Published:Updated:

“ஜெயிச்சுட்டு பரிசு வாங்குவேன்!”

ஜல்லிக்கட்டு
பிரீமியம் ஸ்டோரி
ஜல்லிக்கட்டு

300 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளைப் பிடித்து முதலிடம் வந்து பைக் பரிசாக வென்றவர் பிரபாகரன்.

“ஜெயிச்சுட்டு பரிசு வாங்குவேன்!”

300 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளைப் பிடித்து முதலிடம் வந்து பைக் பரிசாக வென்றவர் பிரபாகரன்.

Published:Updated:
ஜல்லிக்கட்டு
பிரீமியம் ஸ்டோரி
ஜல்லிக்கட்டு

ஜனவரி 14-ல் அவனியாபுரம், 15-ல் பாலமேடு, 17-ல் அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டால் திருவிழாக்கோலம் கண்டது மதுரை. கொரோனாக் கட்டுப்பாடுகளால் வெளியூர் மக்கள் பங்கேற்கமுடியவில்லை. ஆன்லைன் பதிவு, தொழில்நுட்பக் கண்காணிப்பு என ஏற்பாடுகள் ஹைடெக்காக மாறினாலும் பாரம்பர்ய சுவராசியங்களுக்குப் பஞ்சமில்லை.

* 294 வீரர்கள் பங்கேற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், 24 காளைகளைப் பிடித்து முதல் இடம் பெற்று காரைப் பரிசாக வென்ற கல்லூரி மாணவர் கார்த்திக்கிடம் பேசினோம். “சின்ன வயசிலிருந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்துப் பார்த்து அதில் ஆர்வம் ஏற்பட்டது. அதிலுள்ள டெக்னிக்குகளைக் கற்றுக்கொண்டேன். கடந்த ஆண்டு கலந்துகொண்டாலும் இந்த ஆண்டுதான் இவ்வளவு காளைகளைப் பிடித்தேன். ஏனோ தானோவென்று விளையாடும் விளையாட்டு அல்ல இது. ரொம்ப கவனமாக விளையாட வேண்டும். முதல் பரிசாகக் கார் பெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

காருடன் கார்த்திக்
காருடன் கார்த்திக்
பிரபாகரன்
பிரபாகரன்

* 300 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளைப் பிடித்து முதலிடம் வந்து பைக் பரிசாக வென்றவர் பிரபாகரன். “2020-ல் பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடமும், 2021-ல் இரண்டாமிடமும் வந்தேன். கடந்த ஆண்டு முதலிடத்தைத் தவறவிட்டதால், இந்த முறை கடுமையாகப் பயிற்சி எடுத்தேன். நான் கார் டிரைவராக வேலை பார்க்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு முன்னால் விரதம் இருந்து பயிற்சி எடுக்க ஆரம்பிப்பேன். அதன் விளைவால் நின்று விளையாட முடிந்தது” என்றார் அவர்.

*மாடுபிடி வீரர்களின் சாதனை ஒரு பக்கமென்றால், மாடு விடுவோரின் சாதனை தனியானது. அந்த வகையில் 16 வயதுச் சிறுமி யோகதர்ஷினி பரபரப்பை ஏற்படுத்தினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக வந்த யோகதர்ஷினியின் காளை நன்றாக விளையாடியும் வீரர்களிடம் பிடிபட்டது. ஆறுதல் பரிசு தர அமைச்சர் பி.மூர்த்தி மைக்கில் அழைத்தும், பரிசு வேண்டாம் என மறுத்து கம்பீரமாகக் காளையைப் பிடித்தபடி வேகமாகச் சென்றார். சமூக ஊடகங்களால் வீரத் தமிழச்சி என்று கொண்டாடப்பட்டார் அவர். மதுரை ஐராவதநல்லூரில் வசிக்கும் முத்துவின் மகள் யோகதர்ஷினியிடம் பேசினேன்.

‘‘எங்க வீட்டில் ரெண்டு ஜல்லிக்கட்டுக் காளைகள் இருக்கு. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அப்பா போகும்போது 10 வயசிலிருந்து நானும் அவரோட போக ஆரம்பிச்சேன். அதிலிருந்து ஜல்லிக்கட்டுக் காளைகள் மேல பாசம் வந்துவிட்டது. நானும் காளை வளர்க்கப் போறேன்னு சொன்னதைக் கேட்டு வீட்டுல பயந்தாங்க. அப்புறம் காளைகள் என் சொல் பேச்சு கேட்டு நடந்துக்குறதைப் பார்த்து அசந்துட்டாங்க. ஏற்கெனவே பல போட்டியில பரிசு வாங்கின என் காளை, கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பரிசு வாங்கல. அதுக்காக நான் கவலைப்படல. தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருப்போம். ஜெயிக்காமப் பரிசு வாங்கினா நம்ம காளைக்கு விளையாட்டுல ஆர்வம் குறைஞ்சிடும். அடுத்த ஜல்லிக்கட்டுக்கு மறுபடியும் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சுட்டேன். ஜெயிச்சுட்டுப் பரிசு வாங்குவேன்” என்றார் உற்சாகம் குறையாமல்.

கார்த்திக்
கார்த்திக்
யோகதர்ஷினி
யோகதர்ஷினி

* மதுரையைச் சேர்ந்த சிறுமி அன்னலட்சுமியும் வாடிவாசல் வழியாக தன் காளையுடன் வந்தார். உற்சாகக் குரல் எழுப்பித் துண்டைச் சுழற்றியபடி களத்தில் சுற்றி தன் காளையை உற்சாகப்படுத்தினார். காளை பிடிபடாததால் பரிசு பெற்றுச் சென்றார். அவரும் அன்றைய தினம் சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டார்.

* அவனியாபுரத்தில் மணப்பாறையைச் சேர்ந்த தேவசகாயத்தின் காளை சிறப்பாக விளையாடி கார் பரிசு பெற்றது. பாலமேட்டில் சிவகங்கை புலியூர் சூறாவளியின் காளை கார் பரிசு பெற்றது.

* பெரும் எதிர்பார்ப்போடு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை இல்லாத அளவில் 1,020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டதில் 21 காளைகளைப் பிடித்து கருப்பாயூரணி கார்த்திக் கார் பரிசு பெற்றார். 18 காளைகளைப் பிடித்து அலங்காநல்லூர் ராம்குமார் 2வது பரிசு பெற்றார். சிறந்த காளையாகப் புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனுக்கு முதல் பரிசாகக் கார் அறிவிக்கப்பட்டது. திருமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் காளைக்கு 2வது பரிசு அளிக்கப்பட்டது.

* ஒரு காலத்தில் வரைமுறை இல்லாமல் நடந்த ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளும், பெரும் காயங்களால் வீரர்களும் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். மாடுகளும் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. குடல் சரிந்து வீரர்கள் மரணமடைந்த சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. பிறகு நீதிமன்றங்கள் மூலம் புதிய விதிகள் உருவாக்கப்பட்டு விதிமீறல்கள் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. இப்போது கொரோனாக் கட்டுப்பாடு காரணமாக விதிகள் கடுமையாக்கப்பட்டு பாதுகாப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

“ஜெயிச்சுட்டு பரிசு வாங்குவேன்!”

* ஜல்லிக்கட்டுக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மருத்துவர்கள் தயாராக இருந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கருகே அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களும் தயாராக நின்றிருந்தனர். சாதாரண காயம் என்றால், அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், சீரியஸ் என்றால் மதுரை அரசு மருத்துவமனைக்கும் உடனே கொண்டுசெல்லப்பட்டனர்.

* தற்போது கொரோனா காலம் என்பதால், அனைத்து விதமான பரிசோதனைக்குப் பின்பே வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்கும் மருத்துவ உதவிக்குழு தயார் நிலையில் எப்போதும் இருக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கடுமையான கட்டுப்பாட்டுடன் நடந்தாலும், புதிய புதிய ஹீரோக்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism