கட்டுரைகள்
Published:Updated:

8 கிளைகள்... 3,000 வாடிக்கையாளர்கள்... கோடிக்கணக்கில் மோசடி...

கோடிக்கணக்கில் மோசடி
பிரீமியம் ஸ்டோரி
News
கோடிக்கணக்கில் மோசடி

போலி வங்கி போலீஸில் சிக்கியது எப்படி?

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிளையை போலியாக ஆரம்பித்து மோசடி செய்த ஒரு கும்பல் சில மாதங்களுக்கு முன்பு பிடிபட்டது. அதைவிட ஒரு படி மேலே சென்று போலியாக வங்கி ஒன்றை நடத்திய ஆசாமி இப்போது பிடிபட்டிருக்கிறார். உண்மையான வங்கிகள் வாராக்கடன் பிரச்னையால் நஷ்டத்தில் தவிக்க, இந்தப் போலி வங்கி மூலம் அந்த ஆசாமி கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரிசர்வ் வங்கி ஒரு புகார் அளித்தது. ‘போலியான வங்கி தொடங்கி, விவசாயிகள், தொழில் தொடங்குபவர்களை ஒரு கும்பல் ஏமாற்றிவருகிறது’ என்ற அந்தப் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு - வங்கி மோசடி புலனாய்வுத்துறை விசாரித்தது. சென்னை அம்பத்தூரில் இயங்கிவந்த ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி (Rural and Agriculture Farmers Co operative Bank - RAFC Bank), ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியதுபோல, போலியான சான்றிதழை உருவாக்கி, போலியான வங்கியை நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.

8 கிளைகள்... 3,000 வாடிக்கையாளர்கள்... கோடிக்கணக்கில் மோசடி...

ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கிவரும் இந்த வங்கிக்கு எட்டு மாவட்டங்களில் கிளைகள் இருப்பதும், நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக்கொண்டு இந்த வங்கி செயல்பட்டுவருவதும் தெரியவந்தது. சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவர்தான் இதைத் தொடங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்து ஏமாற்றியது தெரியவந்து, அவரைக் கைதுசெய்தது போலீஸ்.

அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் போன்ற இடங்களில் கிளைகளைத் திறந்து செயல்பட்டுவந்திருக்கிறது. இந்த வங்கிகளில் 3,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. `ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி’ என்ற பெயரில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, அதைப் பல்வேறு தனியார் வங்கிகளுடன் இணைத்து பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து, அதை அடாவடியாக வசூல் செய்திருக்கிறார்கள். வங்கியில் மேலதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பணி நியமனம் செய்வதற்கு இரண்டு முதல் ஏழு லட்சம் வரை பணம் பெற்று பணியமர்த்தியிருக்கிறார்கள்.

சந்திரபோஸ்
சந்திரபோஸ்

சந்திரபோஸிடமிருந்தும், வங்கியிலிருந்தும் போலியான வங்கிப் பதிவுச் சான்றிதழ், போலி பாஸ்போர்ட்டுகள், வங்கியின் ஆவணங்கள், போலிப் படிவங்கள், போலி முத்திரைகள், சொகுசு கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், சந்திரபோஸின் வங்கிக் கணக்கில் இருக்கும் ரூ.56,65,336/- பணம் முடக்கப்பட்டிருக்கிறது.

சந்திரபோஸ் லண்டனில் எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வங்கித்துறையில் பணியாற்றியிருக்கிறார். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, தமிழகம் வந்து ஒரு போலியான வங்கியைத் தொடங்கி நடத்திவந்திருக்கிறார். அவர் நண்பர்களின் உதவியுடன், வங்கியின் செயல்பாட்டுக்குத் தேவையான பணப் பரிவர்த்தனை மற்றும் கணக்குகளைப் பராமரிக்கும் மென்பொருளையும் உருவாக்கியிருக்கிறார்.

சென்னை அம்பத்தூரிலுள்ள கிளையில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்திருக்கிறது. மீதமுள்ள எட்டு கிளைகளிலும் எவ்வளவு மோசடி நடந்திருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேசமயத்தில், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால், அதைவிடப் பல மடங்கு விவசாயக் கடன் வழங்கப்படும் என்ற விளம்பரத்தை நம்பி பல விவசாயிகள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சந்திரபோஸ் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த போலி வங்கி விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பலரும் கைதுசெய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

8 கிளைகள்... 3,000 வாடிக்கையாளர்கள்... கோடிக்கணக்கில் மோசடி...

சரி, இந்த போலி வங்கி செயல்படுவது எப்படி வெளியில் தெரிந்தது?

நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த வங்கியில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணம் கட்டியிருக்கிறார். பணம் செலுத்தியும் வேலை கொடுக்காமல் இழுத்தடித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருக்கிறார். போலியான வங்கி செயல்பட்டுவருவதைக் கண்டறிந்த போலீஸார், இது பல மாவட்டங்கள் தொடர்புடையதாக இருந்ததால், விசாரணையை சென்னை குற்றப்பிரிவுக்கு மாற்றினர். அவர்களின் விசாரணையில் இந்த பூதாகர மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு ரிசர்வ் வங்கியிடம் முறைப்படி புகார் பெற்று நடவடிக்கை எடுத்தனர்.