Published:Updated:

`காமராஜரின் சிஷ்யன் டு ராகுல் காந்திக்கு அனுப்பிய மெயில் வரை'- நெல்லை கண்ணன் வாழ்வின் சில சம்பவங்கள்

நெல்லை கண்ணன்

’தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் காமராஜர். அவரைப் போல இன்னொரு தலைவரைப் பார்க்க முடியுமா..? என அடிக்கடி பேசக்கூடியவர் நெல்லை கண்ணன். காமராஜர் மீதும் இந்திரா காந்தி மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர்.

`காமராஜரின் சிஷ்யன் டு ராகுல் காந்திக்கு அனுப்பிய மெயில் வரை'- நெல்லை கண்ணன் வாழ்வின் சில சம்பவங்கள்

’தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் காமராஜர். அவரைப் போல இன்னொரு தலைவரைப் பார்க்க முடியுமா..? என அடிக்கடி பேசக்கூடியவர் நெல்லை கண்ணன். காமராஜர் மீதும் இந்திரா காந்தி மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர்.

Published:Updated:
நெல்லை கண்ணன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக பட்டிமன்றப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தமிழை நேசித்த அவரது பேச்சைக் கேட்க ரசிகர்கள் இருக்கும் அளவுக்கு நகைச்சுவையாகவும் அதே சமயம் ஆழ்ந்த கருத்துடனும் பேசக்கூடியவர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடக்கும் விழாக்களில் நெல்லை கண்ணன் பேசுவதாக இருந்தால் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு இணையாக அவரது படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைப் பேசும்போது பாடல்களை வரிமாறாமல் மடைதிறந்த வெள்ளம் போல சொல்லக் கூடியவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இளம் வயதிலேயே மேடைப்பேச்சு

நெல்லை கண்ணனின் தந்தை ந.சு. சுப்பையாபிள்ளை, தாய் முத்துஇலக்குமி அம்மாள். சுதந்திரத்துக்கு முன்பு 1945-ல் ஜனவரி 27-ம் தேதி பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர், அவரது தந்தை தமிழ்ப்புலமை மிகுந்தவர். அவரிடம் இருந்தே தான் தமிழ் கற்றுக் கொண்டதாக பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியுடன் நெல்லை கண்ணன்
மனைவியுடன் நெல்லை கண்ணன்

தமிழ் மீது ஆர்வம் இருந்த நிலையில், கல்வியில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. தந்தையின் வற்புறுத்தல் காரணமாக ஒரு வருடம் மட்டுமே கல்லூரிக்குச் சென்றார்.நெல்லை கண்ணனின் முதல் மனைவி வேலம்மாள் புற்றுநோயால் மறைந்த பின்னர் தெய்வநாயகி என்பவரை மணமுடித்தார். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். முதல் மகன் சுகா திரைப்படத் துறையிலும், ஆறுமுகம் ஊடகத் துறையிலும் பணியாற்றுகின்றனர்.

இளம் வயதிலேயே மேடைகளில் பேசும் ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர்,பட்டிமன்றங்களில் திறமையாக வழக்காடுவார். நகைச்சுவையுடன் நெல்லை பேச்சு வழக்கில் பேசி பார்வையாளர்களின் கைதட்டலைப் பெறுவார். பாரதியார், திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், என தேசித் தலைவர்கள் மீது பற்று கொண்டிருந்தார். கடைசி வரையிலும் காமராஜரின் தீவிர அபிமானியாக விளங்கியவர். அவர் பேசும் மேடைகள் அனைத்திலும் காமராஜரின் புகழை எடுத்துரைக்கத் தவறியதே இல்லை.

உடலைப் பார்த்துக் கதறும் உறவினர்கள்
உடலைப் பார்த்துக் கதறும் உறவினர்கள்

குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களில் பேசிவந்த அவர் அதை அறிவார்ந்த விவாதத் தளமாக மாற்றியவர். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். கவிதைகளையும் எழுதி பதிப்பித்துள்ளார். பன்முகத் தன்மையுடன் விளங்கிய அவர் ‘தமிழ்க்கடல்’ என்று புகழப்பட்டார். அவருக்கு தமிழக அரசின் சார்பாக இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது.

அரசியல் அரங்கில் நெல்லை கண்ணன்!

தனக்குச் சரி எனப்படுவதைப் பேசுவதற்கு எப்போதுமே தயங்காதவர் நெல்லை கண்ணன். காமராஜரின் மீதுள்ள பிடிப்பின் காரணமாக காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தார். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மீது அன்பு கொண்டிருந்தவர். கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் செயல்பட்டவர்.

உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது
உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் கட்சி தன்னை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற ஏக்கம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. கட்சி வரையிலும் ராகுல் காந்தியுடன் மெயில் மூலம் தொடர்பிலேயே இருந்தார். தமிழகத்தில் கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்பது தொடர்பாக அவர் மெயிலில் தெரிவித்த கருத்துகளை ஏற்று, தமிழகத்தில் ராகுல் காந்தி இளைஞர்களுடன் கலந்துரையாடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சம்பவங்கள் நடந்தன.

தேர்தல் களத்தையும் நெல்லை கண்ணன் விட்டுவைக்கவில்லை. மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இரு முறை காங்கிரஸ் சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.1996-ல் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார்.

பல்வேறு அரசியல் தலைவர்களுடன்
பல்வேறு அரசியல் தலைவர்களுடன்

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதிலும், கருத்து வேறுபாடு காரணமாக ஒதுங்கியே இருந்துவந்த அவரை ஜெயலலிதா நேரில் அழைத்து ஒரு மணிநேரம் பேசினார். அதனால் அ.தி.மு.க-வில் இணைந்தார். எதையும் துணிச்சலுடன் பேசக்கூடிய அவரால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. அதனால் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறினார்

சைவ சிந்தாந்தவாதி!

சைவ சித்தாந்தத்தில் தீவிர பற்று கொண்டிருந்தார். சைவ சமயம் குறித்து ஆழ்ந்த அறிவும் தெளிவான பார்வையும் அவரிடம் இருந்தது. மதுரை ஆதீன மடத்தை நித்யானந்தா கைப்பற்றுவதைத் தடுக்க தீவிரமாகப் போராடினார். அதற்கான சட்டப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மதுரை ஆதீன மடத்தை நித்யானத்தா கைப்பற்றுவதைத் தடுக்க களமிறங்கி போராடியவர்
சைவ அமைப்பினர்

ஆகம விதிகளை மீறி சைவ மடங்கள் செயல்படக்கூடாது என்பதற்காக தானே களத்தில் இறங்கி மதுரையில் போராட்டம் நடத்தினார். அவரது முயற்சியின் காரணமாகவே மதுரை ஆதினத்தில் நித்யானந்தா முக்கிய இடத்தைப் பிடிக்கும் திட்டம் தோல்வியில் முடிந்தது. ஆன்மிகத்தில் அவருக்கு எந்த அளவுக்கு நாட்டம் இருந்ததோ அதே அளவுக்கு பெரியார் மீதும் மரியாதை வைத்திருந்தார். பல கூட்டங்களில் பெரியார் பற்றி விளக்கமாகப் பேசியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு நேர் எதிராக அவரது சிந்தனை இருந்தது. அக்கட்சியின் சனாதனக் கொள்கைகளை வீரியமுடன் எதிர்த்தார். அந்த எதிர்ப்பே அவரை தி.மு.க-வுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தது. காலம் முழுவதும் தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த அவர், சில வருடங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே அவரது செயல்களை பாராட்டிப் பேசினார். திருமாவளவனையும் அவரது கொள்கைகளையும் புகழ்ந்தார்.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் காரணமாக கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது.

77 வயது நிரம்பிய நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்..