Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 8 - அந்தக்காலம் போல இல்லை!

எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

இந்த வாரம் ஆர்.அபிலாஷ்

எதுவும் கடந்து போகும்! - 8 - அந்தக்காலம் போல இல்லை!

இந்த வாரம் ஆர்.அபிலாஷ்

Published:Updated:
எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

‘கடைசி விவசாயி’ படத்தில் ஒரு வசனம் வரும். புரோக்கர்கள் நல்லாண்டியிடம் இருந்து நிலத்தை வாங்க எவ்வளவோ ஆசை காட்டியும் அவர் மசிய மாட்டார் என்றாகும் போது, ஒருவர் மற்றொருவரிடம் ஏமாற்றத்துடன் சொல்வார்: “முப்பது வருசமா காது வேற கேட்கல. படிச்சு அறிவுள்ளவங்கன்னா எதையாவது சொல்லி ஏமாத்திரலாம். ஆனால் படிக்காத இவரை ஏமாத்தவும் முடியல.”

கடந்த இருபதாண்டுகளில் நான் தொலைத்தது கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் கிடைத்த எளிய, அமைதியான வாழ்க்கையைத்தான். அங்கு கேட்கக் கூடாத எதையும் கேட்க வேண்டியிராதவராக, பார்க்கத் தேவையில்லாதவற்றைப் பார்க்காத வராக இருந்தோம்.

ஆர்.அபிலாஷ்
ஆர்.அபிலாஷ்

நான் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் கிராமத்தில் பிறந்து கல்விக்காகவும், வேலைக்காகவும், பின்னர் காதலுக்காகவும், இலக்கியத்துக்காகவும் சென்னையை வாழ்விடமாகக் கொண்டவன். அதன் பிறகு பெங்களூரு சென்றேன். நகரங்களுக்கு வந்து கடந்த 22 ஆண்டுகளில் நான் பெற்றது சமயோசித அறிவையும், சந்தடியில், அவசரத்தில் வாழும் திறனையுமே. நான் இழந்தது குழந்தைத்தனமான ஒரு நம்பிக்கையை, நான் களங்கமற்றவன் என இருந்த ஒரு நம்பிக்கையை. ரொம்பக் கொஞ்சமாக வசதி இருந்தாலும் போதும் எனும் நிறைவை.

நகரம் என்னைத் தன்னுணர்வு மிக்கவனாக்கியது. என் தோற்றம், ஆடைத்தேர்வு, வாங்கிப் பயன்படுத்தும் பொருள்கள் எனது மதிப்பைத் தீர்மானிக்கின்றன எனும் அச்சம் என்னை ஆட்கொண்டது. நான் மிக அதிகமாக இதை உணர்ந்தது சென்னைக்குப் படிக்க வந்தபோதுதான். ஊரில் வசிக்கையில் என்னிடம் மொத்தமாகவே இரண்டு டிஷர்ட்டுகள்தாம் இருக்கும். அவற்றையே கல்லூரிக்கும் அணிந்து செல்வேன், வீட்டிலும் அணிவேன். அங்கு யாரும் பிறரை ஆடைகளின் வகைமை, தரத்தால் மதிப்பிடுவதில்லை. அங்கு சிறிதோ பெரிதோ எல்லாருக்கும் ஒரு வீடு இருக்கும். அனேகமாக எல்லாருக்கும் இரவுண்ண கஞ்சியும் சிறிது மீனும் இருக்கும். அது கார்களும் பைக்குகளும் மலியாத காலம். அனேகமாக எல்லாரும் நடந்தோ பஸ்ஸிலோதான் அலுவலகத்துக்கு, கடைகண்ணிக்குச் சென்றார்கள். சென்னை போன்ற ஒரு நகரத்தில் நான் முதன்முதலாக குப்பையிலிருந்து பொறுக்குவோரை, கழிவுணவை எடுத்துத் தின்னுவோரை, உறங்க இடமின்றித் தெருவில் உறங்கும் குழந்தைகளைக் கண்டேன்.

எதுவும் கடந்து போகும்! - 8 - அந்தக்காலம் போல இல்லை!

அன்று என்ன அணிந்தாலும் நான் நன்றாக இருப்பதாக நம்பினேன். சென்னைக்கு வந்த பிறகே ஒவ்வொரு வகையான, தரமான ஆடைக்கும் ஒரு அந்தஸ்து, சமூக நிலையுண்டு எனப் புரிந்துகொண்டேன். பிராண்டுகள் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தேன். விலைமதிப்பான ஆடைகளை அணிந்ததும் கம்பீரமாக தன்னம்பிக்கையாகத் தோன்று கிறவர்களையும், மலிவான ஆடைகளில் குறுகி நடப்பவர்களையும் என் கல்லூரி வளாகத்தில் ஒருசேரக் கண்டேன். பணக்கார வீட்டுப் பையன்கள் வெறுமனே ஓய்வு நேரத்தில் அணியும் சப்பல்கள் வித்தியாசமாக இருக்கும். விலை ஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்கும் என்றார்கள். நாங்கள் கிராமத்துப் பையன்களோ நூறு ரூபாய் சப்பலை அணிந்திருப்போம். ஒருநாள் அதைப் போல செருப்புகளை அணிய வேண்டும் என எங்களுக்குள் பேசிக்கொள்வோம். நான் ஊரில் உள்ள கல்லூரியில் படிக்கையில் ஏன் ஒருமுறைகூட செருப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று தோன்றியது. நாம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் விலையுயர்வான செருப்புகள், ஆடைகளை அணிய முடிந்தது. ஆனாலும் என்னால் வாங்க முடியாத செருப்புகளும் ஆடைகளும் அணிந்தவர்கள் என்முன்னே தோன்றியபடியே இருந்தார்கள். அது ஏற ஏறத் தீராத ஒரு ஏணியைப் போன்றே இருந்தது; இருக்கிறது.

இன்று நாம் கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயர்ந்து வருகிறபோது நம்மிடம் அதிகமான பணமும் வசதிகளும் வந்து சேர்கின்றன, அதே நேரம் கற்பனை செய்ய முடியாத ஏற்றத்தாழ்வுகளில், தன்னிரக்கங்களில் மாட்டி அல்லல்படுகிறோம். ஒரு வாய் நல்ல சோற்றுக்காக, தூக்கத்துக்காக, சுவாசிக்கக் காற்றுக்காக… ஏன், ஒன்றுக்குப் போகக்கூட இடமின்றித் தவிக்கிறோம். எவையெல்லாம் அன்று மிக தாராளமாக, சுலபமாகக் கிடைத்ததோ, அவை இன்று அரிதானவையாகிவிட்டன. ஆடைகள், வாகனங்கள், மின்சாதனங்களிலிருந்து உறவுகள், கட்டமைப்புகள் வரை இதைக் கூறலாம். அன்று சாத்தியங்கள், அவற்றைப் பரிசீலிக்கும் சுதந்திரம் இல்லை. ஆனால் இருந்த வசதிகள் நம்பத்தகுந்தவையாக இருந்தன. இன்று வசதிகள் பல்கிப் பெருகி உள்ளன, ஆனால் எல்லாமே உலுக்கினால் உதிர்ந்துவிடும் அளவில் இருக்கின்றன.

இன்று சமூகவலைதளங்களில் ஆயிரமாயிரம் நண்பர்கள் வாய்க்கிறார்கள், அவர்களில் மிகச்சிலரே நீண்ட கால நண்பர்களாகிறார்கள். முன்பு நாம் பிடிக்காத உறவுகளிலிருந்து விலகும் அச்சத்தினாலே ஒட்டியிருந்தோம். ஆனால் இன்று உறவுகள் முறிந்து போகுமே எனும் அச்சத்தில் தினம் தினம் நடிக்கிறோம், பாசாங்கு பண்ணுகிறோம், புழுங்குகிறோம்.

எதுவும் கடந்து போகும்! - 8 - அந்தக்காலம் போல இல்லை!

எங்கள் ஊரில் அப்போது இரண்டே நல்ல ஓட்டல்கள்தாம் இருந்தன. ஒன்று தக்கலைப் பேருந்து நிலையத்துக்கு எதிராக இருந்த கௌரி சங்கர். மற்றொன்று தாஜ். நான் வாழ்ந்த கிராமத்தில் ஒரு எளிய ஓட்டல் இருந்தது. சாப்பிட வேறு வழியில்லாதவர்கள் மட்டுமே எட்டிப் பார்க்கும் அங்கு புளித்த ஆப்பமும், வீசினாலும் எறிகணை போலச் செல்லும் புட்டும் கிடைக்கும். அதனால் பள்ளிக்கூட வயதில் கௌரி சங்கரில் நெய்தோசை சாப்பிடுவது என்னுடைய கனவாக இருந்தது. எப்போதாவது அப்பா என்னைப் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துப் போக வந்தால், வீட்டில் அம்மாவால் சமைக்க முடியாது என்றால் அங்கு கூட்டிச் செல்வார். போனதுமே நெய்தோசைக்குச் சொல்லிவிடுவேன். அதை நொறுக்கியும் பிய்த்தும் அந்தப் பருப்பு தூக்கலாக இருக்கும் மஞ்சள் நிறச் சாம்பாரில் முக்கிச் சாப்பிட்ட பின்னர் விரல்களில் ஒட்டும் நெய்யும், நாவில் உணரும் அபாரமான சுவையும் இன்றும் என் நினைவில் இருக்கின்றன. நான் ரசித்துண்பதைப் பார்த்தபடி அப்பா இருப்பார்.

தாஜில் சிறப்பான உணவுகள் பரோட்டா, சிக்கன், பிரியாணி. விலை அதிகம் என்பதால் அரிதாகவே அங்கு சாப்பிட்டி ருக்கிறேன். எனக்குப் பதினைந்து வயதிருக்கும். தேர்வுகள் முடிந்த நாள். அம்மாவிடம் வெளியே சென்று சாப்பிட வேண்டும் எனப் பணம் வாங்கினேன். ஐம்பது ரூபாய். நான் தாஜுக்குச் சென்று அமர்ந்தேன். மனதில் பட்டதை ஆர்டர் செய்து ரசித்து உண்டேன். தனியாக நானே உணவை ஆர்டர் செய்து யாருடைய துணையுமில்லாமல் சாப்பிடுவதே அலாதியான அனுபவமாகத் தோன்றியது. பில் வந்தது. எனக்கு அதைப் பார்த்ததும் வியர்த்தது. நூறு ரூபாய்க்கு மேல் வந்திருந்தது. என்னிடம் இருந்ததோ ஐம்பது ரூபாய். ரொம்பத் தயங்கிய பின்னர் சிப்பந்தியிடம் சொன்னேன். அவர் சிரித்துவிட்டு “போடே, உங்கப்பா கிட்டே வாங்கிக்கிறேன்” என்றார். வீட்டுக்கு வந்தால் அதற்குள் செய்தி ஊரெல்லாம் பரவியிருந்தது. அம்மா, அக்கா எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குப் பெரும் மானக்கேடாகிவிட்டது. இன்று ஒரு குழந்தையிடம் நீங்கள் நூறு ரூபாய் கொடுத்தால் அதற்குள் எப்படி வாங்கித் தின்ன வேண்டும் என அதற்குத் தெரியும். அது மட்டுமல்ல, மீதிப் பணத்தைச் சேர்த்து வைத்து அடுத்த நாளுக்கான தின்பண்டம் வாங்கும் அது. ஏனென்றால், இன்றைய பெற்றோர்கள் எப்படி பணத்தைச் செலவழிக்க வேண்டும் எனச் சிறுவயதிலே சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனாலே அக்குழந்தைகள் அறியாமையின் களங்கமற்ற அனுபவங்களை இழந்துவிடுகிறார்கள்.

எங்கள் ஊரில் முதலில் பிளாஸ்டிக் பைகள் வந்தது 96-97 காலகட்டத்தில் என நினைக்கிறேன். சாலை விளிம்பில் நிறுத்திய லாந்தர் வைத்த தள்ளுவண்டிகளில் மரவள்ளிக்கிழங்கைச் சீவி, பொரித்து அடுக்கியிருப்பார்கள். ஐந்து ரூபாய்க்கு ஒரு பாலித்தீன் பை நிறையப் போட்டுத் தருவார்கள். அதை நாங்கள் மாலைவேளைகளில் வீட்டுக்கு வாங்கி வந்து ஒரு மணிநேரமாகக் கொறிப்போம். அதுவே ஒரு தனிப் பொழுதுபோக்காக அமைந்தது. அதுவரை நாங்கள் பாலித்தீன் பைகளை எங்குமே கண்டதில்லை. கடைக்குப் போனால் ஒன்று துணிப்பையை எடுத்துப் போவோம். அல்லது, ஒரு தாளில் கூம்புவடிவில் பொட்டலம் மடித்துத் தருவார்கள். பாலித்தீன் பைகளுடன் பரோட்டா சால்னாக் கடைகளும் எங்கள் ஊருக்குப் படையெடுத்தன. எனக்கு பரோட்டாப் பித்துப் பிடித்தது. ஆறரை மணிக்கே பரோட்டாக் கடைக்குச் சென்று காத்துக் கிடப்பேன். அதன் பிறகு மளிகைக்கடைகளிலும் பிற இடங்களிலும் பாலித்தீன் பைகள் பரவிட, பரோட்டாவும் அதன் ஒன்றுவிட்ட சகோதரனைப் போல பக்கம் பக்கமாய் இடித்துக் கொண்டு வந்து அமர்ந்துகொண்டது. நான் சென்னைக்குப் படிக்கச் சென்று திரும்பிய போது பிரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற வகையறாக்களும் பரோட்டாவுடன் எங்கள் ஊர்க் கலாசாரத்தில் இடம்பி டித்திருந்தன.

இந்தத் துரித உணவுகள் இன்று ஸொமாட்டோ போன்ற செயலிகளின் உதவியுடன் நம் வீட்டு வாயிலுக்கே வந்துவிட, வீட்டில் சமைப்பது அந்நியப் பழக்கம் ஆகிவருகிறது. நமக்கு ஒரே உணவைச் சாப்பிடும் அலுப்பில்லை, நிறைய நேரம் மீள்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்த உணவுகள் அசலான உயிர்ப்பான உணவுகளைப் போல இல்லை. சுவையிருந்தாலும் இவை எங்கள் ஊர் ஒழிச்சுகூட்டான், புளிசேரியைப் போல எங்கள் நாவுக்கான சுவையைக் கொண்டில்லை.

15 வயதில் எனக்கு இலக்கிய வாசிப்பு அறிமுகமானது. ஆனால் அன்று இலக்கிய நூல்களைப் பெறுவது மந்திர தந்திரம் கற்பதைப் போன்றது. ரகசியமாக தீவிரமாக அங்கங்கே மூலைகளில் அது நடைபெற்றுவரும். புத்தகங்களைக் கடன்பெறவே சில நண்பர்களை, தொடர்புகளை உருவாக்கத் தவித்தோம். கடன் பெற்ற நூலை வேகமாகப் படித்து அதை இன்னொருவருக்குக் கொடுத்து பிறகு நாங்கள் சந்தித்து வாசிப்பைப் பற்றி உரையாடுகிற அலாதியான மாலைப்பொழுதுகள் அப்போது இருந்தன. சுந்தர ராமசாமியின் வீட்டில் உள்ள பிரமாண்ட மான நூலகத்தைப் பற்றி வியப்பாகப் பேசிக் கொள்வோம். அதை நாங்கள் யாரும் பார்த்திருந்த தில்லை. நாகர்கோவிலில் வசித்து வந்த ஜெயமோகனிடம் இருந்து நான் ஒருமுறை தி.ஜாவின் ‘மோகமுள்’ நூலை வாங்கிப் படித்து விட்டுத் திரும்பக் கொடுக்கச் செல்லும்போது தொலைத்துவிட்டேன். தயங்கி அவரிடம் சொன்னேன். அவரும் பரவாயில்லை என்றார். “ஒரு முக்கியமான டெக்ஸ்ட் அது” என்று முணுமுணுத்தார். எனக்கு அதைக் கேட்டு மனமே உடைந்துவிட்டது. அந்தக் குற்றவுணர்வு நீண்டகாலமாக நீங்கவில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போதும் அலமாரியில் உள்ள ‘மோகமுள்’ நூலைப் பார்க்கையில் சுருக்கென நெஞ்சில் குத்தும் உணர்வு ஏற்படுகிறது. இன்றெனில் தொலைத்த உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்து மூன்றே நாள்களில் புத்தகத்தை அவருடைய முகவரிக்கே அனுப்பி யிருப்பேன். ஆனால் அன்றிருந்த அந்த முக்கியத்துவம் இன்றிருக்காது.

இணையம் இன்று வாசிப்பை எளிதாக்கியுள்ளது. புத்தகப் பரவலாக்கம் நடந்துள்ளது. வாசிப்பும் அதிகமாகியிருக்கிறது. ஆனால் ஏதோ ஒன்றைப் புதியதாகக் கற்றுக்கொண்ட திகைப்பு இப்போது இல்லை. கூகுள் நொடிக்கு நொடி எல்லாவற்றையும் பழசாக்கிவிடுகிறது. கருத்துப் பகிர்வு உரையாடலை ஒருவழிப்பாதையாக்கி விட்டது.

நாம் மிகவும் மதிக்கும் படைப் பாளிகளைச் சந்திப்பதற்காக மாதக்கணக்காய் முன்பு காத்திருந்த துண்டு. சந்தித்ததும் அது தவற விட இயலாத ஒரு அனுபவமாக மாறிப்போகும். ஒவ்வொரு முறை சோர்ந்துபோகும்போது அந்த ஆளுமை நமக்குத் தந்த படிப்பினையை, சொன்ன ஒரு விஷயத்தை நினைவில் மீட்டு உற்சாகம் பெறுவோம். ஆனால், இன்று இணையம் வழியாகத் தொடர்பெண்ணைப் பெற்று ஒரு ஆளுமையிடம் பேசும் போது அவர் வெகுசாதாரணமானவராக நமக்குத் தோன்றுகிறார். யாரிடமும் எப்போது வேண்டுமெனிலும் பேசலாம் என்பதால் யாரிடமும் எப்போதும் பேச வேண்டாம் என நினைத்து ஒருபோதும் பேசாமல் இருந்துவிடுகிறோம்.

எதுவும் கடந்து போகும்! - 8 - அந்தக்காலம் போல இல்லை!

பெண்ணுடலின் ரகசியங்கள்மீது ஆண்களுக்கு அன்றிருந்த திகைப்பு இன்று சுத்தமாகப் போய்விட்டது. குழந்தைகளின் விரல் நுனியில்கூட ஸ்மார்ட் போன் வழியாக போர்னோகிராபி வந்துவிட்டது. அது மட்டுமல்ல, இரு பாலினத்தோரும் அந்தரங்கமாக அரட்டை அடிக்கவும், தொட்டுப் பேசிப் பழகவும் முன்பிருந்த பரபரப்பு, வியப்பு முழுக்க மறைந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இணையம் நமது பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்ய முன்வருவதால் மாற்றுப்பாலினத்துடன் பொருந்திப்போகத் தேவையில்லை என்று மனிதர்கள் அதிகமாகத் தனிமை விரும்பிகளாக மாறிவருகிறார்கள்.

முன்பு நான் பத்மநாபபுரத்தில் இருந்து வில்லுக்குறி வழியாக நாகர்கோவிலுக்குச் சென்று, சில நாள்களில் என் காதலியை அழைத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு பைக்கில் செல்வேன். அது மனதை விட்டு அகலாத சாகசப் பயணமாக ஒவ்வொரு முறையும் தோன்றும். அந்தக் காற்று, மரங்கள், கடந்து போகும் வாகனங்கள், இரவில் பெய்யும் மழையினூடே அரைகுறை ஒளியில் வருவது என ஒவ்வொரு சின்ன விஷயமும் சிலாக்கியமாக இருக்கும். ஆனால் இன்று நீங்கள் சாதாரணமாக பைக்கில் காஷ்மீர் வரை செல்லும் இளைஞர்களைப் பார்க்கிறீர்கள். அவர்களுக்கு காஷ்மீர் ஏதோ தெருமுனையில் உள்ள பெட்டிக்கடை போலத் தோன்றுகிறது. விமானம் ஏறி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற தேசங்களுக்குச் செல்வதை ஏதோ பஸ் ஏறி பாரிஸ் கார்னருக்குப் போய் இறங்குவதைப் போல மக்கள் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். என் நண்பர் ஒருவர் ஒருமுறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தார். ஒருவழியாக விமானத்தில் ஏறிப் பறந்தார். “எப்படி இருந்தது அனுபவம்?” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார், “என்னய்யா விமானம், ஒரே சத்தமாக இருக்கிறது, ஏதோ பஸ்ஸில் ஏறினதைப்போல இருக்கிறது!”

- இடைவெளி இணைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism