நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கென நீதிபதி வர்மா கமிட்டி கொடுத்த பரிந்துரைகளில் ஒன்று, மேலை நாடுகளில் இருப்பதைப்போல அவசரகால உதவி எண்ணை இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டும் என்பது. 2013-ம் ஆண்டு கொடுத்த இப்பரிந்துரை 2019 பிப்ரவரியில்தான் அமலுக்கே வந்தது. அன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி 112 என்ற அவசர உதவி எண்ணையும், 112 என்ற செல்போன் செயலியையும் அறிமுகப்படுத்தினார். ஆபத்து காலத்தில் போனில், 5 முதல் 9 வரையுள்ள ஏதாவது ஓர் எண்ணைத் தொடர்ந்து அழுத்தினால் போதும்... அருகிலுள்ள காவல் நிலையத்திலிருந்து உதவிக்கு ஆட்கள் பறந்து வருவார்கள் என்றார்கள். நாடு தழுவிய இந்தத் திட்டத்துக்காக 321.69 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், அது எந்த அளவுக்குப் பெண்களுக்குப் பயனளித்திருக்கிறது என்பதற்கு ‘பைக் ரேஸர்’ நிவேதாவின் அனுபவமே சான்று.
தலைநகர் சென்னையில் நள்ளிரவில் தனியாக பைக்கில் சென்ற பைக் ரேஸர் நிவேதாவுக்கு, பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறான் ஓர் இளைஞன். எமர்ஜன்ஸி எண் 112-ஐ தொடர்புகொள்ள முயன்று ஏமாந்திருக்கிறார் அந்தப் பெண். அன்று என்ன நடந்தது என்று நிவேதாவிடம் பேசினோம்.

``இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்றவள் நான். சென்னை திருமங்கலத்தில் பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப்பை நடத்திவரும் நான், கோச்சராகவும் இருக்கிறேன். கடந்த 11.5.2022-ம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு திருமங்கலத்திலிருந்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ஆதம்பாக்கத்திலுள்ள என் வீட்டுக்குப் புறப்பட்டேன். அசோக்நகர் பில்லர் சிக்னலில் நின்றபோது, என்னை ஒரு பைக் ஃபாலோ பண்ணுவதை உணர்ந்தேன். ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவனின் முகம் சரியாகத் தெரியவில்லை. கறுப்பு பேன்ட்டும், வெள்ளை நிற சர்ட்டும் அணிந்திருந்தான். நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. 50 கி.மீட்டர் முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த நான், அவன் என்னைத்தான் பின்தொடர்கிறானா என்பதை உறுதி செய்வதற்காக வண்டியின் வேகத்தைக் குறைத்தேன். அவனும் வேகத்தைக் குறைத்தான். உடனே ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வண்டியை நிறுத்திவிட்டு செல்போனைக் கையில் எடுத்தேன். என்னைப் பார்த்தபடியே கடந்து சென்றான். போய்விட்டான் என்றெண்ணி, சில நிமிடங்களுக்குப் பிறகு நானும் பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். மீண்டும் அவன் என்னைப் பின்தொடர்ந்தான். இனியும் தாமதிக்கக் கூடாது என்று வண்டியை ஓட்டிக்கொண்டே, செல்போனை எடுத்து பெண்களுக்கான அவசரகால உதவி எண் (Emergency Number) 112-ஐ தொடர்புகொண்டேன். ‘ரிங்’ போனது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்திய, ‘காவலன் செயலி’ மூலம் காவல்துறையினரைத் தொடர்புகொள்ளலாம் என்று நினைத்தபோது என்னுடைய செல்போனில் இரண்டு சதவிகிதம்தான் சார்ஜ் இருந்தது. செல்போன் லாக்கை ஓப்பன் செய்து, காவலன் செயலி மூலம் தொடர்புகொள்வதற்கான அவகாசமும் இல்லை.

அதற்குள் என்னை நெருங்கிய அவன் வலது கையைப் பிடித்து இழுத்தான். கையிலிருந்த செல்போன் கீழே விழுந்தது. நான் பைக் ரேஸர் என்பதால் சாதுர்யமாகச் செயல்பட்டு பைக்கை நிறுத்தினேன். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனுடன் போராட முடிவுசெய்தேன். `யாருடா நீ?’ என்று கேட்டதோடு, அசிங்கமாக அவனைத் திட்டினேன். `நான் அப்படித்தான் பண்ணுவேன்...’ என்று கூறியபடி என்னை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து பைக்கில் வேகமாகக் கிளம்பினான். என்னுடைய வீட்டை நெருங்கிவிட்டதால், தைரியமாக ‘ஹெல்ப், ஹெல்ப்’ என்று சத்தமிட்டபடியே அவனை விரட்டினேன். அப்போது அவ்வழியாக ஒருசில வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஒருவர்கூட எனக்கு உதவ முன்வரவில்லை. சுமார் 200 மீட்டர் தூரம் விரட்டிச் சென்றிருப்பேன். அவன் தப்பிவிட்டான்” என்று படபடப்புடன் சொன்னார் நிவேதா.
சின்ன ஆசுவாசத்துக்குப் பிறகு தொடர்ந்த அவர், “அப்போது மணி நள்ளிரவு 1:00. ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததைச் சொன்னேன். என்னுடன் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து ஆய்வுசெய்த போலீஸார், சிசிடிவி பதிவுகளைக்கொண்டு அவனைக் கண்டுபிடித்துவிடலாம் என்றார்கள். எனக்கு நடந்த சம்பவம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்றுதான் அதை ட்விட்டரில் பதிவுசெய்தேன். போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அந்தப் பதிவைப் பார்த்து எனக்கு பதிலளித்தது மனநிறைவை அளித்தாலும், நம் நாட்டில் அவசரகால உதவி எண்கள் அவசரத்துக்கு உதவாதது அவநம்பிக்கையைத் தருகிறது. ‘காவலன் ஆப்’ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய எனக்கே இந்த கதி என்றால், தொழில்நுட்பம் கைவராத மற்றவர்களின் கதி?!” என்றார் விரக்தியோடு.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாரிடம் பேசினோம். ``நிவேதா கொடுத்த புகாரின்பேரில் சிசிடிவி பதிவுகளை வைத்து அந்த ஆசாமியைத் தேடிவருகிறோம். அந்த நபர் ஓட்டி வந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லை. அதுதான் அவனைக் கண்டுபிடிக்க காலதாமதம் ஏற்படுவதற்குக் காரணம். அசோக் பில்லர் தொடங்கி ஆதம்பாக்கம் வரையிலான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் அவனைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அவசர உதவி எண்கள் அவசரகாலத்தில் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவேண்டியது அவசரம்... மிக அவசியம்!