Published:Updated:

வாழ்க்கையில எனக்கு ஒரே ஒரு ஆசைதான்!

கோவிந்தராஜி
பிரீமியம் ஸ்டோரி
கோவிந்தராஜி

- தாய்மடி தேடி திரும்பி வந்த மாற்றுத்திறனாளியின் பாசப் போராட்டம்!

வாழ்க்கையில எனக்கு ஒரே ஒரு ஆசைதான்!

- தாய்மடி தேடி திரும்பி வந்த மாற்றுத்திறனாளியின் பாசப் போராட்டம்!

Published:Updated:
கோவிந்தராஜி
பிரீமியம் ஸ்டோரி
கோவிந்தராஜி

வாழ்க்கை பல சமயங்களில் ஈவிரக்கமற்றது; நியாயமற்றது; ஆனாலும் மனிதர்களின் கண்ணீரால் அது இன்னும் நம்பிக்கையின் பச்சையம் மாறாமல் உயிர்த்திருக்கிறது!

உறவுகள் கைவிட்டுவிட்டதால் சிறு வயதில் வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்று, 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயின் கண்ணீர் துடைக்கத் திரும்பி வந்திருக்கிறார் கோவிந்தராஜி. கைகளும் கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இவர். தமிழக, கேரள மாநிலங்களிலுள்ள பல்வேறு ரயில் நிலைய பிளாட்பாரங்களில் இதுவரை வாழ்ந்துவந்தவர், தாய்மடியின் கதகதப்புக்காக ஓடிவந்த கதை இது...

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள மரத்தடிதான் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் சிலருக்குத் தங்கும் வீடு. இந்த இடத்துக்குப் புதிதாக ஒரு ‘விருந்தினர்’ வந்திருக்கிறார் என்பது அறிந்து சென்றோம். இரண்டு அடி உயரமுடைய மாற்றுத்திறனாளி... பெயர், கோவிந்தராஜி. கை கால்கள் பெரிதாக ஒத்துழைக்காத நிலையிலும், அவரின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சி குறித்து விசாரித்தோம். 50 ஆண்டுக்கால வாழ்வின் துயரம் கண்ணீர்த்துளிகளாக விழிகளில் பொங்கி நின்றன. கொஞ்சம் நிதானித்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு நம்மிடம் மனம் திறந்தார்...

வாழ்க்கையில எனக்கு ஒரே ஒரு ஆசைதான்!

‘‘என் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பக்கத்துல இருக்கிற ஞாயிறு கிராமம். அந்த ஊர்ல வாழ்ந்த என் அப்பா, பெரிய நாதஸ்வர வித்வான். அப்பாவுடைய ரெண்டாம் தாரத்து மகன்தான் நான். முதல் தாரத்து அம்மாவுக்கு ஒரு பையனும் ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க. என்கூடவும் பிறந்த ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க.

வீட்டுல யாரும் என்னை மாதிரி கிடையாது. உடம்புல எந்தக் குறையும் இல்லாமத்தான் நானும் பொறந்தேன்னு அம்மா சொல்லுவாங்க. ரெண்டு வயசு இருக்குமாம். அப்பதான் ஏதோவொரு நோய் பாதிப்பால என் கை கால் எலும்பெல்லாம் உடைஞ்சுபோச்சாம். கட்டு கட்டினாலும், எலும்பு கூடலையாம். டாக்டருங்ககிட்ட காட்டுனப்போ, ‘எலும்புல பலமில்லை. எதுவும் செய்ய முடியாது. அப்படியேவிட்டாலே பிழைச்சுக்குவான்’னு சொல்லியிருக்காங்க. அதனால, அப்படியே வீட்டுல விட்டுட்டாங்க. அம்மாவைத் தவிர எல்லாரும் என்னை பாரமா பார்த்தாங்க. கால் வளர்ச்சியில்லைன்னாலும், என்னால கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து போக முடியும். சரியா ஞாபகமில்லை... 1990-னு நெனைக்கிறேன். அந்தச் சமயம், கொஞ்சம் விவரம் தெரியும். என்னால யாரும் கஷ்டப்பட வேண்டாம்னு நெனைச்சுக்கிட்டு வீட்டுலருந்து கிளம்பிட்டேன்.

எங்க போறதுன்னு தெரியலை. பக்கத்துல இருக்கிற ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய், அங்க வந்த ரயில்ல ஏறிப் படுத்துத் தூங்கிட்டேன். கடைசியா ரயில் நின்ன இடத்துல எழுந்து பார்த்தா, கேரளான்னு சொன்னாங்க. ரயில்வே பிளாட்பாரத்துல தங்கியிருந்த தமிழ் பேசுறவங்க சிலர், என்னையும் கூடவே தங்கவெச்சுக்கிட்டாங்க. நானும் அங்கேயே 16 வருஷம் தங்கிட்டேன். அதுவரைக்கும் என் வீட்டு ஆட்கள் என்னைத் தேடுனாங்களா இல்லையான்னுகூடத் தெரியலை. அப்புறம், தமிழ்நாட்டுப் பக்கம் வந்துடலாம்னு கிளம்பினேன். நான் வாழ்க்கையில பயணம் பண்ணின ஒரே வாகனம் ரயில்தான். ரயிலைத் தவிர வேற எந்த வண்டியிலேயும் ஏறுனது இல்லை. இங்கே வந்து கோவை, ஈரோடு, சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள்ல சுத்திக்கிட்டிருந்தேன்.

வாழ்க்கையில எனக்கு ஒரே ஒரு ஆசைதான்!

ஆரம்பத்துல பிளாட்பாரங்கள்ல தூங்கும்போது, சிலர் என்கிட்ட இருக்கிற கொஞ்ச காசு பணத்தையும் பிடுங்கிட்டுப் போயிடுவாங்க. நைட்டுல நிம்மதியா தூங்க முடியாது. இப்போ எனக்கு அம்பது வயசு ஆகுது. வீட்டைவிட்டு வந்து முப்பது வருஷத்துக்கும் மேல ஆகிடுச்சு. தாடி நரைச்சு, வழுக்கை விழ ஆரம்பிச்சிடுச்சு. இப்ப எந்த ஊருக்குப் போனாலும், என்னை மாதிரியான நிறைய பேர்கூட சேர்ந்துதான் தங்குறேன். ஊரடங்குக்கு முன்னாடி சேலத்துல இருந்தேன். ரயில் ஏற வந்த ஒருத்தரு திடீர்னு என்னைப் பார்த்து, ‘டே கோவிந்தா’னு கூப்பிட்டாரு. அண்ணாந்து பார்த்த எனக்கு, அவர் யாருன்னே அடையாளம் தெரியலை. ‘என்னடா... என்னை அடையாளம் தெரியலையா? நான்தான் உன் பக்கத்து வீட்டுக்காரன் ரமேஷு’னு சொன்னாரு. ‘நாம ரெண்டு பேரும் சின்ன வயசுல விளையாடியிருக்கோமே’ன்னு ஞாபகத்தைத் தூண்டிவிட்டப்ப, அப்படியே அதிர்ச்சியாகிட்டேன். கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ‘அப்பா, அம்மா எப்படி இருக்காங்க’னு கேட்டப்போ, ‘அப்பா செத்துப்போய் ரொம்ப நாள் ஆகுது. நீயும் செத்துட்டேன்னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க. அம்மாவும் உன்னை நெனச்சுக்கிட்டே படுத்த படுக்கையா கிடக்கிறாங்க’னு ரமேஷு சொன்னாரு. நான் ஆடிப்போயிட்டேன். தேம்பித் தேம்பி அழுத என்னைச் சமாதானம் செஞ்சவரு, ‘வீட்டுக்கு வாடா’னு கூப்பிட்டாரு. ‘அம்மாவை இப்படிப்பட்ட சூழ்நிலையில வந்து என்னால பார்க்க முடியாது. பாவம் அது ரொம்ப கஷ்டப்படும்’னு சொல்லி மறுத்துட்டேன். ஊருக்குப் போனதும் என் வீட்டுல இருக்கிறவங்ககிட்ட ரமேஷு சொல்லிட்டாரு. அம்மா சொல்லி, தாய்மாமன் ஆறுமுகம் என்னைத் தேடிக்கிட்டு வந்தாரு. நான், சேலத்துலருந்து ஈரோடுக்கு ரயில் ஏறிப் போயிட்டேன். மாமாவும் சேலம், கோயம்புத்தூரு, ஈரோடுனு வாரக்கணக்குல தேடி, ஒருவழியா என்னைக் கண்டுபிடிச்சுட்டாரு.

அம்மா முன்னாடி கொண்டு போய் என்னைய நிறுத்துனாரு. ‘என் சாமி. ஏண்டா என்னை விட்டுட்டுப் போனே... இத்தனை வருஷமா எங்கடா இருந்தே?’னு சொல்லி அம்மா கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழுதாங்க. அம்மாவும் மெலிஞ்சுபோய் சதையே இல்லாத எலும்பு மாதிரி தெரிஞ்சாங்க. அப்பாவுடைய முதல் தாரத்துக்குப் பிறந்த பசங்களும் அம்மாவைப் பாத்துக்கிறது இல்லை. என் ரெண்டு தங்கச்சிகளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. வாட்டசாட்டமா இருந்த தங்கச்சி பசங்களைப் பார்த்து, எனக்கு அவ்வளவு சந்தோஷம். ஒவ்வொருத்தரையும் அடையாளம் பார்த்து கட்டிப்பிடிச்சு அழுத பின்னாடிதான், மனசுல இருக்கிற கவலை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுது. போன வருஷம் முழுக்க வீட்டுல அம்மாகூடவே இருந்துட்டேன்.

திடீர்னு மனசுல ஒரு எண்ணம்... இப்படி கடைசி காலத்துல உடம்பு முடியாம இருக்குற அம்மாவுக்கு ஏதாவது செய்யணுமேன்னு. சொந்தமா சின்னதா ஒரு வீடு கட்டி, கடைசி காலம் வரைக்கும் அம்மாவைப் பக்கத்துலயே இருந்து பார்த்துக்கணும்னு மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சுது. சொல்லப்போனா என் வாழ்க்கையில எனக்கு இருக்கிற ஒரே ஒரு ஆசை இதுதான். சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில வீடெல்லாம் கட்ட முடியுமாங்கிற கேள்வியும் மனசுக்குள்ள ஓடிக்கிட்டேதான் இருக்கு. அதுக்காக ஆசைப்படாம... முயற்சி பண்ணாம இருக்கலாமா?

வாழ்க்கையில எனக்கு ஒரே ஒரு ஆசைதான்!

எத்தனை நாளைக்கு வீட்டுலேயே இருக்குறதுனு நெனச்சுத்தான் ஜோலார்பேட்டைக்கு வந்துருக்கேன். அம்மாவும், ‘ரொம்ப தூரமா போயிடாதே’னு சொன்னதுனால, இந்த ஜங்ஷன்ல தங்கியிருக்கேன். பயணிகள்தான் எனக்கு முதலாளி. அவங்க கொடுக்குற அஞ்சு, பத்தைச் சேர்த்துவெச்சு, அம்மாவுக்கு மாசா மாசம் முடியுற பணத்தை அனுப்பணும்னு முடிவு பண்ணியிருக்கேன். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சா மாதிரி இருக்கு. மனசுக்குள்ள ஆர்வம் இருந்தாலும், இப்போ என்னால நடக்க முடியலை. ஹைதராபாத்தைச் சேர்ந்த ரெண்டு கால்களும் இல்லாத ஒரு பையன், வீல்வெச்ச பலகை ஒண்ணை எனக்குக் கொடுத்திருக்கான். ரொம்ப தூரம் போகணும்னா அதுல ஏறி உட்கார்ந்துக்கிட்டு, கையால உந்தி உந்தி நகர்ந்து போறேன்.

அம்மாகூடவே இருக்கணும்னு தோணுது. குட்டியா பட்டன் போன் வாங்கியிருக்கேன். அதுல, தங்கச்சி பையனுக்கு போன் பண்ணி தினமும் அம்மாகிட்ட பேசுறேன். நான் செத்துட்டேன்னு ரேஷன் கார்டுல இருந்துகூட பேரை எடுத்துட்டாங்க. நான் யார்னு சொல்ல எனக்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால, அரசாங்கச் சலுகை எதையுமே வாங்க முடியலை. உதவி செய்யவும் யாருமில்லை. முன்ன மாதிரி, ஊர் ஊராச் சுத்தவும் முடியலை. மூச்சடைக்குது... கொஞ்சம் காசு கிடைச்சா, ஊர்லயே பெட்டிக்கடை போட்டு நானும் பிழைச்சுப்பேன். அம்மாவையும் பக்கத்துல இருந்து பார்த்துப்பேன்’’ என்கிறார் வெள்ளந்தியாக கோவிந்தராஜி.

தன்னைத் தனக்குள் பொத்தி வளர்த்தவளை பத்திரமாக பார்த்துக்கொள்ளத் துடிக்கிறது ஒரு பிள்ளை மனம். ‘‘உங்கள் அறவுணர்ச்சிக்கும் நியாயமான ஆசைக்கும் நல்லது நடக்கும்!” என்று சொல்லி கைகுலுக்கியபடி விடைபெற்றோம்!