Published:Updated:

“ரொம்பத் தப்புங்க... நிரூபிச்சா ஒரு கோடி ரூவா தர்றோம்!”

எடப்பாடிக்கு சவால்விடும் விவசாயிகள்

பிரீமியம் ஸ்டோரி
“இதெல்லாம் ரொம்பத் தப்புங்க!” என்று முதல்வர் பழனிசாமி சவால்விடுவதுதான் வழக்கம். ஆனால், மின் விநியோகம் தொடர்பான விவகாரத்தில், “உயர்மின் கோபுரம் வழியாக மட்டுமே மின்சாரத்தைக் கொண்டு செல்ல முடியும்; வேறு மாற்றுத் திட்டங்கள் இல்லை” என்று முதல்வர் சொன்ன கருத்தை முன்வைத்து, “அதெல்லாம் ரொம்பத் தப்பான கருத்துங்க... அப்படி மாற்றுத் திட்டம் இல்லைனு அவர் நிரூபிச்சார்னா, எடப்பாடிக்கு ஒரு கோடி ரூபாய் தர்றோம்ங்க” என்று சவால்விட்டிருக்கிறார்கள் கொங்குப் பகுதி விவசாயிகள்!

சமீபத்தில் முதல்வர் பழனிசாமி திருப்பூர் வந்தபோது, உயர்மின் கோபுரம் விவகாரம் குறித்துப் பேசியவர், ‘‘மற்ற மாநில விவசாயிகள், நமக்கு மின்சாரம் கொடுப்ப தற்காக, தங்களது நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர். அதேபோல, நம் மாநில வளர்ச்சிக்காக நம் விவசாயிகள், உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கு வேறு மாற்றுத் திட்டங்களே இல்லை’’ என்றார். இந்தக் கருத்துக்குத்தான் இப்படியொரு சவால் விடுத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

“ரொம்பத் தப்புங்க... நிரூபிச்சா ஒரு கோடி ரூவா தர்றோம்!”

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டியக்கத்தின் செய்தித் தொடர்பாளர் கவினிடம் பேசினோம். மனிதர் பொரிந்து தள்ளி விட்டார். ‘‘ஏனுங்க, நிலத்துல காலை வெச்சா எர்த் அடிக்குதுங்க. எகிறிக் குதிச்சு ஓட வேண்டியிருக்கு... அப்புறம் எப்படிங்க விவசாயி மண்ணுல காலைவெப்பான்... வெறும் டியூப் லைட்டை நீட்டினா பளிச்சுனு எரியுது. நிலத்துல நின்னுக்கிட்டி ருக்குற ஆளு மேல பவர் டெஸ்ட்டரை வெச்சா அதுவும் பிரைட்டா எரியுது. மரம், செடிங்களை வளர்க்க முடியலை. ஆடு, மாடுங்க மிரண்டு ஓடுதுங்க. இந்தக் கஷ்டமெல்லாம் புரியாம, ‘மாற்றுத் திட்டம் இல்லை’னு முதல்வர் ரொம்பத் தப்பா பேசுறாரு. நான் உதாரணம் சொல்லட்டு முங்களா...

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து, கேரளாவோட திருச்சூருக்கு 320 கிலோவாட் கரன்ட் சப்ளை ஆகுது. அதுல தாராபுரம் நியூ புகளூர் ஏரியாவுல இருந்து கோயமுத்தூர் பக்கமிருக்குற பெரும்பதி வரைக்கும்தான் உயர்மின் கோபுரம் வழியா கரன்ட் போகுது. அதுக்கப்புறம் கேரளா பார்டர் வந்ததும், 36 கிலோமீட்டருக்கு நெடுஞ்சாலை ஓரத்துல கேபிளைப் புதைச்சுத்தான் கரன்ட் எடுத்துட்டுப் போறாங்க.

இப்படி நிலத்தடி கேபிள் மட்டுமில்லைங்க... கேரளாவோட கொச்சி, குஜராத்தோட போர்பந்தர் இங்கிருந்தெல்லாம் தலா 1,100 கிலோவாட் கரன்ட்டை 3,000 கிலோமீட்டருக்கு அப்பால இருக்குற ஆப்பிரிக்காவுக்குக் கடல்வழியா எடுத் துட்டுப் போக மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருக்கு. ஊர் உலகத்துல இவ்வளவு நடக்குது... இதெல்லாம் தெரியாம பேசுறாரு முதல்வர். அவர் சொல்றதுபோல மத்த மாநில விவசாயிங்க உயர்மின் கோபுரத் திட்டத்துக்கு ஆதரவெல்லாம் கொடுக்கலை. கர்நாடகாவுல கடுமையா எதிர்க்கிறாங்க. கேரளாவுல மாற்றுவழியில செயல்படுத்திட்டு வர்றாங்க.

கவின் - சதீஷ்குமார் - ஈசன்
கவின் - சதீஷ்குமார் - ஈசன்

இங்கே மட்டும்தான், உயர்மின் கோபுரத் திட்டத்தால பாதிக்கப்பட்ட விவசாயிங்களுக்குக் குறைந்தபட்ச வாடகையும், சந்தை மதிப்புல இழப்பீடும் தராம நாலு வருஷமா ஏமாத்துறாங்க. நாங்க சொல்ற ஒவ்வொரு விஷயத்துக்கும் எங்ககிட்ட ஆதாரம் இருக்குங்க. முதல்வர் அய்யாவுக்கு சவால் விடுறோமுங்க... அவரை இதுக்கு மாற்றுத் திட்டம் இல்லைனு நிரூபிக்கச் சொல்லுங்க... நாங்க விவசாயிங்ககிட்ட வசூல் பண்ணி, முதல்வருக்கு கோடி ரூவா கொடுக்குறோம்” என்றார் ஆவேசமாக!

‘ஏர்முனை இளைஞரணி’ அமைப்பின் தொழில் நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சதீஷ்குமார், “உயர்மின் கோபுரத்தைவிட, கேபிள் திட்டத்தில் மூன்று மடங்கு செலவு அதிகம். அதனால்தான், உயர்மின் கோபுரத் திட்டத்தை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், உயர்மின் கோபுரத்தில் 15 சதவிகித மின் இழப்பு ஏற்படும். கேபிளில் மூன்று சதவிகிதம்தான் மின் இழப்பு ஏற்படும். அதனால், முதலீட்டுத் தொகையை படிப்படியாக மின் இழப்பில் சரிசெய்துவிடலாம். உயர்மின் கோபுரத்தைவிட, கேபிள் பராமரிப்பு எளிதானது.

சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் 400 கே.வி-க்கு மேல் மின்சாரத்தைக் கொண்டு செல்ல கேபிளைத்தான் பயன்படுத்துகின்றனர். கேபிளிலேயே பாதுகாப்பின் அடிப்படையில் நான்கு வகையான திட்டங்கள் உள்ளன. அதன் அடிப்படையில், இங்கு 800 கே.வி மின்சாரத்தைக்கூட 400, 400 என இரண்டாகப் பிரித்துக் கொண்டு செல்ல முடியும். தொழில்நுட்பத்தில் நிறைய மாற்றுத் திட்டங்கள் உள்ளன. நாம்தான் அதைச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், ‘‘சென்னையைச் சுற்றி 110 கி.மீ தூரத்துக்கு 400 கே.வி மின்சாரம் கேபிளில் கொண்டு செல்லப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் புயலால் உயர்மின் கோபுரங்கள் அடிக்கடி சேதமடைந்துவிடுகின்றன என்பதால், அவற்றை கேபிளாக மாற்றுவதற்கு, சட்டசபையில் இதே எடப்பாடி பழனிசாமி ரூ.3,000 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். மதுரையி லிருந்து இலங்கையின் அனுராதபுரத்துக்கு 525 கே.வி மின்சாரத்தை ராமேஸ்வரம் வரை உயர்மின் கோபுரம் வழியாகவும், ராமேஸ்வரத்திலிருந்து கடல்வழியாகவும் கொண்டு செல்லவிருக்கிறார்கள். ஆனால், கிராமத்து விவசாயிகளிடம் மட்டும்தான் ஏமாற்றுகிறார்கள்’’ என்றார்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் விளக்கம் கேட்டோம். ‘‘இது தவறான தகவல். கேரளாவில் 174 உயர்மின் கோபுரங்கள் அமைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் விளைநிலங்களில்தான் செல்கின்றன. கொச்சி டவுன் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே கேபிள் புதைத்துள்ளனர். 800 கிலோ வாட் மின்சாரத்தை கேபிளில் கொண்டு செல்வதற்குத் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. மாற்றுத் திட்டம் இருந்தால், விவசாயியான முதல்வர் அதைச் செய்யாமல் இருப்பாரா?” என்றார்.

சவாலைச் சமாளிப்பாரா ‘உழவர் மகன்!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு