Published:Updated:

`அந்த நிகழ்வுக்குப் பின் டாய்லெட்டை நானே சுத்தம் செய்றேன்!' - வாசகர் ஷேரிங்க்ஸ் #MyVikatan

Representational Image
Representational Image

அந்த முன்பதிவில்லா பெட்டியில் ஜனத்திரள் உள்ளே நிரம்பி வழிந்து வாசல் வரை இருந்தது.

ரயில் பயணத்தின்போது எனக்குக் கிடைத்த அனுபவப்பாடம் இது. சில மாதங்களுக்கு முன்பு வார இறுதி நாள் ஒன்றில் கோவில்பட்டியில் இருந்து சென்னை செல்ல வேண்டி ரயிலில் முன்பதிவு செய்திருந்த நான் வண்டியைத் தவறவிட்டு விட்டேன்.

Representational Image
Representational Image

வேறுவழியின்றி அடுத்து வந்த ரயிலின் முன்பதிவில்லாப் பெட்டியில் கூட்டத்தோடு என்னைத் திணித்துக் கொண்டேன். அந்த முன்பதிவில்லா பெட்டியில் ஜனத்திரள் உள்ளே நிரம்பி வழிந்து வாசல் வரை இருந்தது. கழிவறை அருகே இருந்த காலியிடத்தில் வாஷ்பேசினைச் சுற்றிலும் இருந்த சிறிய இடத்தில் ஏழெட்டு பேர்கள் குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டோம். அது மிகப்பெரிய தவறென்று ரயில் கிளம்பியதும் உணர்ந்தோம். அந்த வாஷ்பேசினில் அதற்கு முன் கை அலம்பியவர்கள் போட்டுச் சென்ற உணவுக்கழிவுகள் அடைத்துக்கொண்டு நிறைகண்மாய் போல தளும்பிக்கொண்டு இருந்தது. ரயில் கிளம்பியதும் ரயிலின் குலுங்களுக்கு அந்தத் தண்ணீர் அலம்பி பெருந்துளியாக சிதறி சுற்றியிருந்தவர்களின்மீது தீர்த்த அபிஷேகமாக தெறித்தது.

அவசர அவசரமாக அனைவரும் எழுந்துகொண்டாலும் வேறு எங்கும் நகர முடியாமல் சகித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தோம். ஏற்கெனவே உள்ளே நகர்ந்து சென்றவர்கள் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார்கள் ``திருநெல்வேலியில இருந்து இந்த அபிஷேகம்தானுல்ல.." என்று. அந்த வாஷ்பேசினில் கொஞ்சம் தண்ணீர் குறைந்தாலும் அடுத்தடுத்து பாத்திரங்களையும் கைகளையும் தொடர்ந்து கழுவிக்கொண்டே இருந்தார்கள். வாஷ்பேசின் வாசிகளான நாங்கள் கெஞ்சிக்கூட பார்த்துவிட்டோம். கடைசியாய் வந்த ஒரு முரட்டுப்பெண் எங்களை முறைத்தவாறே அடிவயிறு வரை காறி அந்த வாஷ்பேசினில் உமிழ்ந்துவிட்டுச் சென்றாள். அடுத்த நிலையத்தில் இறங்கிவிட வேண்டும் எனவும் ரயில்வே துறையும் அரசும்தான் இதற்குக்காரணம் எனவும் காரணமானவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அபிஷேகம் பெற்றவர்கள் வழிமுழுவதும் பேசிக்கொண்டே வந்தோம்.

Representational Image
Representational Image

ஒருவழியாக அடுத்த சாத்தூர் ரயில் நிலையம் வந்ததும் நல்வாய்ப்பாக நாலைந்து இருக்கைகள் காலியாகி எங்களது வாஷ்பேசின் குழு புரமோஷன் பெற்று உள்ளே சென்றுவிட்டோம். இப்போது வாஷ்பேசினைச் சுற்றிலும் வேறு ஒரு குழு. ஒளிரும் சிறிய கண்களுடன் கூடிய மங்கோலிய முக இளைஞர்கள் இருவரும் மற்றும் சிலரும் அமர்ந்திருந்தனர்.

முழுக்கை சட்டையை முழங்கைக்கு மேல் சுருட்டிவிட்ட அவன் கையை வாஷ்பேசினில் விட்டு பொறுமையாக உணவுக் கழிவுகளை அள்ளி எடுத்தான். பின் யோசித்தவன் வாஷ்பேசின் கீழ் உள்ள துண்டுக்குழாயை அடிப்பக்கமாக உருவி எடுத்ததும் மடை திறந்த வெள்ளமாய் வாஷ்பேசின் தண்ணீர் முழுவதும் அடிப்பக்கமாக வெளியேறிவிட்டது.

Representational Image
Representational Image

துண்டுக்குழாயை மறுபடியும் பொறுத்தி தண்ணீரை நன்றாக திறந்து வாஷ்பேசினை சுற்றிலும் கழுவிவிட்டு நண்பன் தந்த சிறு பாக்கெட் சாம்பினால் கைகழுவிய பின் ஜீன்ஸ் பேன்ட்டில் இருந்த கர்சீப் எடுத்து கைதுடைத்து மறுபடியும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டான். அருகில் உட்கார்ந்திருந்த பெரியவர் அவனது தோளினைத் தட்டிக்கொடுத்ததை தீர்த்தவாரி பெற்ற எங்களில் பெரும்பாலானோர் பார்த்தோம். நான் தாம்பரம் நிலையத்தில் இறங்கும்போது அவனுக்கு இறுக்கமாக கை குலுக்கினேன். அது நடந்த பின்புதான் நான் பயன்படுத்திய கழிவறையை நானே சுத்தப்படுத்த ஆரம்பித்தேன் என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன்..

-நாராயணபுரம் கணேசவீரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு