Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 11 - நேயம் கரைத்த தலைமுறை!

நேயம் கரைத்த தலைமுறை!
பிரீமியம் ஸ்டோரி
நேயம் கரைத்த தலைமுறை!

இந்த வாரம் கலாப்ரியா - ஓவியங்கள்: நீலன்

எதுவும் கடந்து போகும்! - 11 - நேயம் கரைத்த தலைமுறை!

இந்த வாரம் கலாப்ரியா - ஓவியங்கள்: நீலன்

Published:Updated:
நேயம் கரைத்த தலைமுறை!
பிரீமியம் ஸ்டோரி
நேயம் கரைத்த தலைமுறை!
கலாப்ரியா
கலாப்ரியா

தலைமுறைதோறும் இயற்கைக்கு எதிரான போரில் அல்லது இயற்கையைக் கண்டுணரும் முயற்சியில் சமூகக் கட்டுமானங்கள் உருவாவதும் உடைவதும் மறுபடி புதியவை உருவாவதும் உடைவதும் என ஒரு சங்கிலியின் கண்ணிகளாக நீள்வதுதான் வாழ்க்கை. சங்கிலியின் கண்ணிகள் என்கிறபோது ஒன்றுக்கொன்று தொட்டுக்கொண்டும் தொடாமலும் கிடப்பது என்பது ஒரு முரண். அது போலத்தான் வாழ்க்கை முரணும். அதாவது. தலைமுறைகளுக்கிடையில் இடைவெளி இருக்கும். ஆனால் தொடர்பே இல்லாமலிருக்காது. தொடர்பு என்கிறபோது எனக்கு அந்தக்காலத்துத் தெருக்களும், ஒன்றுக்கொன்று தொட்டுக் கொண்டும் தொடாமலும் நிற்கும் தொடர்ச்சியான வீடுகளும் நினைவுக்கு வருகிறது. எப்போதுமே நான் நினைவுகளின் மனிதன்தானே.

அப்போதெல்லாம், ``ஒரு கல்யாணம் காட்சின்னு வந்தா வீட்டு முன்னால் ‘சிலாவத்தா’ இடம் வேண்டாமா” என்று நினைத்து வீடுகளின் முன் பெரிய முற்றங்கள் வைத்துக் கட்டுவார்கள். இப்போதும் ரெண்டு கார் விடுகிற அளவு இடம் வேண்டாமா என்று யோசிக்காமல் இல்லை. அப்போது இரண்டு வீட்டு முற்றங்களுக்கு இடையில் சுவர்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு கதவு அல்லது கதவின் அளவில் பொய்ச் செங்கல் என்கிற ‘வேவாரியான’ (நன்றாக வேகாத) செங்கல் வைத்துக் கட்டியிருப்பார்கள். ஒரு வீட்டில் கல்யாணம் சடங்கு என்று வந்தால் அந்தக் கதவு போன்ற பகுதியைத் திறந்து விடுவார்கள். சுமார் நாலைந்து வீடுகளின் முற்றம் ஒன்று சேர்ந்துவிடும். அங்குதான் திருமணச் சடங்குகளும் சாப்பாட்டுப் பந்திகளும் நடைபெறும்.

எதுவும் கடந்து போகும்! - 11 - நேயம் கரைத்த தலைமுறை!

அந்த ஐந்தாறு வீட்டுக்காரர்களுக்கும் ஒரு வாரத்திற்குக் கல்யாணச் சாப்பாடுதான். ஒரு கல்யாணம் என்றால் சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே வந்துவிடுவார்கள். வீட்டில் வேறு செல்வத்துக்குப் பஞ்ச மென்றாலும் `மக்கட் செல்வங்க’ளுக்குப் பஞ்சமே இருக்காது. சமயத்தில் கல்யாண மாகிறவரின் அம்மா கைக்குழந்தையோடோ வயிற்றுப் பிள்ளையோடோ அங்குமிங்கும் நடமாடுவாள். (என் பெரிய அண்ணனுக்குக் கல்யாணம் ஆகும்போது நான் பதினொரு மாசப் பிள்ளை, அம்மா இடுப்பை விட்டு இறங்க மாட்டேனாம்)

தினமும் ஒரு பொரியல், அவியல், கூட்டு, ஒரு பச்சடி, ஒரு பாயசம், அப்பளம், மெதுக்கு வத்தல் என்று ஒரு வகைக்கறியும்; கல்யாணத்தன்று இரண்டு பொரியல், அவியல், இரண்டு கூட்டு, இரண்டு பச்சடி, இரண்டு பாயசம் என்று இருவகைக் கறியுமாக அமர்க்களப்படும். அவ்வளவுக்கும் உறவுக்காரர்கள் நண்பர்களின் ஒத்தாசை சொல்லி மாளாது. நீண்ட முற்றத்தில் பதின்பருவத்துப் பிள்ளைகள் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு ஓடவும் சாடவும் ஒளியவுமென கச்சக் காலடித்துக்கொண்டிருப்போம். ``கல்லா, மண்ணா?”, ``வாட் வாட் கலர் இஸ்?”, ``கிளித்தட்டு,” ‘‘பாண்டி”, ‘‘ஐஸ் பால்’’ என அல்லோலகல்லோலப்படும். ‘ஐஸ் பால்’ விளையாட்டில், சமைந்திராத பெண்பிள்ளைகளுடன் ஒளிந்துகொள்ள நேர்ந்தால் அதுவே ‘தொட்டுப் பிடிச்சு’ விளையாட்டாகவும் மாறிவிடும். அது ஒருவகை `கம்யூன் லைஃப்.’ கூட்டு வாழ்க்கை.

இப்போது அடுக்கக வீடுகளில் முற்றம் ஏது. பெரிய கல்யாண மண்டபங்களில் திருமணம். வாசலில் வரவேற்புக்குக்கூட உறவினர்கள் நிற்பதில்லை. அதற்கென்றே ஆயத்தப் புன்னகையுடன் அழகான பெண்கள், பந்தி பரிமாற சீருடையுடன் ஆட்கள் உட்பட எல்லாமே கேட்டரிங் சர்வீஸ் பொறுப்பு. அருமையான நாகஸ்வர, இசைக்கச்சேரிகளுக்குப் பதில் லைட் மியூசிக். அதற்கேற்றாற்போல திருமணத் தம்பதியர் உட்பட இளைய, சின்னஞ்சிறுசுகளின் கொண்டாட்டமான நடனம். உறவுக்காரர்கள், கல்யாண நேரத்திற்கு காரில் வந்துவிட்டு காரிலேயே போய்விடுவார்கள். கார் நிறுத்தத்தான் கனபாடு படவேண்டும். காரில் வருபவர்களுக்கு டிராஃபிக் ஜாம் கற்பனைகள் தறிகெட்டு ஓடும்.

இப்போது வீட்டுக்கு வீடு ஒன்றோ இரண்டோதான் குழந்தைகள், அவர்களும் கல்யாணத்திற்கு வா என்றால், “ஐயோ, போரடிக்கும். நான் வர மாட்டேன்’’ என்று தவிர்த்துவிடுகிறார்கள், அப்படியே வந்தாலும் அவரவர்கள் தங்கள் தங்கள் ஆண்ட்ராய்டு செல்போனுடனேயே ஒட்டிக்கொண்டிருப்பார்கள். கல்யாண வீட்டின் ‘ஒரு வகைக் கறி’, ‘இரண்டு வகைக் கறி’ பிரியாணி, தால்சா, நெய்ச்சோறு, கறிக்குழம்பு, கத்திரிக்கா ஆ(வ)ணம் எல்லாம் பிடிக்கவும் பிடிக்காது, தெரியவும் தெரியாது. காய்கறிகளை நிறையச் சேர்க்க வேண்டும் என்கிற தெல்லாம் பேலியோ டயட் ஆசாமி களுக்கே. இப்போதைய திருமணங்களில் குழந்தைகள் சரியாய்ச் சாப்பிடவும் மாட்டார்கள், அந்த ஊரில் நல்ல பீஸா, பர்கர், கே.எஃப்.சி சிக்கன் கிடைக்குமா என்று வருகிற வழி பூராவும் நச்சரிப் பார்கள். கல்யாண வீட்டில் குட்டிக் கப்பில் தரும் வனிலா ஐஸ்கிரீமைக் கூடச் சீண்ட மாட்டார்கள். ஆனால் திரும்புகிற வழியில் எங்காவது ஐபாக்கோ ஐஸ்கிரீம் கடையிருக்கிறதா என்று கூகிள் பண்ணிப் பார்த்து நிறுத்தச் சொல்வார்கள். அங்கேயும் நான்கு பேருக்கு ஆயிரம் ரூபாய்க்குக் குறையாத பில் வரும். அதைக் கொடுத்துவிட்டு, காலணாவுக்குக் குச்சி ஐஸ் வாங்கித் தின்றுவிட்டு வெறும் குச்சியையும் விடாமல் நக்கிக் கொண்டிருந்த மூத்த தலைமுறை விழி பிதுங்கி நிற்கும்.

நாலைந்து தலைமுறையினரைப் பார்த்து மூன்று தலைமுறையினருடன் வாழ்ந்து வருகிறேன். உறவுப் பழக்கங்களுக்கு இடையேயும் உணவுப் பழக்கங்களுக்கு இடையேயும் எவ்வளவு வித்தியாசம். கல் உப்பு, பொடி செய்த உப்பு, அயோடின் கலந்த உப்பு, அஜினோமோட்டோ உப்பு என நான்கு வித உப்புக்களை நாக்கு ருசித்துவிட்டது.

ஒரு காலத்தில் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிக்குப் போய் மகிழ்ச்சியில் பங்கெடுக்கவில்லையென்றாலும் துயர நிகழ்ச்சிகளுக்குப் போயே ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்த வாழ்வு இது. ஒரு வீட்டின் தலையாய உறுப்பினர் இறந்துபோனால் அந்தக் குடும்பம் எப்படித் தவிக்குமோ என்று யோசித்தே துஷ்டி வீடுகளுக்குச் செல்லும்போது அரிசி, கருப்பட்டி (ஒப்பாரி பாடுபவர்களுக்கு சுக்குமல்லிக் காப்பி போட), தேங்காய் (சிலர் காய்கறிகளும்) கொண்டு போவதையும், மயானக் கரையில் ஊர், இனக் கட்டுப்பாடாக தலைக்கட்டு வரி போலக் கொடுப்பதையும், கருமாதி விசேஷங்களில் மொய் எழுதுவதையும் முக்கியச் சடங்காக மட்டுமல்லாமல் கண்டிப்புடன் அமல்படுத்தி வந்தார்கள். இன்றும் கிராமங்களில் இவை இருக்கின்றன.

எதுவும் கடந்து போகும்! - 11 - நேயம் கரைத்த தலைமுறை!

ஆனால் அப்பாவும் அம்மாவும் தாய்நாட்டில், பிள்ளைகள் கடல் கடந்து அயல்நாட்டில். பெற்றோர்களில் யாருக்கேனும் ஏதேனும் அமங்கலம் நிகழ்ந்து விட்டால், பிள்ளைகள் விமானம் பிடித்து வந்து சேரவே இரண்டு நாட்களாகி விடும். அதற்குள் அடுக்கக அண்டை வீட்டார், ‘‘இன்னும் பொணத்தை எடுக்கலையா, ஏன் இவ்வளவு கூட்டம், நாங்க நடமாடவே முடியலையே” என்று நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் வராமலேயேகூடக் காரியங்களைத் தொடங்கி முடித்தே விடுகிறோம். முற்றத்தில் போட்டு உறவு கூடிக் குளிப்பாட்டி சடங்கு செய்து ஊர் கூடி மயானத்திற்குத் தோளில் சுமந்து போன காலமெல்லாம் போய்விட்டது. இப்போது மின் மயானத்திற்கு சொற்ப எண்ணிக்கையில் சொந்தக்காரர்கள் நண்பர்கள் உடன் வர அமரர் ஊர்தியில் அல்லது தனியாரின் சொர்க்க ரதத்தில் பயணம். ஒரு மணிநேரத்தில் அஸ்திக் கலயம் சுடச் சுட வந்துவிடும். யாராவது தூரத்துச் சொந்தமானவர்கள் வாங்கி அடுத்த அரை மணி நேரத்தில் கரைத்துவிட்டு, காரிலோ பைக்கிலோ போய்விடுகிறோம். நேரம் எவ்வளவு மிச்சம். ஆனால் நேயம், மனித நேயம், அதைத்தான் அந்த அஸ்தியோடு கரைத்துவிடுகிறோமே.

இந்தக் கூட்டு வாழ்க்கை மறுக்கப்பட்ட புதிய தலைமுறையினருக்கு அதோடு பல ஆறுதல்களும் மறுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் அப்பா அம்மா இருவரையும் சாவுக்குப் பலி கொடுத்துவிட்டு வெளிநாட்டிலிருந்து வரவே முடியாமற் போன நாலைந்து குழந்தைகளை நான் நன்கறிவேன். அவர்கள் இந்தக் குற்ற உணர்வோடுதானே தங்கள் மிச்ச வாழ்வைக் கழிக்க வேண்டும். கால இடைவெளி அல்லது தலைமுறை இடைவெளியால் ஏற்படும் புற பாதிப்புகளைப் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் தந்திருக்கும் புதிய புதிய கொண்டாட்டங்கள் மூலம், ‘பப்’களின் ஆட்டபாட்டத்திடையே சுழித்தோடும் வியர்வையில், கரைக்கப் பார்க்கலாம். ஆனால் மனம் தரும் தண்டனை உணர்விலிருந்து எப்படித் தப்பிக்கமுடியும் அந்தக் குழந்தைகள்.

பெர்னாட் ஷா சொல்வது போல வாழ்க்கை ஒரு சிறிய தீக்குச்சி நெருப்பு மட்டுமல்ல, அது தொடர் ஓட்ட ஜோதி.அது இப்போது நம்மிடம் இருக்கிறது. அதன் வீரியம் குறையாமல் அதை அடுத்த தலைமுறையினர் கைகளுக்குக் கடத்துவது நம்முடைய கடமை. நமக்கு வெளிச்சம் பாய்ச்சிய கூட்டு வாழ்க்கை என்கிற ஜோதியை வழங்கி புதிய தலைமுறையினரை காலச் சங்கிலியின் அடுத்த கண்ணிகளாக இணைத்து தொடர்பறாமல் பார்த்துக் கொள்வோம்.

- இடைவெளி இணைப்போம்!