Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 15 - பெற்றதும் இழந்ததும்...

எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

இந்த வாரம் முனைவர் வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர் - ஓவியங்கள்: நீலன்

எதுவும் கடந்து போகும்! - 15 - பெற்றதும் இழந்ததும்...

இந்த வாரம் முனைவர் வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர் - ஓவியங்கள்: நீலன்

Published:Updated:
எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. பால்யமாக, இளைஞர் பருவமாக, குழந்தைக்குத் தந்தையாக, மருமகனுக்கு மாமனாராக, பேரக்குழந்தைகளுக்குத் தாத்தாவாக என்று நம் பருவகாலம் சுழன்றடிக்கிறது. நேற்று பார்த்ததைப் போல இன்று இல்லையே என்பது இயல்பான ஒன்றுதான். ஏனென்றால், நாம் மாற்றத்தை நோக்கியல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம். சின்ன வயதில் ஒரு கடையில் சாப்பிட்ட உணவு, இப்போது அதே கடைக்குப் போனவுடன், அந்த ருசி இருப்பதில்லையே ஏன்? ஏனென்றால் நாம் மாறி இருக்கிறோம். அன்றிருந்த அதே உணவுதான் அது. ஆக, உணவு அப்படியேதான் இருக்கிறது. நம்முடைய பருவம்தான் மாறிவிட்டது.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

சின்ன வயதில் தட்டாம்பூச்சி பிடித்த விளையாட்டை, இன்று நினைத்தாலும் மனது குதூகலிக்காமல் இருப்பதில்லை. கம்மங்காட்டுக்குள், சோளத்தட்டைகளுக்குள், பருத்திக்காடுகளில் பருத்தி எடுத்தது முதல் கத்தரிக்காய் பறித்தது வரை பால்யத்தின் காலம் ஒரு பிரமிப்பையும், இனம் புரியாத விவரிப்பையும் நமக்குக் கற்றுத் தந்தது. ஆனால், நம் பருவங்கள் மாறிவிட்ட பிறகு, நம் வயது ஏறிவிட்ட பிறகு, கிராமப்புறத்திற்கு நமது பிள்ளைகளை அழைத்துச் செல்கிறபோது, `கையைத் தரையில் வைக்காதே, கையெல்லாம் மண் ஒட்டிடும்!’ என்கிற மாற்றத்தோடல்லவா நாம் செல்கிறோம்.

வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. ‘நான் என்பது என்னோடு முடிவதில்லை’ என்றார் நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா. அந்த வரிகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?! தாத்தாவின் தொடர்ச்சியாக அப்பாவும், அப்பாவின் தொடர்ச்சியாக மகனும், மகனின் தொடர்ச்சியாகப் பேரனும் என்று வெவ்வேறு மாற்றங்களுடன் வாழ்க்கைப் பாதையில் செல்கிறார்கள் அல்லவா! பாட்டியும் அம்மாவும் மகளும் பேத்தியும் என்ற ஒரு நீண்ட தொடர் பழக்கவழக்கம், பண்புநலன் இவை தொடரத்தான் செய்கிறது.

என் பால்ய காலத்தைத் தூசி தட்டித் துடைத்துப் பார்க்கிறேன். தாத்தாவும் பேரனும் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன காரணம்? ஏனென்றால், இருவருக்கும் பொது எதிரி அப்பாதானே! நம் கனவுகளைத் தாத்தாவிடம் சொல்வதும், தாத்தா பேரனுக்குக் கதைகள் சொன்னதும், வாழ்வின் நிதர்சனமான உண்மைகள் கடந்து போகிறபோது, தாத்தாவுக்கும் பேரனுக்குமான அன்பை எந்தக் கட்டத்திலும் பிரித்துவிட முடியாது.

கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்ற போதும், காட்டுக்கு அழைத்துச் சென்ற போதும் எதை வேண்டுமானாலும் கேட்டவுடன் வாங்கித் தருகிற என் தாத்தாவின் பழைய ஞாபகங்களை நினைக்கிறபோது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லைதான். இந்த உறவு தந்தைக்கும் மகனுக்குமான இடைவெளியைக் காட்டியது. ஆனால், இன்று என் மகனோ, மகளோ எனக்கும் அவர்களுக்குமான நெருக்கம், என் தந்தைக்கும் எனக்குமான நெருக்கத்தைவிடக் குறைவான தூரமே. கூட்டாஞ்சோறு சாப்பிடுவது, காட்டு வழிகளில், வயல்காடுகளில், களத்துமேடுகளில், கம்மாய்க்கரைகளில், ஆற்று வெளிகளில் என்று கட்டற்ற சுதந்திரத்தை உணர முடிந்தது. ஆனால், இன்று நம் பிள்ளைகளைக் கண்காணித்துக் கொண்டி ருக்கிறோம். தங்களுடைய சுதந்திரம் பறிபோனதாக அவர்களுக்கும் தெரியவில்லை.

நிலாச்சோறோ, கிராமத்து வாழ்க்கையோ எதுவும் தெரியாது. அத்தை, மாமன், அக்கா, தங்கை, பெரியம்மா, சின்னம்மா, உற்றார், உறவினர் என்கிற உறவுமுறைகள் குறைந்து விட்டது. நமக்குப் பிறகான அந்த உறவுமுறைகளின் தொடர்ச்சி தொடருமா என்பது கேள்விக்குறியே! நம் வேர்களைத் தேடிச் செல்லாத நம் விழுதுகளாக அவர்கள் தனித்து விடப்படுவார்களோ என்கிற அச்சம் எழுகிறது. பல தாத்தாக்கள், பாட்டிகள் தலைமுறை இடைவெளியோடு தங்களது எஞ்சிய வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

சொந்தங்களின் தூரம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தொலைபேசி பேச்சுக்கள் நம்மை அருகருகே அழைத்தாலும், காகிதப்பூக்களால் நறுமணத்தைத் தர முடியுமா? இன்றைய கலாசாரச் சிக்கல்களோடு, பழைய தலைமுறையால் ஒன்றிப் பிடிக்க முடியவில்லை. ஆண்டிராய்டு கைப்பேசியில் எனக்குத் தெரிந்ததைவிட என் மகள் நுட்பமாகக் கையாளுகிறாள். நாளை என் பேரனுக்கும் இதைவிடத் திறமை பெருகலாம். விஞ்ஞானம் வளர்கிறது. உறவுகளின் தூரம் குறைகிறது.

எதுவும் கடந்து போகும்! - 15 - பெற்றதும் இழந்ததும்...

இரவு முழுவதும் பாட்டியிடம் கதைகள் கேட்டுத் தூங்கிய காலம் மலையேறிவிட்டது. ‘வீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம், அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்’ என்கிற கவிதைதான் நினைவுக்கு வருகிறது. தாத்தாவும் பாட்டியும், அனுபவமும் நாம் நுகர்ந்து பார்த்தாலே நிச்சயம் நம்முடைய வாழ்க்கை தவறுகள் இன்றிப் பயணிக்கும்.

கோரைப்பாயில் படுத்துத் தூங்கியவனை ஐந்து நட்சத்திர ஓட்டலில் தூங்க வைத்தால், எப்படி அந்நியப் பட்டுப்போகுமோ அதுபோன்றதொரு இடைவெளியே மூன்று தலைமுறை இடைவெளி. அப்போதெல்லாம் கேட்டவுடன் பணம் கிடைப்பதில்லை. ஆயிரம் தடவை யோசிப் பார்கள், பையன் கெட்டு விடுவான் என்று. ஆனால், இப்போதெல்லாம் தாயும் தந்தையும் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக் கிறார்கள். ‘தனக்குத்தான் அனுபவிக்க முடியவில்லை, நம் பசங்களாவது அனுபவிக் கட்டுமே’ என்ற எண்ணம் இத்தலைமுறைக்கு இருக் கிறது. குழந்தையைக் கொஞ்சி மகிழுங்கள். ஆனால், அதிக செல்லம் ஆபத்தை ஏற்படுத்திவிடும் அல்லவா! குழந்தைகள் தங்களது தேவைகளை வாய் விட்டுக் கேட்கட்டும். கேட்பதற்கு முன்பாகவே எடுத்துத் தந்து விடக்கூடாது. தங்களின் பசியை உணர்ந்து அழுது வெளிப்படுத்தட்டும். ஆனால், பசிக்கு முன்பே உணவு கொடுத்து விடக்கூடாது.

அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு அரைக்கால் சட்டை போட்டுக்கொண்டு போன நிகழ்வும், இன்று 70 வயதுப் பெரியவர் முக்கால் பேன்ட் போட்டுக்கொண்டு வருவதும் நடக்கத்தான் செய்கிறது. முடி வெட்டக் காசில்லாமல் முடி காடாக வளர்ந்திருக்கும். இப்போது அதுவே ஃபேஷன் என்கிறார்கள். பேன்ட்களைக் கிழித்துக் கொண்டு போடுவதுகூட வறுமையின் அடையாளம் அல்ல; அது செல்வச்செருக்கின் அடையாளம் என்கிற எதிர்மறைப் பண்பாடு வளர்ந்து நிற்கிறது. அன்பையும் சகிப்புத்தன்மையையும், கடந்த தலைமுறை நமக்குக் கற்றுத் தந்தது. ஆனால், இப்போதைய தலைமுறை சுயநலத்தை மட்டுமே வைத்துச் சுழன்றுகொண்டிருக்கிறது.

எதுவும் கடந்து போகும்! - 15 - பெற்றதும் இழந்ததும்...

எங்கேயாவது குடும்ப நிகழ்ச்சிகளில் சந்திக்கிற போது பல பெரியவர்கள் தாங்கள் வைத்திருக்கின்ற செல்போனில் பல்வேறு சந்தேகங்களை, பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். `உங்கள் வீட்டில் பி.இ., பி.டெக்., எம்.எஸ்ஸி படித்தவர்கள் இருப்பார்களே! அவர்களிடம் கேட்கலாமே?’ என்று கேட்டால், ‘எங்கம்மா அவங்க எங்களுக்குச் சொல்லித் தர்றாங்க, அவங்களுக்கு நேரமே இல்லை’ என்று பதிலைச் சொல்கிறபோது தலைமுறைக்கான இடைவெளி வெளிப்பட்டு விடுகிறதல்லவா!

உங்களைக் கொண்டாடி மகிழ்ந்த பெற்றோருக்கு, நீங்கள் காட்டுகிற கைம்மாறு இதுதானா? எதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளடா என்று சொல்லி, தோளில் சுமந்த அப்பாவின் ஞாபகம் இருந்தும், நிலாவைக் காட்டிச் சோறூட்டிய அம்மாவின் அன்பு ஞாபகம் இருந்தும், நிறைய பிள்ளைகளுக்கு சோறு போடத்தான் மனசு வரவில்லை.

தலைமுறை என்பது ஒன்றில் இருந்து இன்னொன்று படிப்படியாகத் தோன்றி வளரும் படிநிலைகள் என்பார்கள். ஆனால், இந்தப் படிநிலை என்பது கண்ணீர் வடிக்கத் தகுந்ததல்லவா! தலைமுறை என்று சொன்னால் வாழ்க்கையை உருவாக்கும் ஒரு செயல்முறை என்பார்கள். ஆனால், உருவாக்கியவர்களை மறந்துவிடுவது என்பது எத்தகைய நியாயத்தைப் பெற்றதாக இருக்கிறது. ஒரு வரலாற்றுச் சுழற்சியைக் குறிக்கும் இந்தச் சொற்றொடர் வரலாற்றுப் பிழையை அல்லவா தந்துவிடுகிறது.

ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளிடம் ஒரு சர்வே எடுத்தார்கள். உங்களுக்குத் தெரிந்த புத்திசாலி யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. எல்லாக் குழந்தைகளும் தன் வகுப்பில் உள்ள சக மாணவர்களையே சொன்னார்கள். ஒரு குழந்தைகூட தன் பெற்றோர் பெயரைச் சொல்லவில்லை. இது தலைமுறை இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

எதுவும் கடந்து போகும்! - 15 - பெற்றதும் இழந்ததும்...

இந்தத் தலைமுறை உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன், பிறருக்கு ஏன் தர வேண்டும் என்கிற எண்ணம், சமுதாயத்தையே உருக்குலைத்துவிடும். இயற்கையை நேசிப்பதும், புத்தகங்களை வாசிப்பதும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். உணவை ரசித்து ருசித்துச் சாப்பிடுவதை விட்டுவிட்டு, செல்போனிலும் போட்டோ எடுப்பதிலும் செல்பி எடுப்பதிலும் வாழ்க்கை கரைந்துவிடுகிறது.

நான் மட்டும்தான் என்று சொல்வது உலகம் அல்ல; எல்லோரும் சேர்ந்ததுதான் உலகம். அத்தகைய உணர்வுகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிறரின் அறிவுரைகளைக் கேட்பதைவிட நம்முடைய மனசாட்சியைக் கேட்க வேண்டும். அது பல்வேறு தருணங்களில் ஒரு வழிகாட்டியாக அமையும். நம் எண்ணங்களும், நாம் வெளி உலகத்தைப் பார்க்கும் பார்வைகளும், நல்ல சிந்தனைகளுமே நம்மை வழிநடத்தக் கூடியவையாக இருக்கும். தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்பார்கள். அந்த உறவுகள் வழிவழியாகத் தொடர வேண்டும் அல்லவா!

- இடைவெளி இணைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism