Published:Updated:

இருளர்கள் என்றாலே திருடர்களா?

விருத்தாச்சலம்
பிரீமியம் ஸ்டோரி
விருத்தாச்சலம்

பொய்வழக்குச் சர்ச்சையில் விருத்தாச்சலம் காவல் நிலையம்... கொதிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்...

இருளர்கள் என்றாலே திருடர்களா?

பொய்வழக்குச் சர்ச்சையில் விருத்தாச்சலம் காவல் நிலையம்... கொதிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்...

Published:Updated:
விருத்தாச்சலம்
பிரீமியம் ஸ்டோரி
விருத்தாச்சலம்

நாடோடிப் பழங்குடிகளான இருளர் சமூகத்தினர்மீது, பொய் வழக்குகளைக் காவல்துறை திணிக்கும்விதத்தையும், அவர்கள்மீது தொடுக்கப்படும் அத்துமீறல்களையும் வன்முறையையும் மையமாகவைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் `ஜெய் பீம்.’ இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தப் படம், கடலூர் மாவட்டம், கம்மாபுரம் காவல் நிலையத்தில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற லாக்கப் மரணத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்டது. தற்போது அதே போன்ற பொய் வழக்குப் புகாரில் சிக்கியிருக்கிறது விருத்தாசலம் காவல் நிலையம்!

கடந்த 26.12.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த அஜீத் என்ற இளைஞரைக் கைதுசெய்த விருத்தாசலம் காவல்துறையினர், அவர்மீது கடைகளை உடைத்து பணத்தைத் திருடியதாக நான்கு திருட்டு வழக்குகளைப் பதிவுசெய்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த அஜீத், ‘தனது பணத்தைப் பறித்துக்கொண்டதுடன், பொய் வழக்கு போட்டுச் சிறையிலும் அடைத்த போலீஸார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்.

அஜித்
அஜித்

அஜீத்திடம் பேசினோம். “எங்க அப்பா பேரு கண்ணன். அம்மா பேரு கன்னியம்மாள். உளுந்தூர்பேட்டைக்குப் பக்கத்துல ஏரிக்கரையில ஒருத்தரோட கொல்லையில வேலை பார்த்தோம். அதுக்கப்புறம் வேப்பூருக்கு அடுத்த ராசாப்பாளையத்துல ஒருத்தரோட கொல்லையில குடும்பத்தோட கொத்தடிமையா வேலை பார்த்தோம். மனித உரிமைச் செயற்பாட்டாளர் கல்யாணி, பாபு, திருமேனி சார் மூலமா 15.12.2021 அன்றைக்கு மீட்கப்பட்டு, கீரிமாதா கோயிலுக்குப் பக்கத்துல இருக்கற இருளர் குடியிருப்புக்குப் போனோம். கள்ளக்குறிச்சி கலெக்டர் தர் சார் எங்களை நேர்ல வந்து பார்த்து ஆறுதல் சொல்லிட்டு, 5,000 ரூபா குடுத்துட்டுப் போனாரு. அதுக்கப்புறம் வேறவொரு இடத்துல எல்லாரும் கூலி வேலைக்குப் போனோம். மங்கலம்பேட்டைல இருக்கற என்னோட அக்கா பாக்கியலட்சுமி, 26.12.2021 அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்துச்சு. அப்போ அக்காவுக்கும் அம்மாவுக்கும் சண்டையாகி, அக்கா கோவிச்சுக்கிட்டுப் போயிடுச்சு. அக்காவைச் சமாதானப்படுத்தறதுக்காக என் பிளாஸ்டிக் பையை எடுத்துக்கிட்டு கெளம்புனேன். அந்தப் பையிலதான் கலெக்டர் குடுத்த காசும், செங்கல் சூளை ஓனர் கொடுத்த அட்வான்ஸ் காசும் இருந்துச்சு. உடம்பு அசதியா இருந்ததால விருத்தாசலம் போயி சரக்கு சாப்பிட்டுட்டு, அதுக்கப்புறம் அக்காவைப் பார்க்கப் போகலாம்னு தோணுச்சு. சாயங்காலம் 7 மணிக்கு விருத்தாசலத்துல 270 ரூபாய்க்கு ஒரு குவாட்டரும், 50 ரூபாய்க்கு கோழிக்கறியும் வாங்கிச் சாப்பிட்டேன்.

அக்கா வீட்டுக்குப் போறதுக்காக பஸ் ஸ்டாண்ட் போகும்போது, ஒரு இடத்துல போதையில மயக்கம் போட்டு விழுந்துட்டேன். காலைல 2:45 மணிக்கு முழிப்பு வந்து, பஸ் ஸ்டாண்டுக்குப் போனேன். அப்போ, அங்கிருந்த போலீஸ்காரங்க என்னை ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போய், எங்கிட்டருந்த காசையும், செல்போனையும் புடுங்கிட்டாங்க. ‘காசு ஏது?’ன்னு கேட்டாங்க. கலெக்டரும், செங்கல் சூளை முதலாளியும் குடுத்ததுன்னு சொன்னேன். மறுநாள் காலைல 6 மணிக்கு வந்த மூணு போலீஸ்காரங்க என்கிட்ட ‘என்ன சாதி?’ன்னு கேட்டாங்க. நான் `இருளர்’னு சொன்னேன். அதுக்கப்புறம் என்னை ஒரு தனியறையில முட்டிபோட வெச்சாங்க. ரெண்டு பாதத்துலயும் லத்தியால அடிச்சு, ‘கடைகளை ஒடைச்சு காசைத் திருடினதா ஒத்துக்க’ன்னு சொன்னாங்க. நான் `மாட்டேன்’னு சொன்னதால, கொறடால என் கை விரல்களை நசுக்குனாங்க. அவங்க ‘சொல்றதைக் கேக்கலைன்னா சாகடிச்சிடுவோம்’னு மிரட்டுனாங்க. உசிரு போற அளவுக்கு வலிச்சுது சார். தாங்க முடியாம ஒத்துக்கிட்டேன். என்னை ஒரு கார்ல கூட்டுக்கிட்டுப் போயி, என்னோட பத்து கைவிரல் ரேகைகளையும் எடுத்தாங்க. அதுக்கப்புறம் சின்னப் பசங்களுக்கான ஜெயில்ல போட்டுட்டாங்க” என்றார்.

இருளர்கள் என்றாலே திருடர்களா?

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் கல்யாணி, “அந்த வீட்டுலேயே பொறுப்பான பையன் அஜீத்தான்னு அவரோட அப்பா, அம்மா சொல்றாங்க. அதனாலதான், கலெக்டர் நிவாரணமா குடுத்த 5,000 ரூபாயையும், செங்கல்சூளை முதலாளி குடுத்த 5,000 ரூபாயையும் அவரோட பையில் வெச்சுருக்காங்க. அதுல 3,000 ரூபாயை வீட்டில் எடுத்துச் செலவு பண்ணிட்டதால, அந்தப் பணத்தைக் கேட்டு வந்த அஜீத்தோட அக்காவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்திருக்கு. அதுல கோவிச்சுக்கிட்டுப்போன அக்காவைச் சமாதானப்படுத்தத்தான் அஜீத் 7,000 ரூபாயை எடுத்துக்கிட்டுப் போயிருக்காரு. அப்போதான் போலீஸ் அவரைப் பிடிச்சுருக்காங்க. நைட் வரைக்கும் சும்மா விசாரிச்சவங்க, இருளர்னு தெரிஞ்சப்புறம் கொடூரமா சித்ரவதை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க.

அவர் கையில் வெச்சிருந்த காசுக்குத் தகுந்த மாதிரி, ஒரு கடையில் ரூ.5,000, இரண்டு கடைகளில் தலா ரூ.1,000, ஒரு கடையில் ரூ.340 திருடுனதா நான்கு பொய் வழக்குகள் போட்டுருக்காங்க. அஜீத் சொல்றபடி பார்த்தால் மது, சிக்கன், பஸ் செலவு ரூ.20 போக ரூ.6,660-தான் வெச்சிருந்திருக்கிறார். போலீஸ்காரர்கள் சொந்தப் பணம் ரூ.680-ஐ போட்டு பொய் வழக்கை ஜோடித்திருக்கிறார்கள். திருடு போயிடுச்சுனு ஸ்டேஷன் போறவங்க, ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளருக்குத்தான் புகார் குடுப்பாங்க. ஆனால், இந்த வழக்கில் நான்கு புகார்களும் குற்றப் பிரிவு ஆய்வாளர் பெயரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல நான்கு எஃப்.ஐ.ஆர்களும் காப்பி பேஸ்ட் செய்ததைப்போலக் கடைகளின் பின்பக்கக் கதவை உடைத்து, கல்லா பெட்டியில் இருந்த பணத்தைத் திருடியதாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பழங்குடி இருளர்கள் என்றாலே திருடர்கள் என்ற பார்வை யைத் தமிழகக் காவல்துறை எப்போதுதான் மாற்றிக் கொள்வார்களோ தெரியவில்லை. பொய் வழக்கு பதிவுசெய்த போலீஸார்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்வரை எங்கள் சட்டப் போராட்டம் தொடரும்” என்றார்.

கல்யாணி
கல்யாணி

இது குறித்து விளக்கம் கேட்க, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசனைத் தொடர்புகொண்டோம். “இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, கடையை உடைத்து பணத்தையும் பொருளையும் எடுத்ததாக அவரே ஒப்புக்கொண்டார். கொத்தடிமையாக இருந்த அவரை மீட்டு உளுந்தூர்பேட்டையில் ஒப்படைத்தது நாங்கள்தான். அந்த நபரைத் திருட்டு வழக்கில் கைதுசெய்திருப்பதாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டுசென்றோம். கைதுசெய்யப்பட்ட அந்த நபர்மீது போலீஸ் துளிக்கூட கைவைக்கவில்லை” என்றார்.

இருளில் கிடக்கும் நீதி வெளிச்சத்துக்கு வரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism