கத்தை கடந்த 2019-ம் ஆண்டு, அந்தக் கோயிலுக்கு அருகேயுள்ள புதருக்குள் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். மரகதலிங்கக் களவில் இது ஒரு புதிர் ரகம்!

ஒளிரும் தன்மையுடைய கனிமம்!

மரகதம், பெரில் வகையைச் சேர்ந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலப்பொருள்தான் மரகதத்துக்குப் பச்சை நிறம் தருகிறது. இது ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளன. மரகதக்கற்கள் மென்மையானவை. எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. பால் மற்றும் நீரில் தூய தரமான மரகதக்கல்லைப் போட்டால், பாலும் நீரும் பச்சை நிறத்தில் தெரியும் என்பார்கள். இந்தியாவை ஆண்ட பல மன்னர்கள் மரகத லிங்கங்களை பூஜித்து வந்திருக்கிறார்கள். பல நாடுகளின் மன்னர்கள், தம் மகுடத்தில் மரகதக்கல்லைப் பொருத்துவதைப் பெருமையாகக் கருதியிருக்கிறார்கள். மரகதலிங்கத்தின் மேல் புனையப்பட்டிருக்கும் தொன்மங்களுக்கும் கதைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் கணக்கே இல்லை!

மரகதத்தில் சந்தனம்; பொட்டலத்துக்கு ஆயிரம்!

மரகத லிங்கங்களை பூஜையின்போது மட்டும்தான் பேழையிலிருந்து வெளியில் எடுப்பார்கள். பூஜை முடிந்த பிறகு, சந்தனக் காப்பிட்டு பேழையில் வைத்துப் பூட்டிவிடுவார்கள். இப்படிப் பூசப்பட்ட சந்தனம் மருத்துவ குணம் மிகுந்ததாக மாறி, தீராத வியாதிகளைத் தீர்த்துவிடும் என்று நம்பப்படுகிறது. அதனால், இந்த மேற்பூச்சு சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்குவார்கள். அதையே பொட்டலமிட்டு ஆயிரக்கணக்கான ரூபாய்க்குச் சில அர்ச்சகர்கள் விற்பனை செய்தும்வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு