Published:Updated:

விட்ராதீங்க யப்போவ்!

விட்ராதீங்க யப்போவ்!
பிரீமியம் ஸ்டோரி
விட்ராதீங்க யப்போவ்!

ஸ்ட்ராங் ரூம் பக்கத்துல ‘அங்கங்கே சாயுதாம்... உருளுதாம்’ குரல்களின் தொகுப்பு இவை

விட்ராதீங்க யப்போவ்!

ஸ்ட்ராங் ரூம் பக்கத்துல ‘அங்கங்கே சாயுதாம்... உருளுதாம்’ குரல்களின் தொகுப்பு இவை

Published:Updated:
விட்ராதீங்க யப்போவ்!
பிரீமியம் ஸ்டோரி
விட்ராதீங்க யப்போவ்!
’ஜிவிஎம்’ படத்தில் வரும், ‘என்ன ஸ்கெட்ச்சா?’ டயலாக்கைத் தமிழகம் முழுவதும் ‘ஈவிஎம்’ மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்தும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். தமிழகம் முழுவதுமிருந்து, ஸ்ட்ராங் ரூம் பக்கத்துல ‘அங்கங்கே சாயுதாம்... உருளுதாம்’ குரல்களின் தொகுப்பு இவை...

ராமநாதபுரம்

நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. கடந்த வாரம் இந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் டிப்டாப்பாக லேப்டாப்புடன் வந்திருக்கிறார்கள். திமுக முகவர்கள் முகம் வெளிறிப்போய், ‘ஏய்... யாருய்யா நீங்கெல்லாம்..?’’ என வழிமறித்திருக்கிறார்கள். ‘`எங்க அம்மா சத்தியமா ஆன்லைன் வகுப்பெடுக்க வந்திருக்கோம்!’’ என ஐடி கார்டையெல்லாம் எடுத்துக்காட்டியும் உடன்பிறப்புகள் உதறலை நிறுத்தவில்லை. கடைசியில் கலெக்டர் வந்து உறுதிப்படுத்திய பிறகுதான் பிரச்னை தீர்ந்திருக்கிறது.

விட்ராதீங்க யப்போவ்!

மதுரை

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மதுரை மருத்துவக் கல்லூரியில் இரவு இரண்டு பேர் நுழைந்ததாக திமுகவினர் புகார் எழுப்ப... மதுரையே பரபரப்பானது. கல்லூரி வளாகத்துக்குள் சுற்றிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட மர்ம நபர்களைப் பிடித்து விசாரித்தபோது, எலெக்ட்ரிகல் வேலை செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுப்பியதாகத் தெரிவித்தனர். தேர்தல் ஆணைய அலுவலர் நேரடியாக வந்து, திமுக வேட்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அனைவரையும் அனுப்பிவைத்தார்.

கரூர்

கரூர்-சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்தான் ஈவிஎம்கள் இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, செந்தில் பாலாஜி விசுவாசிகள் நடு ராத்திரியில் அவரைத் தட்டியெழுப்பி, ‘மின்னணு இயந்திரங்கள் உள்ள அறைக்குப் பக்கத்துல உள்ள அறையில் கம்ப்யூட்டர் சர்வரும், ஏ.சியும் தானா இயங்குதுண்ணே. இயந்திரங்களை ஹேக்கிங் பண்ணப் பார்க்குறாங்க... உடனே வாங்க’ என்று கண்ணைக் கசக்க... அவர் கலெக்டருக்கும் எஸ்.பிக்கும் போனைப்போட... மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவும், காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயும் அலறியடித்துக்கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் விசாரணையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் உள்ள ஓர் அறையில், ஆன்லைன் க்ளாஸ் நடத்திய பேராசிரியர்கள், கணினி சர்வரையும், ஏ.சியையும் ஆஃப் பண்ண மறந்துவிட்டுப் போனது தெரிந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய மூன்று தொகுதிகளின் இயந்திரங்கள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்கு மர்ம நபர்கள் வந்துசெல்வதாக புரளி கிளம்பியதையடுத்து, மூன்று தொகுதிகளின் தி.மு.க வேட்பாளர்களும், பதறியடித்து ஓடி வந்தனர். வேலை செய்யாத ஒரு சிசிடிவி கேமராவுக்குப் பதிலாக புதிய கேமராவை மாற்றச் செய்தனர். மேலும் கல்லூரி மாடியில் ஐந்து டிஷ் ஆன்டனாக்கள் இருந்ததை அந்த மூவரும் பார்த்து ஜெர்க் ஆனார்கள். ‘ஆன்டனாவை வெச்சு ஹேக் செய்ய வாய்ப்பிருக்கு. அதனால் டிஷ்ஷை எடுத்துடுங்க’ எனச் சொல்ல, அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விஞ்ஞானத்தை விளக்கிச்சொல்லி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள்.

விழுப்புரம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரவு வெளி மாநிலத்தை சேர்ந்த பதிவு எண் கொண்ட நான்கு கன்டெய்னர் லாரிகள் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளதாக கூறி அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. அந்த கண்டெய்னர் லாரிகள், செல்லாத நாணயங்களை சேலத்தில் உள்ள உருக்கு ஆலைக்குக் கொண்டுசென்றதாகவும், இரவில் செல்லக் கூடாது எனும் கட்டுப்பாட்டால் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. ஒரு லாரி ஓட்டுநர் விருத்தாசலத்தில் தன் வீட்டில் சாப்பிட்டு வந்து லாரியை எடுக்கும் கேப்பில் புகார் பறந்திருக்கிறது.

கோவை

கோவை மாவட்டத்துக்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தடாகம் சாலை ஜி.சி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இரவு திடீரென்று அந்த கல்லூரி வளாகத்துக்குள் கன்டெய்னர் போன்ற இரண்டு மொபைல் வேன்கள் வந்தன. பொங்கியெழுந்த கட்சிக்காரர்களிடம் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் “அது பெண் போலீஸாருக்காக வந்துள்ள மொபைல் கழிப்பறை” என்று விளக்கமளித்துள்ளனர். “இவ்வளவு பெரிய கல்லூரியில் கழிப்பறை வசதி இல்லையா? எதற்காக இந்த நேரத்தில் வந்தீர்கள்? யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். வேன்கள் வெளியேற்றப்பட்ட பிறகுதான் பதற்றம் தணிந்தது.

புதுக்கோட்டை

சில தினங்களுக்கு முன்பு வாக்கு எண்ணும் மையத்திற்கு எதிரே போலீஸ் வாகனம் ஒன்று புதிதாக வந்து நின்றது. தி.மு.க, அ.ம.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் அந்த வாகனத்தை ஆய்வு செய்ததில் வாகனத்திற்குள் இரண்டு சிறிய கருப்பு நிற பெட்டிகள் இருந்துள்ளன. அந்தப் பெட்டியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை திறக்கும் வகையிலான டூல்ஸ்கள் இருந்துள்ளன. இதனால் எதிர்க்கட்சியினர் கொதிக்கவும் கலெக்டர் ஆடிப்போய், “இரவில் டீ வாங்குவதற்காக இந்த வண்டியை போலீஸார் பயன்படுத்தினர். கருப்புப் பெட்டி பாம் ஸ்குவாடு பெட்டியாம்” என்று பெட்டிகளைப் பிரித்துக்காட்டி சமாதானப்படுத்தியுள்ளார்.

தேனி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிக்குள் மர்ம வாகனம் ஒன்று நுழைந்ததாக, காவலுக்கு இருந்த தி.மு.க நிர்வாகிகள் கூற, உடனே சம்பவ இடத்திற்கு வந்தார் தங்க தமிழ்ச்செல்வன். “சார்… அது, உள்ள இருக்கும் சி.ஆர்.பி.ஃப் மற்றும் காவலர்களுக்கு சாப்பாடு கொண்டுபோன வாகனம் சார்…” என்று எடுத்துச்சொன்னபிறகுதான் அமைதியானார் தங்கம்.

திருவள்ளூர்

ஒருநாள் அதிகாலை 3 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதாகிவிட்டன. உடனடியாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தது திமுக தரப்பு. சுமார் 1 மணி நேரம் கழித்து அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை சரி செய்தனர். ``சிசிடிவி கேமரா கூட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கும். ஆனா 24X7 நாங்க அலெர்ட்” என்கின்றனர் திமுகவினர்.

நாகை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு எதிரே உள்ள கண்காணிப்பு கேமரா திடீரென பழுதடைந்துவிட்டது. புகாருக்குப் பிறகு சரியான கேமரா மீண்டும் பழுதாகிவிட்டது. “அதெப்படி அடிக்கடி பழுதாகும்?” என்று சந்தேகம் எழுப்புகிறார் வி.சி.க. வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ்.

கன்னியாகுமரி

வாக்குப்பதிவு முடிந்த அன்று ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பேட்டரியை கழற்றி எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி மறந்துவிட்டார். அவர் யாருக்கும் தெரியாமல் பேட்டரியை கழற்றலாம் என நள்ளிரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமிற்குள் நுழைந்திருக்கிறார். இதை அரசியல் கட்சி முகவர்கள் பார்த்து பிரச்னை ஆக்கிவிட்டனர். அதிகாரி விளக்கம் அளித்த பிறகும், ‘ஓட்டு எண்ணும் போது அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தானே பொறுப்பு’ என அந்த அதிகாரி எழுதிக்கொடுத்த பிறகுதான் பிரச்னை ஓய்ந்திருக்கிறது.

திருச்சி

வாக்கு எண்ணும் ஒரு மையத்தின் கேட் வழியாக எந்த அனுமதிச் சீட்டும் இல்லாமல் ஒரு ஆம்னி கார் உள்ளே புகுந்தது. போலீஸார் அந்தக் காரை மறித்துப் பார்த்தபோது உள்ளே ஹைடெக் வசதியோடு கேமரா, எல்.இ.டி டிவி மற்றும் கம்ப்யூட்டர்கள் இருந்தன. இதனைப் பார்த்த தி.மு.க தொண்டர்கள், ‘‘அண்ணே, பொட்டிய ஹேக் பண்ண கார் வந்திருச்சிண்ணே...’’ என்று ‘கர்ணன்’ பட பாட்டி போல வாய்ஸ் கொடுக்க, தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்தார். ‘வாக்கு எண்ணும் பணியை எல்.இ.டி திரையில் ஒளிபரப்பு செய்வதற்காகத் தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கார்தான் இது’ என்று விளக்கிய அதிகாரிகள், அங்கு இருந்த சி.சி.டிவி காட்சிப் பதிவுகளையும் வேட்பாளருக்குப் போட்டுக் காட்டியபிறகுதான், இறுக்கம் தளர்ந்தாராம் இருதயராஜ்.

திருவாரூர்

திரு.வி.க. கல்லூரியின் மெயின் கேட் வழியாக ஒரு வாகனம் உள்ளே நுழைந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிசிடிவி கேமராவில் இதைப் பார்த்து பரபரப்பாகி அலர்ட் ஆனார்கள். ‘‘இது டாய்லெட் வாகனம். எங்களுக்காக வந்திருக்கு” என காவல்துறையினர் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முகவர்கள், “இந்த கல்லூரியிலேயே நிறைய டாய்லெட் இருக்கு. அதுலதான் நாங்க எல்லாருமே போயிட்டு இருக்கோம். இத்தனை நாளா நீங்களும் இதுலதானே போனீங்க... இப்ப மட்டும் எதுக்கு இந்த டாய்லெட் வாகனத்தை கொண்டுவந்திருக்கீங்க?”” என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த டாய்லெட் வாகனம் காம்பவுண்டுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவுக்கு மறுநாள் காலையில் 5 கண்டெய்னர் லாரிகள் உள்ளே நுழைந்ததால், தி.மு.கவினர் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். விவரமறிந்து ஓடிவந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், “பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களும், ஓட்டுப்பதிவுக்கான கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களும்தான் உள்ளது” என விளக்கம் சொன்னாலும், “ரிப்பேர் ஆன வோட்டிங் மிஷின்கள்னு சொல்றீங்க, அதை குடோன்ல வைக்காம கவுண்டிங் சென்டருக்கு ஏன் எடுத்துட்டு வந்தீங்க?” என கட்சியினர் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆட்சியர், “சரி.. இதை குடோனுக்கு அனுப்பிடுறேன்” எனச் சொன்னார். 5 கண்டெய்னர் லாரிகளும் குடோனுக்குச் சென்ற பிறகே தி.மு.கவினர் கலைந்து சென்றனர்.

தென்காசி

மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் அருகே லேப்டாப் சகிதம் நிறைய பேர் அவ்வப்போது வந்து செல்வது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகத் தி.மு.க கூட்டணியினர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, கல்லூரி ஆசிரியர்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாம்.

மே 2 வரை அத்தனை நாளும் அலெர்ட்தான்!