நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

குடும்பத் தொழில் நிறுவனங்கள்... “பெருமையாகச் செய்யுங்கள்!’’

குடும்பத் தொழில் நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத் தொழில் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப்

ன்றைக்கு நம் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை குடும்பத் தொழில் நிறுவனங்கள்தான். ஆனால், குடும்பத் தொழிலைத் தலைமையேற்று நடத்துகிற அடுத்த தலைமுறையினர் ஏதோ ஒரு மனக்குறையுடனே அந்தத் தொழிலைச் செய்வதை உணர்கிறேன். இந்த உணர்வு தேவை யில்லை. நமது குடும்பத் தொழிலை நாம் பெருமையுடன் செய்ய வேண்டும்’’ என இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார் ‘கேம்ஸ்’ (CAMS) நிறுவனத்தின் நிறுவனரான வி.சங்கர்.

சென்னை ஆவடியில் உள்ள வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியும் வேல்டெக் டெக்னாலஜி இன்குபேட்டரும் இணைந்து ‘ஸ்டார்ட்அப் அண்டு இன்வெஸ்டார் சம்மிட் 2019’ என்கிற கருத்தரங்கை நடத்தியது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கவும் மேற்கொண்டு வளரவும் தேவையான விஷயங்கள் இதில் பேசப்பட்டது. வேல்டெக் நிறுவனத்தின் நிறுவனர்களான ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தனர். வேல்டெக் டெக்னாலஜி இன்குபேட்டரின் சி.இ.ஓ ராஜாராம் பேசியதாவது...

‘‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை சில ஆண்டுகளிலேயே மூடப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், சென்னையில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பல, தொடர்ந்து செயல்படக்கூடியவையாக உள்ளன. காரணம், ரிஸ்க் எடுப்பதில் காட்டும் நிதானம்தான். ஸ்டார்ட்அப் நிறுவனங் கள் தொடர்ந்து நிலைத்திருக்கத் தேவையான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவே இந்தக் கருத்தரங்கம்’’ என்றார் அவர்.

குடும்பத் தொழில் நிறுவனங்கள்... “பெருமையாகச் 
செய்யுங்கள்!’’

இந்தக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார் ‘கேம்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான வி.சங்கர். ‘‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்க வேண்டுமெனில், வித்தியாசமான ஐடியாவை நன்கு செயல்படுத்தும் திறமை வேண்டும். பிசினஸ் தொடங்கும்போது முதலில் சிறிய அளவில் தொடங்குங்கள். மற்றவர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள் என்பதற்காக நீங்களும் தொடங்காதீர்கள்.

முன்பு, ஒரு பிசினஸ் மாடல் வந்தால், அது 20, 30 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். ஆனால், இப்போது அது சில ஆண்டுகளிலேயே மாறக்கூடியதாக இருக்கிறது. எனவே, நீங்கள் செய்யும் தொழில் உங்களின் போட்டியாளர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் மட்டுமே போட்டி யாளர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றி விடாது. அதை நிர்வாகம் செய்கிற திறமையும் வேண்டும். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதைத் தனியாகச் செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். ஒரு நல்ல பார்ட்னரைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

குடும்பத் தொழில் நிறுவனங்கள்... “பெருமையாகச் 
செய்யுங்கள்!’’

குடும்பத் தொழிலைச் செய்துவரும் இளம் தலைமுறையினர் சிலரை அண்மையில் சந்தித்தேன். குடும்பத் தொழிலைச் செய்வதை அவர்கள் பெருமையாக நினைக்கவில்லை என்பது அவர்கள் பேசுவதிலிருந்து புரிந்தது. இந்த உணர்வு தேவையில்லை. குடும்பத் தொழில்களை பெருமையுடன் செய்ய வேண்டும். குடும்பத் தொழில்களை இப்போது பெரிய அளவில் நடத்த அருமையான வாய்ப்பிருக்கிறது. குடும்பத் தொழிலை நன்றாக நடத்த வேண்டும் என்கிற எண்ணம்தான் இன்றைய இந்தியாவுக்குத் தேவை.

எந்தவொரு பிசினஸுக்கும் உள்மதிப்பீடு, வெளிமதிப்பீடு (Internal & External valuation) உண்டு. உள்மதிப்பீடு என்பது நீங்கள் உங்கள் பிசினஸை எவ்வளவுக்கு மதிப்பிடுகிறீர்கள் என்பது. வெளிமதிப்பீடு என்பது மற்றவர்கள் உங்கள் பிசினஸை எவ்வளவுக்கு மதிப்பிடுகிறார்கள் என்பது. உங்கள் பிசினஸ் தொடர்பான வெளி மதிப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தராதீர்கள். அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் பிசினஸைப் பற்றி நீங்கள் செய்யும் மதிப்பீடுதான் முக்கியம். இந்த மதிப்பீட்டை உயர்த்துவதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதிக பணம் இருந்தால் பிசினஸைப் பிரமாத மாகச் செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். பிசினஸை நன்கு வளர்க்கத் தேவையான அளவுக்குப் பணம் இருந்தாலே போதும். அதிக பணம், தேவையில்லாத பல பிரச்னைகளையே கொண்டுவரும். குறைந்த பணத்தில் சிறப்பாகத் தொழில் நடத்தக்கூடிய திறமை நமக்கு வேண்டும்.

குடும்பத் தொழில் நிறுவனங்கள்... “பெருமையாகச் 
செய்யுங்கள்!’’

இப்போதெல்லாம் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, மூன்று வருடத்தில் அதை வேறொருவரிடம் விற்று விட்டு, கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைக் கிறார்கள். இது சரியல்ல. நாம் குழந்தைகளை வளர்ப்பது, அவர்களை வளர்த்து ஆளாக்கவே தவிர, யாரிடமாவது கொண்டு போய் விற்பதற்கல்ல. நாம் தொடங்கும்போது நீண்ட நாளைக்கு இருக்க வேண்டும்; தொடர்ந்து நடத்த வேண்டும் என்கிற எண்ணம் நமக்கிருக்க வேண்டும்’’ என இன்றைக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த நினைப்பவர்களுக்கு உதவும் பல விஷயங்களைச் சொன்னார் அவர்.

இந்த ஒருநாள் கருத்தரங்களில் ‘டேக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீதரன் சிவன், ஸ்டார்ட்அப் முதலீட்டாளரான விசேஷ் ராஜாராம், ஏஞ்சல் முதலீட்டாளரான சுப்பு, பொன்டாக் (Pontaq) நிறுவனத்தின் மகேஷ் ராமச்சந்திரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் மணிகண்டன், வருவாய்த் துறை முன்னாள் செயலாளரான எம்.ஆர்.சிவராமன் எனப் பலரும் சிறப்புரையாற்றினார்கள்.

இந்தக் கருத்தரங்கின் ஓர் அங்கமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாங்கள் புதிதாக உருவாக்கிய தயாரிப்புகளைக் கண்காட்சியாக வைத்திருந்தன.இதில் 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்து கொண்டன. மூன்று சிறந்த ஸ்டார்ட் அப்களுக்கு விருதுகளும் அளிக்கப்பட்டன. வேல்டெக் டெக்னாலஜி இன்குபேட்டரில் 120 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்துகொண்டுள்ளன.

இந்திய அளவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யும் இன்குபேட்டர்களில் வேல்டெக் இன்குபேட்டர் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதில் வேல்டெக் இன்குபேட்டர் சிறப்பாகச் செயல்படுகிறது!