தடைப்பட்ட வருமானமும், தவிர்க்க முடியாத செலவுகளும்தான் ஓய்வுக்காலப் பிரச்னை. எனவேதான் ஓய்வுக்காலத்தில் ஆயிரம் ரூபாய் உபரியாகக் கிடைத்தால்கூட அதை லட்ச ரூபாயாகப் பாவிப்பார்கள் மூத்த குடிமக்கள்.
காரணம், பணத்தின் பவர் பளிச்செனப் புரிந்துகொள்ளப்படும் காலம், ஓய்வுக்காலம். இப்படிப்பட்ட ஓய்வுக்காலத்தில் பல லட்சம் ரூபாய் உபரியாகக் கிடைத்தால் பரவசத்துக்குக் கேட்பானேன். அப்படி ஓர் இன்ப அதிர்ச்சியைத் தனது ஊழியர்களுக்குத் தந்திருக்கிறது தமிழக அரசு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஓய்வு வயது உயர்வு
‘ஜூன் மாதத்தோடு முடிந்தது அரசாங்க உத்தியோகம், ஜூலை முதல் பென்ஷன்’ என்று நினைத்துக்கொண்டிருந்த ஊழியர்கள் ஜூலை முதல் ஓராண்டுக்கு சம்பளத்தை முழுமையாகப் பெறப்போகிறார்கள். சம்பளம் என்பது பென்ஷனைவிட இரு மடங்காகவோ, இரு மடங்கைவிட அதிகமாகவோ இருக்கலாம். ஓராண்டுக் காலத்துக்குக் கிடைக்கப்போகும் சம்பளம் என்பது சற்றும் எதிர்பாராத ஓர் உபரி வருமானமே. தவிர, ஓய்வுக்காலப் பணப் பலன்கள் மூலமாகவும் மற்றோர் உபரி வருவாய் வந்து சேரும்.

அதாவது, ஓராண்டு கூடுதலாகப் பணியாற்றப்போவதால், ஓய்வுபெற்ற மறுநாளில் தரப்படும் கிராஜுவிட்டி, கம்யூடேஷன், விடுப்புச் சம்பளம் ஆகியவை முந்தைய ஆண்டில் பெற்றிருக்க வேண்டியவற்றைவிட அதிகமாக இருக்கும். இந்த இரண்டு வகை உபரி வருமானங்களின் கூட்டுத்தொகை சில பல லட்சங்களாக இருக்கும். (பார்க்க: அட்டவணைகள்)
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஒற்றை ரூபாயைக்கூடப் பற்றிப் பிடித்து பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ள நிலையில் இந்த உபரி வருவாயை ஓய்வுக்கால (Retirement corpus) நிதியத்தில் சேர்த்துவிடாமல் ஒரு தனி நிதியமாக உருவாக்கலாம், வளர்த்தெடுக்கலாம். அவ்வாறு வளர்த்தெடுத்தால் இந்தத் தனி நிதியத்தின் பயன்பாடு முதுமைக்கான முழுக்கவசமாகத் திகழக்கூடும்.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த உபரி வருவாய் எப்போதோ கிடைக்கப்போகும் ஒன்றல்ல, இப்போதே கிடைக்கத் தொடங்கிவிடும்.

ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளவர், ஜூலையில் பென்ஷன் பெற வேண்டும். பணி நீட்டிப்பு காரணமாக ஜூலை மாத பென்ஷனுக்கு பதிலாகச் சம்பளத்தையே முழுமையாகப் பெற்றுவிடுவார். அந்த ஜூலை மாதச் சம்பளத்திலிருந்தே உபரி வருமானம் தொடங்கிவிடும். எனவே, உபரி வருவாயில் தனி நிதியம் உருவாக்க இப்போதே திட்டமிடுவது அவசியம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என்ன திட்டம்..?
மிகச் சுலபமான திட்டம். ஓய்வு வயது உயர்த்தப்படாமல் இருந்திருந்தால் அவர் ஜூன் மாதம் ஓய்வு பெற்று, ஜூலை மாதத்துக்குப் பென்ஷன்தானே வாங்கியிருப்பார். அந்த பென்ஷனுக்கு உட்பட்டுத்தானே தனது மாதாந்தர பட்ஜெட்டை அமைத்திருப்பார். அதே பென்ஷன் அளவுக்கான பணத்தை மட்டுமே மாதச் செலவாக அடுத்துவரும் 12 மாதங்களுக்கும் நடைமுறைப் படுத்துவதுதான் இந்தத் திட்டம். எப்படி என்று கேட்கிறீர்களா?

கடைசிச் சம்பளம்!
பென்ஷன் பெறும் தகுதியுடன் தற்போது ஓய்வுபெறும் ஊழியர்களின் கடைசிச் சம்பளம் 40,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை இருக்கலாம். கடைசிச் சம்பளம் என்பது அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படியின் கூட்டுத்தொகை. பென்ஷன் உள்ளிட்ட ஓய்வுக்காலப் பலன்கள் அனைத்துக்கும் கடைசிச் சம்பளம்தான் அடிப்படை.
சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி, 80,000 ரூபாயை கடைசிச் சம்பளமாகப் பெற்ற ஒருவர் ஜூன், 2020-லேயே ஓய்வு பெற்றிருந்தால், ஜூன் 2020 முதல் 28,873 ரூபாயை பென்ஷனாகப் பெறுவார். ஓய்வு வயது நீட்டிப்பு காரணமாகப் பணியில் தொடர்பவர், ஜூலை முதல் 85,751 ரூபாயைச் சம்பளமாகப் பெறுவார். அதாவது பென்ஷன் போக உபரி வருமானம் மாதமொன்றுக்கு ரூ. 56,878. அடுத்த 12 மாதங்களுக்குக் கிடைக்கப்போகும் இந்த உபரி வருமானத்தை இஷ்டம்போலச் செலவு செய்துவிடாமல், ஓய்வுபெறும் நாள்வரை பாதுகாப்பான வங்கி எஃப்.டி-யில் செலுத்தினால், ஓராண்டு முடிவில் சுமார் 7 லட்சம் ரூபாய் சேர்ந்திருக்கும். ஓராண்டு கழித்து ஓய்வுபெறும்போது ஏற்கெனவே சேர்த்த ரூ.7 லட்சத்துடன், ஓய்வுக்காலப் பலனில் உபரியாகக் கிடைத்த ரூ.1.45 லட்சம் சேர்ந்து மொத்தம் சுமார் ரூ.8.45 லட்சம் கிடைக்கும்.
ஆசிரியர்கள் இன்னும் அதிகம் சேர்க்கலாம்!
நாம் இதுவரை பார்த்த கணக்கீடுகள் அரசு ஊழியர்களுக்குரியவை. ஓய்வு வயது உயர்வு காரணமாக ஆசிரியர்கள் பெறக்கூடிய உபரி வருவாய் இதைவிட அதிகம். எப்படியெனில், கல்வியாண்டு இறுதிவரை ஆசிரியர்களுக்குத் தரப்படும் மறு வேலைவாய்ப்பு (Reemployment) காரணமாக ஜூன் 2021-ல் வயது முதிர்வில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மே 2022 வரை பணியில் தொடர்வார். அதாவது, ஜூலை 2021-ல் தொடங்கி மே 2022 வரை 11 மாதங்கள் கூடுதலாக வேலை செய்ய வாய்ப்பு இருக்கும். இந்தக் காலத்தில் சம்பளத்துடன் பென்ஷனும் கிடைக்கும். இவை இரண்டின் கூட்டுத்தொகை இவர் ஜூன் 2021-ல் பெற்ற கடைசிச் சம்பளத்துக்கு இணையாக இருக்கும். அதன்படி, அரசு ஊழியர்களைவிட ஆசிரியர்கள் பெறும் உபரி வருவாய் (11 மாதச் சம்பளம்) அதிகமாக இருக்கும்.
எதிர்பாராமல் கிடைக்கும் வருமானத்தைச் சிந்தாமல் சிதறாமல் சேர்த்து வைப்பதற்கான அணுகுமுறை இது. இந்த அணுகுமுறையை எல்லோருமே பின்பற்றலாம். ஆனால், கடந்த காலத்தில் அதிக அளவில் கடன் வாங்கி, அதற்கு எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டியைவிட அதிக வட்டி தர வேண்டியிருக்கும்பட்சத்தில், வங்கி எஃப்.டி-யில் பணத்தைச் சேர்ப்பதைவிட கடனை அடைப்பதே சரியாக இருக்கும்.
50 வயதுக்குமேல் கடன்படாமல் இருப்பது, ஓய்வுக்காலத்துக்கான நிதியத்தை 30 வயது முதலே சேர்க்கத் தொடங்குவது என்ற பழக்கத்தை இனிவரும் காலத்திலாவது கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம்.