அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

போண்டாமணிக்கு ஷாக்... கம்பி எண்ணும் போலி எஸ்.ஐ!

போண்டா மணி
பிரீமியம் ஸ்டோரி
News
போண்டா மணி

ஏ.டி.எம் கார்டை என்னிடம் கொடுங்க. நானே மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வருகிறேன்” என்று கூறி, ஏ.டி.எம் கார்டைப் பெற்றுக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

காமெடி நடிகர் போண்டா மணி சில தினங்களுக்கு முன்பு கிட்னி பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவிக்கரம் நீட்டக் கோரி காமெடி நடிகர் பெஞ்சமின் உருக்கமாகப் பேசிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து போண்டா மணிக்குப் பலதரப்புகளிலிருந்தும் உதவிகள் கிடைத்த வண்ணமிருந்தன. இந்த நிலையில், ‘போலி’ சப் இன்ஸ்பெக்டராக நடித்து, சுமார் ஒரு லட்சம் ரூபாயை நடிகர் போண்டா மணியிடமிருந்து அபேஸ் செய்திருக்கிறார் ஒரு நபர்.

இது குறித்து, சென்னை போரூர் எஸ்.ஆர்.எம்.சி-யின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரிடம் பேசினோம். ``25.9.2022-ம் தேதி ஐ.சி.யூ-வில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் போண்டா மணியை தீனா என்ற நபர் சந்தித்து, தன்னை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘அண்ணனைப்போல நானும் இலங்கை தமிழர்தான். அண்ணனுக்கு கிட்னி தானம் செய்ய ஒருவர் தயாராக இருக்கிறார். நானே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருகிறேன் அக்கா’ என்று நடிகர் போண்டா மணியின் மனைவியிடம் ஆறுதலாகப் பேசி நடித்திருக்கிறார் அந்த நபர். கடந்த 29-ம் தேதி டிஸ்சார்ஜாகி போண்டா மணி வீட்டுக்குச் சென்றதும் போலி சப் இன்ஸ்பெக்டர் தீனாவும் அங்கே சென்று நலம் விசாரித்திருக்கிறார்.

போண்டாமணிக்கு ஷாக்... கம்பி எண்ணும் போலி எஸ்.ஐ!

அப்போது, `மருத்துவமனை செலவு விவரங்கள் தொடர்பாக வங்கியின் ஸ்டேட்மென்ட் எடுக்க வேண்டும்’ என போண்டா மணியின் குடும்பத்தினர் பேசியிருக்கிறார்கள். அதைக் கேட்ட தீனா, “ஏ.டி.எம் கார்டை என்னிடம் கொடுங்க. நானே மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வருகிறேன்” என்று கூறி, ஏ.டி.எம் கார்டைப் பெற்றுக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் தீனா வீட்டுக்கு வராத நிலையில், பிரபல நகைக்கடை ஒன்றிலிருந்து அந்த ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி ஒரு லட்ச ரூபாய்க்கு நகைகள் வாங்கியதாக போண்டா மணியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் போலீஸாரிடம் புகாரளித்தனர். இது தொடர்பாக நடந்த விசாரணையின் மூலம் போலி சப் இன்ஸ்பெக்டர் தீனாவைக் கைதுசெய்தோம்” என்றார்.

ராஜேஸ்
ராஜேஸ்

விசாரணையில் தீனாவின் உண்மையான பெயர் ராஜேஸ் எனத் தெரியவந்தது. திருப்பூரைச் சேர்ந்த இவர்மீது ஏற்கெனவே சென்னை எழும்பூர், திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கின்றன. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கும் இருக்கிறது. தான் மோசடி செய்த இடங்களில் சிவராமகுரு, தீனதயாளன், தீனா, ராஜேஷ், ஸ்ரீராமகுரு என வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். கோவை துடியலூரில் டிரைவர் வேலை செய்துவந்த ராஜேஷ், நடிகர் போண்டா மணிக்குப் பலர் பண உதவி செய்வதை சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துகொண்டு, பிளான் பண்ணியே இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். ஏ.டி.எம் கார்டு மூலம் குறிப்பிட்ட தொகையை மட்டுமே ஒரே நாளில் எடுக்க முடியும் என்பதால், கார்டிலிருந்த பணத்தில் நகைகளை வாங்கி அதை விற்றுப் பணமாக்கியிருக்கிறார். தற்போது நகை மீட்கப்பட்டு, ராஜேஸ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ரூம் போட்டு யோசிப்பாய்ங்கபோல!