Published:Updated:

“காகிதப்பூ மாலை!” - 20 லட்சம் கோடி யாருக்கு?

கொந்தளிக்கும் விவசாயிகள்

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பேரிடரிலும் உற்பத்தியை நிறுத்தாமல் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் உழவர்கள் மட்டும்தான்.

ஆனால், அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்களின் உழைப்புக்கான குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில், ‘20 லட்சம் கோடி ரூபாய், கொரோனா சிறப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப் படும்’ என்ற பிரதமரின் அறிவிப்பு, விவசாயிகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அதன் பிறகு வெளிவந்த நிதியமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றத்தையே அதிகம் தந்துள்ளதாக வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.

இதுதொடர்பாகப் பேசிய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், ‘‘மாநில அரசின் அத்தனை அதிகாரங்களையும் மத்திய அரசு அபகரித்துக் கொண்டது. மின்சார சட்டத்திருத்தம் மூலமாக மின்சாரத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்து, இலவச மின்சாரத்துக்கு வேட்டுவைக்கிறது. ஊரடங்கு காரணமாக விளைபொருள்களை விற்பனை செய்ய முடியவில்லை. அவை வயலிலேயே அழுகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் விவசாயிகள் எதிர்பார்ப்பது நிவாரணத்தை மட்டும்தான். ஆனால், நிதியமைச்சரின் அறிவிப்புகள் கடும் ஏமாற்றம் அளிக்கின்றன. தொழில்கள் நஷ்டமடையாமல் இருக்க, கடன் உள்ளிட்ட பல அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், விவசாயிகள் ஏற்கெனவே நஷ்டத்தில்தான் இருக்கி றார்கள். அவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது தானே முறை. அதற்குப் பதிலாக மேலும் கடன் வாங்க வழி சொல்கிறது அறிவிப்பு. ஏற்கெனவே வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் மேலும் மேலும் கடன்காரன் ஆகும் அறிவிப்பு, விவசாயிகளை எந்த வகையில் மேம்படுத்தும்?

“காகிதப்பூ மாலை!” - 20 லட்சம் கோடி யாருக்கு?

கடன் அறிவிப்பை விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை. கடன் தள்ளுபடி என்கிற நிவாரணத்தைத்தான் எதிர்பார்த் தார்கள். இந்தியா முழுக்க விவசாயிகளுக்கான கடனில் குறிப்பிட்ட ஒரு பகுதியை, தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தது, ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவுக்காவது விவசாயி களுக்கு கடன் தள்ளுபடி தேவை. அதுவே விவசாயிகளுக்குக் கிடைக்கும் நேரடி பலனாக இருக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று மாதங்களுக்கு பயிர்க்கடனுக்கான வட்டி தள்ளுபடி என்கிறார்கள். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ஓராண்டுக்குள் செலுத்தினால், வட்டி செலுத்தத் தேவையில்லை. இந்த நிலையில் `மூன்று மாதங்களுக்கு பயிர்க்கடனுக்கான வட்டி தள்ளுபடி!’ என்ற அறிவிப்பு ஏமாற்று வேலையே.

உள்கட்டமைப்புக்காக ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி கடன் என்பதெல்லாம் விவசாயிகளுக்குப் பயன்படாது. விவசாயிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன்படும்.

அறச்சலூர் செல்வம் - கனிமொழி
அறச்சலூர் செல்வம் - கனிமொழி

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கை யின்படி, விவசாய விளை பொருள்களுக்கான உற்பத்தி செலவுத் தொகையைக் கணக்கிட்டு, அந்தத் தொகையில் 50 சதவிகித தொகையையும் கூடுதலாகச் சேர்த்து, விவசாய விளைபொருள் களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP-minimum support price) நிர்ணயிக்க வேண்டும். இதைச் செய்தால், விவசாயத்தில் உள்ள பல பிரச்னைகள் தீரும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இதை ஏற்கெனவே தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக பா.ஜ.க கொடுத்திருந்தது. ஆனால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையைச் செயல் படுத்தாமல், விவசாயிகளே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

விவசாயிகள் விலையைச் சொல்லிக்கொண்டுதான் இருக் கிறோம். ஆனால், வாங்குவதற்குத்தான் யாரும் தயாராக இல்லை. ‘எங்கு வேண்டுமானாலும் விளைபொருள்களை விற்பனை செய்யலாம், சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும்’ போன்ற எந்த அறிவிப்பும் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணங்களைத் தராது. சொல்லப்போனால், இந்த அறிவிப்பை அரசாங்கம் தயார்செய்ததாகத் தெரியவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளின் கூட்டமைப்பு தயாரித்ததாகவே தோன்றுகிறது. தொழில் நிறுவனங்கள் அரசுடன் கலந்துரையாட பல வழிகள் இருக்கின்றன. ஆனால், விவசாயிகளுக்கு அந்த வழிகள் இல்லை. விவசாயி களின் பிரச்னைகளை அரசு கவனத்தில்கொள்வ தில்லை. மொத்தத்தில், இந்த அறிவிப்புகள் காகிதப் பூக்களால் ஆன மாலை. அதில் வாசனை இல்லை” என்றார்.

இதுதொடர்பாக பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் கனிமொழியிடம் கருத்து கேட்டோம். ‘‘சுயசார்பு திட்டமே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். கடன் தள்ளுபடி செய்யவில்லை என்கிறார்கள். கடன் தள்ளுபடி செய்தால், அடுத்த பணிகளுக்கு பணம் தேவைப்படும். அதற்கு என்ன செய்வது? அதனால்தான், கடன் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் தற்சார்புடன் வாழ்வதற்காக பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. பெரும்பாலான விவசாய அமைப்புகள் இதை வரவேற்றுள்ளன.

“காகிதப்பூ மாலை!” - 20 லட்சம் கோடி யாருக்கு?

தேனீ வளர்ப்பு, மூலிகை வளர்ப்பு, சிறு உணவுப்பொருள்கள் தயாரிப்பு என, விவசாயிகளுக்குப் பயன்படும் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுத்த அரசு, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்த பிறகுதான், அதில் உள்ள நன்மைகளை சிலர் புரிந்துகொள்வார்கள். மொத்தத்தில் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்துதான் மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு