Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 20 - கல்விமுறையில் வன்முறை விலகுவது எப்போது?

எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

இந்த வாரம் எழுத்தாளர் பாலசுப்ரமணியம் முத்துசாமி

எதுவும் கடந்து போகும்! - 20 - கல்விமுறையில் வன்முறை விலகுவது எப்போது?

இந்த வாரம் எழுத்தாளர் பாலசுப்ரமணியம் முத்துசாமி

Published:Updated:
எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

2005ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் காலை நேரம். நானும் மனைவி விஜியும், சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி பள்ளியின் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறோம். எங்கள் மகள் மதுராவும், மகன் அருணும் அந்த வருடம் பள்ளியில் சேர்ந்திருந்தார்கள். பெற்றோர்களுக்கான அறிமுகக் கூட்டம். பிள்ளைகளும் அமர்ந்திருக்கிறார்கள்.

கூட்டத்தின் நடுவே பள்ளியின் செல்லமான கறுப்பு நிற நாய் (பிளாக்கி) நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது. பள்ளியின் இயக்குநர் கௌதமா பேசிக் கொண்டிருக்கிறார். பிற நாடுகளில் நடக்கும் போர் தொடர்பான வன்முறையையும், அதன் விளைவுகளையும் நாம் ஏன் பேசுவதில்லை என்பதுபோல உரை சென்று கொண்டிருந்தது.

உரையின் திசை புரியாத மழலையர் வகுப்புப் பெண் குழந்தை சலித்துப்போய் எழுந்து, `அண்ணா, இது எப்போ முடியும்` எனக் கேட்டது. கூட்டத்தில் லேசாக சிரிப்பலை. (அந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் அண்ணா / அக்கா என்றுதான் அழைக்கப்படுவார்கள்)

கௌதமா அமைதியாக, `இன்னும் சிறிது நேரத்தில் முடிந்துவிடும், உட்கார்’ என அமைதியாகச் சொன்னார்.

பாலசுப்ரமணியம் முத்துசாமி
பாலசுப்ரமணியம் முத்துசாமி

எனக்கு என் பள்ளிக்காலம் நினைவுக்கு வந்தது. 1976-ல் தளவாய்ப்பேட்டை உயர் ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, தாய்மாமன் வீரப்பன் உதவியால் ஈரோடு காமராசர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தேன். அந்தப் பள்ளியில் ஒரு தேவதை இருந்தார்; கணித ஆசிரியர் ஜானகி டீச்சர். சேர்ந்த புதிதில், புதிய பள்ளியின் விதிகள் புரியவில்லை. வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிடுவேன். தினமும் காலையில் அடி விழும். எப்போது இந்தப் பள்ளியை விட்டு ஓடலாம் என மனம் நினைத்துக்கொண்டிருக்கும்.

முதலாம் மாதத் தேர்வு முடிந்தது. காலை முதல் பீரியடுக்கு வந்த ஜானகி டீச்சர், என்னை அழைத்தார். நடுங்கிக்கொண்டே போனேன். கட்டிக்கொண்டார். `அடிச்ச அடியெல்லாம் மார்க்கா காச்சிருக்கு’ என்று சொல்லி விடைத்தாளைக் கொடுத்தார். அவரிடம் வீசிய குட்டிக்கூரா பவுடரின் நறுமணம் இன்றும் நினைவிருக்கிறது. அவருக்காகவே படிக்கத் தொடங்கினேன்.

அடுத்த ஆண்டில் ஒருநாள், ஒரு தேசிய அரசியல் தலைவர் இறந்திருந்தார். ஒரு நாள் விடுமுறையும், மூன்று நாள்கள் அரசு துக்கமும் கொண்டாட முடிவு. மூன்று நாள்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும். விடுமுறை முடிந்த அடுத்த நாள் ப்ரேயரில், தவறுதலாக கொடியை வழக்கம்போல ஏற்றிவிட்டார்கள்.

ப்ரேயரில் நின்றுகொண்டிருந்த நான், எனக்கு அருகில் நின்றுகொண்டிருந்த விளையாட்டு ஆசிரியரிடம், `சார், கொடிய அரைக் கம்பத்துலதான் கட்டணும் சார்’ என்று சொன்னேன். ஆனால், அதற்கு சற்றும் எதிர்பாராத எதிர்வினை வந்தது.

`திமிராடா உனக்கு? இங்லீஸ் மீடியம் படிச்சா பெரிய இவனா...’ என ஏசப்பட்டேன். 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சற்றும் எதிர்பாராத தாக்குதல்.

எதுவும் கடந்து போகும்! - 20 - கல்விமுறையில் வன்முறை விலகுவது எப்போது?

`ரெண்டு அப்பு அப்பு அவன...’ என அருகிலிருந்த இன்னொரு ஆசிரியரின் சிபாரிசு வேறு.

ப்ரேயர் முடிந்தும் வகுப்புக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டு அர்ச்சனை. 45 ஆண்டுகள் கழித்தும் அந்தக் கணத்தின் அவமானம் இன்றும் மனதிலிருக்கிறது.

பள்ளி என்றாலே, பிரம்பைச் சுமக்கும் ஆசிரியரும், அவர் மனம் போன போக்கில் தரும் தண்டனைகளும், அவமதிப்பு களும் மாறாத வடுக்களாக இன்னும் இருக்கின்றன. எனவே எனக்கு சென்னை கிருஷ்ணமூர்த்தி பள்ளியின் சூழல் சர்ரியலாகவும், பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருந்தது. பிறக்கும் போதே பொறுப்பை கடவுளிடம் பார்சல் கட்டி வாங்கி வந்துவிட்ட மகள் மதுராவைவிடவும், பொறுப்பு என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் மகன் அருணுக்கு இந்தப் பள்ளி சரியாக இருக்கும் என நினைத்துக் கொண்டோம்.

சீருடை இல்லை. சிலபஸ் இல்லை... 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளும் இல்லை. என்ன படிக்கிறார்கள் என்பது பற்றி லேசுபாசாகத் தெரியும், அவ்வளவுதான்.

மகள் மதுரா ஆறாம் வகுப்பு செல்கையில், கல்வித் திட்டத்தில் ஒரு மாறுதல் செய்தார்கள். 6,7,8 வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரே வகுப்பில் பயில்வார்கள் என. மூன்று வகுப்புகளையும் சேர்த்து 90 மாணவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, பின்னர் 3 வகுப்புகளாகப் பிரிக்கப் படுவார்கள் என்று சொன்னார்கள்.

பெற்றோர்கள் கொந்தளித்து விட்டார்கள். ‘அதெப்படி, ஒரே வகுப்பில் 6,7,8 படிக்கும் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்? எப்படிப் பாடம் நடத்துவார்கள்?’ என்றெல்லாம் கேள்விகள். எனக்கும் விஜிக்கும் அந்தப் பரிசோதனை பிடித்திருந்தது. என்னதான் நடக்கிறதென்று பார்த்துவிடலாமே!

ஆனால், அந்தத் தைரியம், 8ஆம் வகுப்பு முடிகையில் எனக்குக் கொஞ்சம் குறைந்துபோனது. இதுவரை சரி... இதற்கு மேல் என்ன படிக்கப்போகிறாள் மதுரா என்னும் பயம் வந்தது.

நான் பார்த்தவரையில் 8ஆம் வகுப்பு படிக்கும் வழக்கமான சென்னையின் குழந்தைகள் போல மதுரா இல்லை. கணிதமோ, அறிவியலோ, மற்ற குழந்தைகள் போல போட்டித் தேர்வுகளை எழுதும் அளவுக்கு இவர்களிடம் திறன் இருக்குமா? இல்லையெனில் இவர்கள் வருங்காலம்? ‘துணிந்த பின் எண்ணுவதல்ல கருமம்’ என என்னைத் தேற்றினார் விஜி.

9ஆம் வகுப்புக்கு மேல், தேர்வுகள் நடத்தப்படாவிட்டால், அந்தப் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் கிடைக்காது. எனவே, கிருஷ்ணமூர்த்தி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஐ.சி.எஸ்.இ வழிச் சான்றிதழ்கள் பெற, 9ஆம் வகுப்பில் இருந்து தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

எதுவும் கடந்து போகும்! - 20 - கல்விமுறையில் வன்முறை விலகுவது எப்போது?

நாங்கள் பயப்பட்டது போலில்லை. வாத்துக் குஞ்சு நீந்தக் கற்றுக்கொள்வதுபோல இலகுவாக தன்னை மாற்றிக் கொண்டாள் மதுரா. ஒன்றாம் வகுப்பு படிக்கும் 5 - 6 வயதுச் சிறுமி தேர்வை எதிர்கொள்ளும் மனநிலைக்கும், 9ஆம் வகுப்பு படிக்கும் 14-15 வயது இளம்பெண் தேர்வை எதிர்கொள்ளும் மனமுதிர்வுக்கும் பெரும் வித்தியாசங்கள் உண்டல்லவா?

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது, பள்ளியிலிருந்து வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்துக்குச் செல்லும் ஒரு பயணத் திட்டம் இருந்தது. அக்டோபர் 2 ஆம் தேதி, வார்தாவில் நிகழும் காந்தி ஜெயந்தி விழாவில் குழந்தைகள் பங்குகொள்வது என்பது திட்டம். அன்றுதான் காந்தி ஆசிரமத்தில் உள்ள உலர் கழிவறைகளில் சேகரிக்கப்பட்டு மக்க வைக்கப்பட்ட மனிதக் கழிவு உரம் அகற்றப்படும் நிகழ்வு நடைபெறும்.

அந்த 15 நாள் பயணத்தின் பிறகு மகள் மதுரா மாறிப்போனாள். தான் கண்டதையும் உணர்ந்ததையும் மிகவும் நுட்பமாக ஒரு கட்டுரையாக எழுதினாள்.

பின்னர், 11ஆம் வகுப்பு செல்கையில், என்னென்ன பாடங்கள் எடுக்கலாம் என விவாதித்தோம். உண்மையைச் சொல்வதெனில், அவள் முடிவெடுத்திருந்தாள். மொழிப்பாடங்கள் தவிர, புவியியல், உளவியல், சூழலியல் என. இதைப்படித்த பின்னர் மேலே என்ன படிக்க என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் அவள் தெளிவாக இருந்தாள் – ‘பிடித்ததைப் படிக்கிறேன்.’

அந்த ஆண்டு மீண்டும் ஒரு 15 நாள் அகில இந்தியப்பயணம். ராஜஸ்தானில் உள்ள தேவ்துங்ரி, டிலோனியா என்னும் சிற்றூர்களுக்கு. தேவ்துங்ரியில் வசிக்கும் அருணா ராய் தமிழர். இந்திய ஆட்சிப்பணி வேலையை விட்டுவிட்டு, மக்கள் நலனுக்க்காக உழைப்பவர். டிலோனியாவில் வசிக்கும் பங்கர் ராய், வங்காளி. ஊரக மகளிர் நலனுக்கான பொருளியல் திட்டங்களை உருவாக்கி, உலகெங்கும் உள்ள ஏழைப் பெண்களுக்கான திறன் பயிற்சிக் கல்வியகம் நடத்திவருபவர். அருணா ராயின் கணவர்.

7 ஆண்டுகள் அந்தப் பள்ளியின் சூழலும், இது போன்ற நிகழ்வுகளும் மகளை மெல்ல மெல்ல வேறொரு திசையில் மாற்றி விட்டிருந்தன. பள்ளிப் படிப்பை முடித்த மகள் வளர்ச்சியியல் என்னும் துறையைத் தேர்ந்தெடுத்தாள். கிருஷ்ணமூர்த்தி பள்ளியைப் பெரும் வசதிகள் கொண்ட பள்ளி எனச் சொல்ல முடியாது. நாம் வழக்கமாகப் பார்க்கும் அரசுப்பள்ளிகள் அளவே வசதிகள் கொண்ட ஒரு வளாகம். மரங்கள் அடர்ந்திருக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவு பள்ளியில் கொடுக்கப்படும். மாணவர்களே தட்டுகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். கழிவறைகள் சுத்தமாக இருக்கும்.

எதுவும் கடந்து போகும்! - 20 - கல்விமுறையில் வன்முறை விலகுவது எப்போது?

இன்று திரும்பிப் பார்க்கையில், மகளும் மகனும் இருவேறு தனி மனிதர்களாக வளர்ந்து நிற்கிறார்கள். அவர்களுக்கான திசையை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். மகள் திபெத் அகதிகள் பற்றிய ஆராய்ச்சியாளராக இருக்கிறார். மகன் இந்த ஆண்டுதான் படித்து முடித்திருக்கிறார்.

எனது நாற்பதாண்டுப் பயணத்தில், கல்வியமைப்புகளின் இருவேறு எல்லைகளைப் பார்க்கையில் சில ஒற்றுமைகளும், சில வேற்றுமைகளும் தென்படுகின்றன. நமது அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பிலும், கிருஷ்ணமூர்த்தி பள்ளியின் கட்டமைப்பிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. சொல்லப் போனால், கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் ஆசிரியர்களின் ஊதியம் மிகக் குறைவே. கிருஷ்ணமூர்த்தி பள்ளி தனியார் பள்ளி என்பதால், கட்டணம் உள்ளது. ஆனால், சென்னையின் மிகப்பிரபலமான பள்ளிகளைவிட மிகக்குறைவான கட்டணம்.

தனியார் கல்விநிறுவனங்களில் பெரும்பாலானவை மதிப்பெண் பெறும் இயந்திரங்களை உருவாக்கும் ஆலைகளாக மாறிவிட்டன. கல்விமுறை வன்முறை தோய்ந்ததாகவே உள்ளது. 8ஆம் வகுப்புக்குப் பின்னர் மாணவர்கள் விடுமுறையையும், விளையாட்டையும் மறந்து போர்க்களத்துக்குத் தயாராகும் வீரர்களைப்போல வெறியேற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி பள்ளியில் இறந்துபோன அந்தச் சிறுமியின் கனவுகள் என்னவாக இருந்திருக்கும்? மனங்கள் இயல்பாக மலர்ந்து, கல்வி பெற்று முன்செல்ல வேண்டிய இளம் சிறார்களின் உலகில், இன்னும் ஏன் வன்முறை விலகாமல் இருக்கிறது?

கல்வியை சமூகப் பொருளாதார அலகுகளில் முன்னேறும் அலகாகப் பொது மக்கள் கருதுவதும், தங்கள் கனவுகளை வெறிகொண்டு தங்கள் குழந்தைகள்மீது திணிக்க முற்படுவதும் இயற்கை. ஆனால், கல்விச் சூழலை அதன் உண்மையான, முழுமையான நோக்கத்துடன் அணுகி, அதை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டிய காலமாக மாற்றுவது யாருடைய பொறுப்பு? எப்போது அந்த உண்மையான இலக்கை நோக்கிப் பயணிக்கப் போகிறோம்?