Published:Updated:

“பசித்தவன் யாரிடமும் கையேந்த வேண்டாம்!” - ஊரடங்கில் துளிர்க்கும் மனிதம்...

ஈரோடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஈரோடு

- கிளமென்ட் பிரேம்குமார்

இடைவிடாமல் ஒலிக்கும் ஆம்புலன்ஸ் சைரன், மருத்துவமனைகளில் நிரம்பிவழியும் கூட்டம், மயானத்தில் எரிந்துகொண்டேயிருக்கும் சடலங்கள் என கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலான காலகட்டமாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலிலும் நம்பிக்கைச்சுடர் ஏந்திவரும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கிளமென்ட் பிரேம்குமார் இதற்கு முன்னுதாரணம்!

“பசித்தவன் யாரிடமும் கையேந்த வேண்டாம்!” - ஊரடங்கில் துளிர்க்கும் மனிதம்...

கொரோனாவால் பலரும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க, சாலைகளில் ஆதரவற்று தவிப்பவர்களின் பசியாற்ற வேண்டுமென ஊரடங்கிலும் சுறுசுறுப்பாக வலம்வருகிறார் கிளமென்ட் பிரேம்குமார். தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்து, அதில் உணவுப் பொட்டலங்கள், வாழைப்பழங்கள், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வைத்துவிட்டு, ‘பசித்தால் எடுத்துக்கொள்; பணம் வேண்டாம்’ என்று எழுதிவைத்து, தனக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை என்பதைப்போல கிளம்பிவிடுகிறார். இவரது மனிதநேய செயலைக் கேள்விப்பட்டு, அவரைச் சந்திக்க கோபிசெட்டிபாளையத்துக்குச் சென்றோம். வியர்க்க விறுவிறுக்க தள்ளுவண்டியில் சாப்பாட்டுப் பொட்டலங்களை அடுக்கிக் கொண்டிருந்தவரிடம் பேசினோம். “நான் விளம்பரத்துக்காக இதைச் செய்யலை. ப்ளீஸ், பேட்டி எதுவும் வேணாமே...” என்று தயங்கியவரிடம், “நீங்கள் பேசினால், இன்னும் பலர் இதுபோலச் செய்ய முன்வருவார்கள்...” என்று சொன்னதும் பேசத் தொடங்கினார்.

கிளமென்ட் பிரேம்குமார்
கிளமென்ட் பிரேம்குமார்

“திருமணமாகி 17 வருஷமா குழந்தை இல்லை. கொரோனா ஆரம்பமான சமயத்துல, என் மனைவி கர்ப்பமடைஞ்சாங்க. பிரசவ காலத்துல மனைவியோட இருக்கணும்னு, ஏழு வருஷமா பார்த்துக்கிட்டு இருந்த தனியார் பள்ளி முதல்வர் வேலையை விட்டுட்டு கோபிசெட்டிபாளையம் வந்துட்டேன். பையன் பிறந்தப்ப கொரோனா தொற்று அதிகமாகி லாக்டெளன் போட்டுட்டாங்க. அப்போ ஆதரவற்ற நிறைய பேர் கையில காசில்லாம, சாப்பாட்டுக்கு அல்லாடுறதைப் பார்த்தப்ப மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இப்படி கஷ்டப்படுறவங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு இருக்குற காசையெல்லாம் திரட்டி, 50 குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்தேன். இப்போ கொரோனா ரெண்டாவது அலை வந்து, முன்னைவிட நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு... மறுபடியும் லாக்டெளன் போட்டுட்டாங்க.

மறுபடியும் நாம ஏதாச்சும் செஞ்சாகணும்னு என் மனைவிகிட்ட பேசுனப்பதான் இந்த ஐடியா தோணுச்சு. உடனே ஒரு தள்ளுவண்டியை வாடகைக்குப் பிடிச்சேன். கடையில நூறு சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன். ரெண்டு தார் வாழைப்பழம், தண்ணீர் பாட்டில்னு எல்லாத்தையும் அந்த வண்டியிலவெச்சுக்கிட்டு, ‘பசித்தால் எடுத்துக்கொள்; பணம் வேண்டாம்’னு ஒரு அட்டையில எழுதி தொங்கவிட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டேன். ஒரு மணி நேரத்துல நான் வெச்ச சாப்பாடு காலியாகிடுச்சு.

பசியோடு இருக்குறவங்க யார்கிட்டயும் கையேந்தாம, அவங்களுக்குத் தேவையான உணவை உரிமையாக எடுத்துக்கணும்னு நெனைச்சோம். அதனால வண்டியில சாப்பாட்டைவெச்ச உடனே கிளம்பிடுவேன். அடுத்தடுத்த நாள்ல இது அக்கம்பக்கத்து மக்கள் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திடுச்சுபோல... பலரும், ‘நாங்களும் எங்களால முடிஞ்ச உதவியை செய்றோம்’னு சாப்பாட்டு பொட்டலத்தோட வர ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப கோபிசெட்டிபாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிர்ல ஒரு வண்டி, கச்சேரி மேட்டுல ஒரு வண்டின்னு ரெண்டு வண்டி போட்டாச்சு” என்றவர் இடைநிறுத்தி, “முப்பது சாப்பாடு, 40 மினி தண்ணி பாட்டிலுங்க...” என்று போனில் ஆர்டர் செய்த பிறகு தொடர்ந்தார்...

“பல ஊர்கள்ல இருந்தும், ‘நாங்களும் உதவி செய்யலாமா?’னு தினமும் நிறைய பேர் போன் பண்ணி கேட்குறாங்க. அதுக்கு நான் ‘உங்க ஏரியாவுல நீங்களே உங்க நண்பர்களோட சேர்ந்து உணவு கொடுங்க’னு சொல்லிக்கிட்டிருக்கேன். சுத்துவட்டாரத்துல யாராச்சும் இதே மாதிரி உதவி செய்ய விரும்பினால் பொருளாதாரரீதியாகவும் சப்போர்ட் செய்யத் தயாரா இருக்கேன். இதை ஓர் இயக்கமாக எல்லா ஊர்லயும் முன்னெடுத்தா, ‘பசி’ங்கிறதையே நம்ம நாட்டுல இருந்து விரட்டிடலாம். கோபிசெட்டிபாளையத்துல 365 நண்பர்களைச் சேர்த்து ஒரு குழுவை உருவாக்கி, வருஷம் முழுக்க ஆதரவற்றவங்களுக்குச் சாப்பாடு கொடுக்கலாம்னு ஒரு திட்டம் வெச்சுருக்கேன். எங்களைப் பார்த்து பக்கத்துல கவுந்தப்பாடி, நம்பியூர்னு பல ஊர்கள்ல இதே மாதிரி உதவி செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. சென்னை, திருநெல்வேலின்னு நிறைய ஊர்கள்ல விரைவில் செய்ய இருக்காங்க. இதைப் பார்த்துட்டு இன்னும் நிறைய பேர் இப்படி உதவ முன்வந்தா... அதுதான் எனக்கு ஆத்ம சந்தோஷம்” என்று நெகிழ்கிறார்.

“பசித்தவன் யாரிடமும் கையேந்த வேண்டாம்!” - ஊரடங்கில் துளிர்க்கும் மனிதம்...

கிளமென்ட் பிரேம்குமாரின் முன்னெடுப்பைப் பார்த்துவிட்டு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் ‘ஃபிரெண்ட்ஸ் அசோசியேட்ஸ்’ குழுவினர் இதே போன்று ஏழைகளுக்கு உணவு வழங்கிவருகின்றனர். அந்த அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ் நம்மிடம், “நாங்களும் தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்து தினமும் மதியம் 150 சாப்பாடு, பிரெட், பழம் வெச்சுக்கிட்டு இருக்கோம். கொரோனா தொற்று தீவிரமா இருக்குற இந்தக் காலகட்டத்துல ஆதரவற்றோர்களைத் தேடிப்போய் சாப்பாடு கொடுக்குறதைவிட இப்படி தள்ளுவண்டியில வெக்கிறதுதான் பாதுகாப்பானது!” என்று வேறொரு கோணத்தை முன்வைத்தார்.

கிளமென்ட் பிரேம்குமார் பற்றவைத்த தீ பல இடங்களில் பெரு நெருப்பாய் மாறியிருக்கிறது. எழுக தீ... எரிக தீ... பசி நோய் தீர்க்கும் தீ!