அலசல்
சமூகம்
Published:Updated:

8 கிளைகள்... 3,000 வாடிக்கையாளர்கள்... போலி வங்கி... போலீஸில் சிக்கியது எப்படி?

சந்திரபோஸ் வேதாச்சலம்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திரபோஸ் வேதாச்சலம்

இணையத்தில் RAFC வங்கி குறித்துத் தேடியபோது, அதன் கிளைகள் குறித்த தகவல்கள் தெரிந்தன. அங்கு மஃப்டியில் சென்ற போலீஸார், வாடிக்கையாளர்களைப்போல நடித்தபடி நோட்டமிட்டனர்.

வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி பண மோசடி செய்யும் நபர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போலியாக ஒரு வங்கியையே நடத்தி, அதற்கு 8 கிளைகளையும் தொடங்கிய எம்.பி.ஏ பட்டதாரியின் செயல் ஆர்.பி.ஐ அதிகாரிகளையே அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.

8 கிளைகள்... ஆர்.பி.ஐ புகார்!

சென்னை அம்பத்தூர், லேடான் தெருவில், ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி’ (RAFC - Rural and Agriculture Farmers Co-operative Bank) செயல்பட்டுவந்தது. குறைந்த வட்டியில் கடன், மற்ற வங்கிகளைவிட சேமிப்புத் தொகைக்குக் கூடுதல் வட்டி என கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்ததால், வாடிக்கையாளர்கள் மொய்க்கத் தொடங்கினார்கள். இதனால், குறுகியகாலத்திலேயே மதுரை திருமங்கலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, பெரம்பலூர், சென்னை வடபழனி என 8 இடங்களில் தன் கிளைகளை விரித்தது அந்த நிறுவனம். ‘வங்கிப் பணி’ என்ற பெயரில் இன்டர்வியூவும் நடத்தப்பட்டு, ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை நியமிக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்த ஆர்.பி.ஐ அதிகாரி ஒருவர், “ `RAFC’ என்ற பெயரில் சென்னை வடபழனியில் செயல்படும் ‘வங்கி’ ஒன்றின் செயல்பாட்டில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அப்படி ஒரு பெயரில் செயல்பட ஆர்.பி.ஐ தரப்பில் எந்த வங்கிக்கும் அனுமதி கொடுக்க வில்லை” என்று புகார் தெரிவித்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு மற்றும் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகளைக்கொண்ட டீம் களத்தில் குதித்தது.

8 கிளைகள்... 3,000 வாடிக்கையாளர்கள்... போலி வங்கி... போலீஸில் சிக்கியது எப்படி?

இணையத்தில் RAFC வங்கி குறித்துத் தேடியபோது, அதன் கிளைகள் குறித்த தகவல்கள் தெரிந்தன. அங்கு மஃப்டியில் சென்ற போலீஸார், வாடிக்கையாளர்களைப்போல நடித்தபடி நோட்டமிட்டனர். அப்போது, மற்ற வங்கிகளைப் போலவே அங்கும் வாடிக்கையாளர்களுக்கு பாஸ் புக், டெபிட் கார்டு, லோன், நிரந்தர வைப்புத்தொகை என அனைத்து வங்கிச் சேவைகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்தனர். மேலும், ஆர்.பி.ஐ அனுமதி கொடுத்தது போன்ற போலி ஆவணங்களும் வங்கியில் ஒட்டப்பட்டிருந்தன. அங்கு பணியிலிருந்த மேலாளர்களிடம் போலீஸார் விசாரித்தபோது, “சார்... நாங்களும் இதை உண்மையான வங்கி என்று நினைத்துத்தான் வேலையில் சேர்ந்தோம். இந்த வங்கியின் தலைவர் பெயர் சந்திரபோஸ் வேதாச்சலம். சென்னை திருமுல்லைவாயலில் குடியிருக்கும் அவரிடம் வேண்டுமானால் விசாரியுங்கள்” என்று கெஞ்சியிருக்கிறார்கள்.

8 கிளைகள்... 3,000 வாடிக்கையாளர்கள்... போலி வங்கி... போலீஸில் சிக்கியது எப்படி?

யார் இந்த சந்திரபோஸ் வேதாச்சலம்?

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சந்திரபோஸை விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்தனர். விசாரணையில் அரக்கோணத்தில் ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் மேம்பாட்டு சங்கம்’ என்ற பெயரில் பதிவுசெய்து, அதை வங்கி எனக் கூறி பொதுமக்களை அவர் ஏமாற்றிவந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ``சென்னை ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதியில் பள்ளிப் படிப்பை முடித்த சந்திரபோஸ், சென்னையிலிருக்கும் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரியை முடித்தார். பின்னர், ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த பெண் ஒருவரின் மூலம் பணம் வரவு செலவு கணக்கு விவரங்களைக் கற்றுக்கொண்டு லண்டனில் எம்.பி.ஏ படிக்கச் சென்றார்.

லண்டனில் வங்கி, நிதி நிறுவனம், கூட்டுறவு சங்க செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு சென்னைக்குத் திரும்பிய சந்திரபோஸ், சென்னை வடபழனியில் 2021-ம் ஆண்டு `RAFC’ என்ற பெயரில் ஒரு போலி வங்கிக் கிளையைத் தொடங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, மல்டி செயின் லிங்க் பிசினஸில் ஈடுபடுவோர்களைக் குறிவைத்து மதுரை திருமங்கலம், சேலம், ஈரோடு பகுதிகளில் தன் போலி வங்கியின் கிளைகளைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார்.

8 கிளைகள்... 3,000 வாடிக்கையாளர்கள்... போலி வங்கி... போலீஸில் சிக்கியது எப்படி?

ஆயிரம் பாஸ்புக்... 500 ஏ.டி.எம் கார்டுகள்!

தனது ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கத்துக்கான வங்கிக் கணக்குகளைத் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கிய சந்திரபோஸ், தனியார் வங்கி மூலம் ஏராளமான டெபிட் கார்டுகளை வாங்கியிருக்கிறார். அதன்மீது போலியாக, ‘RAFC வங்கி’யின் ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கிறார். இந்த போலி RAFC வங்கிக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். கடந்த ஓராண்டுக்குள், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் தொகை வந்திருக்கிறது. ஆனால், 10,000 ரூபாய்க்கு மேல் யாருக்கும் கடன் கொடுக்கவில்லை. பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங்களை வங்கிக் கிளைகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தற்போது, இந்த போலி வங்கியிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பாஸ்புக், 500 ஏ.டி.எம் கார்டுகள், ஆர்.பி.ஐ கொடுத்தது போன்ற போலி ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். பென்ஸ் கார், சொகுசு பங்களா என ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்த சந்திரபோஸின் வங்கிக் கணக்கிலிருந்த 60 லட்ச ரூபாயை முடக்கியிருக்கிறோம். மேலும் சந்திரபோஸுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

பெண் மற்றும் காவல்துறை அதிகாரி தொடர்பு?

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “இந்த போலி வங்கிக்குப் பிற ஆர்.பி.ஐ அனுமதிபெற்ற வங்கிகள் போன்றே இணையதளம் இருக்கிறது. பெயரில்தான் விவசாயிகள் என்று இருக்கிறதே தவிர, இவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை. தன்னுடைய மனைவி, தம்பி எனக் குடும்ப உறுப்பினர்களுக்கு சங்கத்தில் பதவிகளைக் கொடுத்து வைத்திருந்திருக்கிறார் சந்திரபோஸ். ஆனால், அவர்களுக்கு இந்த மோசடி குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. பிசினஸ்மேன்களிடம் ஆங்கிலத்தில் பேசி டெபாசிட் தொகைகளைப் பெற்ற சந்திரபோஸ் இந்த மோசடியின் மாஸ்டர் மைண்டாக இருந்தாலும் அவருக்குப் பின்னணியில் ஒரு பெண்ணும், தென்மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரியும் இருப்பதாக எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அதனால் சந்திரபோஸைக் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். இதுவரை பொதுமக்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவிதப் புகாரும் வரவில்லை என்பதுதான் ஆச்சர்யம்” என்றார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சந்திரபோஸ். அவரது போலி வங்கியின் அனைத்துக் கிளைகளும் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், மக்களே உஷார்!