Published:Updated:

அத்தியாவசியப் பொருள்களின் நிலை என்ன?

தட்டுப்பாடு... விலையேற்றம்...

பிரீமியம் ஸ்டோரி
மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்தச் சூழலில், ‘‘அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருள்களின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது” என்று கதற ஆரம்பித்துள்ளனர் பொதுமக்கள்.

சில்லறை வியாபாரிகள் ஆர்டர் செய்யும் பொருள்களை மொத்த வியாபாரிகள் சப்ளை செய்வது வழக்கம். ஆனால், தற்போது காவல்துறை கெடுபிடி உள்ளிட்ட சில காரணங்களால் பெரும் பாலான மொத்த வியாபாரிகள் பொருள்களை சப்ளை செய்வதில்லை. எனவே, தட்டுப்பாடு அதிகரித்து தாறுமாறாக விலை உயர்ந்துவருகிறது என்பதுதான் பொதுமக்களின் புகார்.

விக்கிரமராஜா -கிருஷ்ணமூர்த்தி - கார்த்திகேயன்
விக்கிரமராஜா -கிருஷ்ணமூர்த்தி - கார்த்திகேயன்

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம். ‘‘இப்போது பொருள்களை கொள்முதல் செய்ய சில்லறை வியாபாரிகளே போக்குவரத்து வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு, வியாபாரிகளுக்கு இந்தச் செலவு கிடையாது. ஆர்டர் கொடுத்தால் கடைக்கே பொருள்கள் வந்துவிடும். இப்போது போக்குவரத்துக்குச் செலவையும் பொருளின் விலையில் சுமத்தும்போது விலை ஏறுகிறது. சில மொத்த வியாபாரிகள், இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி செயற்கையாக விலையேற்றத்தை உருவாக்கு கின்றனர். யார் யார் அப்படிச் செய்கின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம். ஓரிரு தினங்களில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அரசிடம் பரிந்துரை அளிக்க உள்ளோம்.

இப்போதுள்ள விதிமுறைப்படி கடைகளை 6 மணிக்குத் திறந்து 1 மணிக்கு மூட வேண்டும். இந்தக் காலக்கெடுவாலும் சில நடைமுறைச் சிக்கல்கள் உருவாகின்றன. பொதுவாக டீலர்களிட மிருந்து பொருள்கள் கடைகளுக்கு வருவதற்கு மதியத்துக்குமேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் கடையை அடைத்துவிடுவதால் டீலர்களால் பொருள்களை விநியோகம் செய்ய முடிவதில்லை. எனவே, காலையில் கடைகளை சற்று தாமதமாகத் திறந்து அதற்கேற்றாற்போல் மூடும் நேரத்தை அதிகரிக்கலாம் என்று அரசிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அப்படிச் செய்தால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்” என்றார்.

அத்தியாவசியப் பொருள்களின்
நிலை என்ன?

சமையல் எண்ணெய் விலை உயர்ந்திருப்பதன் காரணம் குறித்து, மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய்வித்துக்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம். ‘‘வியாபாரிகளைப் பொறுத்தவரை நியாய விலைக்குத்தான் விற்கின்றனர். பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரி வாடகை கூடிவிட்டது. அதைச் சமாளிப்பதற்காக சில சில்லறை விற்பனை கடைகளில் விலை ஏற்றி விற்பனை செய்கின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆனால், குறைவான பணியாளர்களே வேலைசெய்கின்றனர். இதனால் உற்பத்தி மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. அதுபோக, ரேஷன் கடைகளுக்கு சமையல் எண்ணெய் விற்கப்படுகிறது. அத்துடன் சமையல் எண்ணெய் பேக்கிங்குகளுக்கான அட்டைப்பெட்டி, பவுச், பெட் பாட்டில் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலிலும் மே மாதம் முதல் வாரம் வரை பெரியளவு தட்டுப்பாட்டு ஏற்படாது. அதற்குமேல்தான் சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும்” என்றார்.

‘‘மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குத் தேவையான பருப்பு வகைகள் வர வேண்டியுள்ளன. தற்போது லாரிகள் சரிவர இயங்க அனுமதிக்கப்படாததால், பருப்பு வரத்து குறைந்துவருகிறது. கைவசம் இருக்கும் பருப்புகள் வேகமாகத் தீர்ந்துவருகின்றன. பருப்பு மூட்டைகள் பெருமளவு வந்தால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும்’’ என்கின்றனர் பருப்பு வியாபாரிகள்.

பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பொறுத்தவரை, விநியோகஸ்தர்களிடம் வாங்கும்போது டிஸ்கவுன்ட் தரப்படும். ஆனால், தற்போது டிஸ்கவுன்ட் எதுவும் வழங்கப் படுவதில்லை என்கின்றனர். மொத்த விலை கடையிலும் எம்.ஆர்.பி-க்குத்தான் விற்பனை செய்யப்படுகிறதாம். வண்டி வாடகை கொடுத்து வாங்கி வந்து விலையை உயர்த்தி விற்றால், வாடிக்கையாளர்களிடம் கெட்டபெயர் கிடைக்கும் என்பதால் சில்லறை வியாபாரிகள் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்குவதையே தவிர்ப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பு சொல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது சோப்களால் கை கழுவும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே, சோப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. சோப்பு வகைகள் அத்தியாவசிய உணவுப் பொருள்களில் வராது என்பதால், அவற்றை விநியோகம் செய்வது தடுக்கப்படுவதாகவும், இதன் காரணமாக சோப்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயனிடம் விசாரித்தோம். “தற்போது சோப்களை விநியோகிக்கும் நிறுவனத்துக்கு, பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, அவர்களால் சில்லறை வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய முடிவதில்லை. கடைக்காரரே வாடகைக்கு வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்முதல் செய்து வந்து விற்றால் லாபமே இருக்காது. வாகனங்களின் வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான கூலியும் அதிகரித்துள்ளது. எனவே சோப், பிஸ்கட்களை விற்பனை செய்வதையே தவிர்க்கின்றனர். தற்போது ஊரடங்கு மேலும் 19 நாள்கள் அதிகரித்துள்ள சூழலில், அத்தியாவசியமான பொருள்கள் மட்டுமன்றி, துணி, பேன்சி, பாத்திரம், காலணி, சலூன் உள்ளிட்ட பல கடைகளுக்கான தேவை அதிகரித் துள்ளது. எனவே, ஒவ்வொரு நாளும் சுழற்சிமுறையில் ஒவ்வொரு கடைகளைத் திறப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

வைரஸைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவு விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவதும் அவசியம். பொருள் களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதை அரசு உணர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு