Published:Updated:

9 எலும்பு முறிவுகள்... 8 ஆண்டு போராட்டம்... போலீஸை ‘தண்டம்’ கட்டவைத்த சாமானியன்!

நந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
நந்தகுமார்

ஓவியம்: சுதிர்

9 எலும்பு முறிவுகள்... 8 ஆண்டு போராட்டம்... போலீஸை ‘தண்டம்’ கட்டவைத்த சாமானியன்!

ஓவியம்: சுதிர்

Published:Updated:
நந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
நந்தகுமார்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லிக்கொண்டே அப்பாவிகள்மீது பொய் வழக்கு போடுவதையும், ‘லாக்கப்’ சித்ரவதைகளையும் தொடர்கிறார்கள் போலீஸார். அப்படித் தன்மீது பொய் வழக்கு போட்டு, கொடுமைப்படுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு, தக்க தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நந்தகுமார்.

தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

யார் இந்த நந்தகுமார்?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத கிராவல் மண் கொள்ளை நடந்திருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்ததுடன், கிராவல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்தியவர் சமூக ஆர்வலர் நந்தகுமார். 2014-ம் ஆண்டிலிருந்து இவர் நடத்திய சட்டப் போராட்டம் காரணமாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு நெருக்கமானவர்கள் எனச் சொல்லப்படும் சேனாதிபதி, சுப்பிரமணியம் ஆகியோருக்கு ரூ.7.99 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த அபராதம் இதுவரை வசூலிக்கப்படவும் இல்லை, குற்றவாளிகள் கைதுசெய்யப்படவும் இல்லை.

ஆனால், கிராவல் கொள்ளையை அம்பலப்படுத்திய ‘குற்றத்துக்காக’ நந்தகுமார் மீது ஐந்து பொய் வழக்குகளையும், ஒரு குண்டாஸையும் போட்டது போலீஸ். குண்டாஸில் 55 நாள் சிறைவாசம் அனுபவித்த நந்தகுமாருக்கு, வெளியே இன்னும் மோசமான சம்பவம் காத்திருந்தது. ஆனாலும் பின்வாங்காமல், தன்மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு நீதி கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையப் படியேறினார் நந்தகுமார். அதன் இறுதித் தீர்ப்பில், பொய் வழக்கு பதிவுசெய்த பெருந்துறை டி.எஸ்.பி ராஜாகுமாருக்கு ரூ.5 லட்சம், இன்ஸ்பெக்டர் சுகவனத்துக்கு ரூ.2 லட்சம், எஸ்.ஐ ராம் பிரபுவுக்கு ரூ.2 லட்சம், எஸ்.ஐ எட்வர்டு ராஜூவுக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதைச் சம்பந்தப்பட்ட போலீஸாரின் சம்பளத்தில் பிடித்து, நந்தகுமாருக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும், அந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் மீதும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்.

நந்தகுமார்
நந்தகுமார்

போலி குண்டாஸ்

என்ன நடந்ததென நந்தகுமாரிடம் பேசினோம். “தங்கள் ஆதரவோடு நடக்கும் கிராவல் கொள்ளை விவகாரத்தில் தலையிட்டதால், அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கும், போலீஸாருக்கும் என் மேல செம காண்டு. தோப்பு வெங்கடாசலத்தோட அழுத்தத்தால, பொய் வழக்கு போட்டு என்னைத் தூக்கக் காத்திருந்தது போலீஸ். அந்த நேரம் (2013) பார்த்து, பெருந்துறை சிப்காட்டில் என்னோட கார்மீது ஒரு லாரி மோத, ‘கம்பியை எடுத்து லாரி டிரைவரைத் தாக்கப்போனதா’ என் மேல பொய் வழக்கு போட்டு, தீவிரவாதியைத் தேடுற மாதிரி தேடுனாங்க. உடனே, நான் தலைமறைவு ஆகிட்டேன். அப்ப மட்டும் நான் சிக்கியிருந்தா, அடிச்சே கொன்னுருப்பாங்க. அடுத்து, என்கிட்ட வேலை பார்த்த பெண்ணைத் தகாத முறையில் பேசுனதா இன்னொரு பொய் வழக்கு. அவங்க புகார் சொன்ன தேதியில் குடும்பத்தோட நான் பழநியில் இருந்தேன். 2017-ல் கோழி வாங்குறதுக்காக கோயம்புத்தூர்ல இருந்து பெருந்துறைக்கு வந்த(!) கார்த்திக் என்பவரை, ‘ஏண்டா எனக்கு வணக்கம்வெக்க மாட்டியா’ன்னு நான் கத்தியை எடுத்து குத்தப் போனேனாம். புகார் கொடுத்த ஆளு எங்கே இருக்கான்னு இன்னும் போலீஸாலயே கண்டுபிடிக்க முடியலை... அவ்வளவு மட்டமான பொய் வழக்கு! பிறகு, பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபரான யூ.ஆர்.சி.ராசு என்பவரை, நான் கத்தியால குத்தப்போனதாக மூன்றாவது பொய் வழக்கு போட்டாங்க. இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொன்னப்ப நான் வீட்ல இருந்ததற்கான சிசிடிவி ஆதாரத்தைக் கொடுத்திருக்கேன். எல்லா வாய்தாவுக்கும் முறையா கோர்ட்டுக்குப் போயி, இது பொய் வழக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.

சசிமோகன்
சசிமோகன்

அந்த வழக்குகளால ஒண்ணும் செய்ய முடியாததால, குண்டாஸ் போட்டு என்னை சிறையில் அடைச்சாங்க. 55 நாள் கொடுஞ்சிறை. சிறையிலிருந்தபடியே வழக்கு நடத்தி, குண்டாஸை உடைச்சுட்டு விடுதலையானேன். வெளியே வந்த ஒரு வாரத்துல, கிராவல் கொள்ளையர்களான சேனாதிபதி, சுப்பிரமணியம் ஆகியோர் என்னைக் கடத்திட்டுப் போய் கொலைவெறித் தாக்குதல் நடத்துனாங்க. உடம்புல ஒன்பது எலும்பு முறிவுகள் ஏற்பட்டு, 32 நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். இந்தத் தாக்குதல் பற்றியும், ‘15 லட்சம் செலவு பண்ணி உன்னை குண்டாஸ்ல உள்ள போட்டோம். எப்படி வெளியே வந்தே... தோப்பு வெங்கடாசலத்தை எதிர்த்தா உன்னை உயிரோட விட மாட்டோம்’னு அவங்க மிரட்டுனதையும் போலீஸ்கிட்ட வாக்குமூலமாகக் கொடுத்தேன். பெருந்துறை போலீஸார் அதையெல்லாம் எஃப்.ஐ.ஆர்-ல சேர்க்கலை. குற்றவாளிகள்மீது கொலை முயற்சி வழக்குகூடப் போடாம, வாய்த் தகராறில் கையால தாக்குனதா டம்மி செக்‌ஷன் போட்டாங்க. செய்யாத தப்புக்காக என்னைச் சிறையில் அடைத்த போலீஸ், கொலைவெறித் தாக்குதல் நடத்துன ஆட்களை இதுவரைக்கும் கைதுகூட பண்ணலை!

தீர்ப்பு ஒரு பாடம்!

இப்படியான சூழல்ல, பொய் வழக்கு போட்டு என்னைக் கொடுமைப்படுத்திய போலீஸாருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் கொடுத்திருக்கும் இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சட்டவிரோத காரியங்களைத் தொழிலாகச் செய்கிறவர்கள் மீது குண்டாஸ் போடுவதை விட்டுவிட்டு, புகார் கொடுத்தவன் மீது குண்டாஸ் போட்டால் காவல்துறைமீது பொதுமக்களுக்கு எப்படிங்க நம்பிக்கை வரும்... தமிழ்நாடு முழுக்க கனிம வளக் கொள்ளையைத் தடுக்கிற சாமானியர்களை என்னைப்போலத்தான் கொடுமைப்படுத்துறாங்க. அரசியல்வாதிகளின் முதல் ஆயுதமே காவல்துறைதான். அரசியல்வாதிகளை நம்பி, தவறு செய்கிற காவல்துறையினருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்.

என்மீது நடந்த கொலைவெறித் தாக்குதலுக்கு லோக்கல் போலீஸ்கிட்ட நியாயம் கிடைக்கலைன்னு, நீதிமன்றம் மூலம் சி.பி.சி.ஐ.டி விசாரணை வாங்கியிருக்கேன். அதேபோல, எட்டு வருஷமாக கிராவல் கொள்ளைக்கு எதிராகப் போராடியும், மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்கலை. அதனால, மத்திய கனிம வளத்துறை விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்துல வழக்கு போட்டிருக்கேன். அதுலயும் ஜெயிப்பேன்னு நம்பிக்கையிருக்கு” என்றார்.

9 எலும்பு முறிவுகள்... 8 ஆண்டு போராட்டம்... போலீஸை ‘தண்டம்’ கட்டவைத்த சாமானியன்!

நடவடிக்கை எடுப்போம்!

போலீஸாரைவைத்து பொய் வழக்கு போட்டதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலத்திடம் பேசினோம். “நான் எம்.எல்.ஏ-வாக இருந்தப்பதான், கிராவல் மண் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவங்க எனக்கு வேண்டப்பட்ட ஆட்களாக இருந்திருந்தா, அபராதம் போட்டிருக்கவே மாட்டாங்களே... போலீஸை நான் தூண்டிவிட்டதாச் சொல்றதுல என்ன ஆதாரம் இருக்கு... யாரோ ஒரு சீட்டிங் பேர்வழி சொன்னதுக்கெல்லாம் என்கிட்ட பதில் கேட்டா என்ன அர்த்தம்... நான் இப்போ இருக்குற இயக்கத்துல (தி.மு.க), எனக்கு கெட்ட பெயர் உண்டாக்கணும்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்க. அரசியல் போட்டி, பொறாமையால் யார் வேணும்னாலும் புகார் சொல்லலாம். அதெல்லாம் உண்மையாகிடுமா?” என்றார் கோபமாக.

போலீஸார்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்ப்பு குறித்து, ஈரோடு எஸ்.பி சசிமோகனிடம் பேசினோம். “நான் இங்க வர்றதுக்கு முன்னாடி நடந்த விவகாரம் இது. அதைப் பத்தி முழுசாத் தெரியாம நான் எதுவும் சொல்ல முடியாது. போலீஸ் பொய் வழக்கு போட்டாங்கன்னு சொல்றது அவரோட (நந்தகுமார்) கருத்து. நீங்க சொல்ற மாதிரி, மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து இதுவரை எந்த உத்தரவும் எனக்குக் கிடைக்கலை. கடிதம் கிடைத்ததும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயமாக எடுப்போம்” என்றார்.

சாமானியன் மீது காட்டிய அதே வேகத்தை, குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் காட்டுமா காவல்துறை?!