அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

புராதன சின்னங்களுக்கு ‘வேட்டு’ வைக்கும் வெடிமருந்து தொழிற்சாலை?

வெடிமருந்து தொழிற்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
வெடிமருந்து தொழிற்சாலை

- எதிர்க்கும் மக்கள்... தடுக்குமா அரசு?!

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள ஐவர் மலை அடிவாரத்தில், தனியார் நிறுவனம் ஒன்று வெடிமருந்து தொழிற்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதால், ``20,000 ஏக்கர் விவசாய நிலமும், ஈராயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன சின்னங்களும் பாதிக்கப்படும்” என்று பதறுகிறார்கள் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள்!

‘வெடிமருந்து தொழிற்சாலை எதிர்ப்புக் குழு’ ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ், இது குறித்து நம்மிடம் பேசும்போது, ‘‘தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் இந்த வெடிமருந்துத் தொழிற்சாலை அமைப்பதற்கான அனைத்து பேப்பர் வேலைகளும் விரைந்து முடிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம், ‘இந்தப் பகுதியில் எவ்வித விவசாயமும் நடக்கவில்லை, குடியிருப்புகள் இல்லை, புராதன சின்னங்கள் இல்லை’ எனப் பொய்யான தகவல்களை அளித்து, அனுமதி பெற்றிருக்கிறார்கள். ஆனால், இந்த வட்டாரத்தில் 20,000 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. குடியிருப்புகள், அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளி, குதிரையாறு அணை, அமராவதி அணை உள்ளிட்ட நீராதாரங்களும், அரிய வகை வன உயிர்களும் இருக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், தினம்தோறும் ஆயிரக்கணக்கான கிலோ வெடிமருந்து தயாரிக்கப்பட்டு, இருப்பும் வைக்கப்படுவது எப்பேர்ப்பட்ட ஆபத்து... ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும். அரசு உடனடியாக இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.

புராதன சின்னங்களுக்கு ‘வேட்டு’ வைக்கும் வெடிமருந்து தொழிற்சாலை?

மற்றொரு ஒருங்கிணைப்பாளரான காளிதாஸ், ‘‘தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஐவர் மலைப் பகுதியில், கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்கள், சமணப் பள்ளி குறித்த கல்வெட்டுகள், கி.பி 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல் எச்சங்களும் காணப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பகுதியில், 240 ஏக்கரில் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்க முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பழநி எம்.எல்.ஏ-வான ஐ.பி.செந்தில்குமாரின் ஆதரவில்லாமல் இவ்வளவு மும்முரமாகப் பணிகள் நடக்க வாய்ப்பில்லை’’ என்றார்.

ஜெகதீஷ்,  காளிதாஸ், செந்தில்குமார்,
ஜெகதீஷ், காளிதாஸ், செந்தில்குமார்,

இது குறித்து விளக்கம் கேட்டு ஆலை நிர்வாகத் தரப்பிடம் பேச முயன்றோம். ஆனால், நம் அழைப்பு களை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, ஐ.பி.செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘வெடிமருந்து தொழிற்சாலை அனுமதிக்குப் பெரும்பாலான பணிகள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே முடிந்துவிட்டன. இருப்பினும், மக்கள் நலனைப் பாதிக்குமென்றால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.