Published:Updated:

டெல்லி: `கலைந்து போக மாட்டோம், பேசுவோம்!’ - காவலர்கள் குவிப்பு; தொடரும் போராட்டம் #GroundReport

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம் ( Manish Swarup )

உத்தரபிரதேச மாநிலம், காசிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் கலைந்துபோகக் கூறியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் போராடிவரும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க மறுத்துள்ள விவசாயிகள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், காசிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளைக் கலைந்துபோகக் கூறியும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அங்கு காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

காசிப்பூரில் விவசாயத் தலைவர் ராகேஷ் டிகாய்ட், தாங்கள் கலைந்து போக மாட்டோம் என்றும், அரசாங்கத்திடம் தங்களின் பிரச்னைகள் குறித்துப் பேசுவோம் என்றும் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். மேலும், அவர் ஊடகங்களிடம் உணர்ச்சிவசமாகப் பேசும் வீடியோ ஒன்றும் வெளியானது. இவரின் தலைமையில்தான் காசிப்பூர் எல்லையில் பல்வேறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விவசாயிகள்
விவசாயிகள்
Manish Swarup

டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் அங்குச் சென்று பார்வையிட்டார். அங்குள்ள விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் கழிவறை வசதிகளைச் செய்து கொடுத்ததாகத் தெரிவித்தார். முன்னதாக விவசாயிகளின் போராட்ட முகாம்கள் இருக்கும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காசியாபாத் மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர், வியாழனன்று நள்ளிரவு காசிப்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தை பார்வையிட்டுள்ளனர். மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், அரசாங்கம் என்ன செய்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, போராட்டம் நடைபெறும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காசிப்பூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இன்று காலையிலிருந்து அங்கு கூட்டம் கூடியுள்ளது. போராட்டக் களத்தைவிட்டு வெளியேறிய விவசாயிகளும் திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவிலிருந்து காசிப்பூர் விவசாயிகள் போராட்டம் களத்தில் சற்று பதற்றநிலை உருவாகியுள்ளது.

விவசாயிகள்
விவசாயிகள்
Manish Swarup

போராட்ட களங்களில் ஒன்றான டிக்ரி எல்லையிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 50 தினங்களுக்கும் மேலாகப் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவந்தனர். ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெற்றது. அதில் வன்முறை வெடித்தது. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்திவருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசத் துரோக குற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு