Published:Updated:

`இது ஹெல்மெட், தலையில போடலன்னா அடிபடும்!' - போலீஸ் கமிஷனருக்குப் பதில் கொடுத்த எல்.கே.ஜி மாணவன்

கு.ஆனந்தராஜ்

நான் சொல்லிக்கொடுத்தபடி, கமிஷனரைப் பார்த்ததும் பையன் சல்யூட் அடிச்சான். கமிஷனர் சிரிச்சார்.

commissioner viswanathan with janarthanan, tushar hari
commissioner viswanathan with janarthanan, tushar hari

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது, தனக்கு மட்டுமின்றி, தன் மூன்றரை வயது மகனுக்கும் தொடர்ந்து ஹெல்மெட் அணிவித்து பயணம் செய்துவருகிறார், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜனார்தனன். இதனால் இவர்கள் இருவரையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார், சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன். இதுகுறித்து ஜனார்தனனிடம் பேசினோம்.

janarthanan, tushar hari
janarthanan, tushar hari

``நான் தனியார் நிறுவனத்துல வேலை செய்றேன். என் பையன் துஷார் ஹரி எல்.கே.ஜி படிக்கிறான். நான் எப்போதும் ஹெல்மெட் அணிந்துதான் இருசக்கர வாகனம் ஓட்டுவேன். ஒருமுறை என் பையனுடன் பயணம் செய்தபோது, சறுக்கல் ஏற்பட்டு எப்படியோ சுதாரிச்சு கீழ விழாம தப்பிச்சுட்டோம். ஒருவேளை நாங்க கீழ விழுந்திருந்தால், ஹெல்மெட் அணியாம இருந்த பையனுக்கு அடிபட்டிருக்கக்கூடும்.

அந்தத் தருணத்துலதான், இருசக்கர வாகனத்துல பயணம் செய்றப்போ பையனுக்கும் ஹெல்மெட் மாட்டிவிடணும்னு முடிவுபண்ணினேன். அப்போதான், சென்னை காமராஜர் சாலையில ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டின இளைஞர் ஒருவர் சாலை விபத்துல உயிரிழந்தார். அந்த நிகழ்வு என்னை யோசிக்க வெச்சது. அந்த விபத்து பற்றியும் ஹெல்மெட் அணிந்து பயணிக்கிறது குறித்தும் பையனுக்குப் புரியும்படி சொன்னேன்.

ஹெல்மெட்டைக் காட்டி, `இது என்னது? இதை எதுக்குப் பயன்படுத்தணும்?'னு பையன்கிட்ட கமிஷனர் சார் கேட்டார். `இது ஹெல்மெட். இதைப் போடாம வண்டி ஓட்டினா, கீழ விழும்போது தலையில அடிபட வாய்ப்பிருக்கு'னு என் பையன் சொன்னான்.
ஜனார்தனன்

பிறகு, பையனுக்குப் பொருந்துற மாதிரியும், அவனுக்கு அசவுகரியம் ஏதும் இல்லாத மாதிரியுமான ஹெல்மெட் வாங்கினேன். அவனும் விருப்பப்பட்டு ஹெல்மெட் போட்டுக்கறான். பையனை தினமும் நான்தான் ஸ்கூலுக்கு பிக் அப், டிராப் செய்வேன். அப்போதும், என்னுடன் அவன் வெளியில வரும்போதும் தவறாமல் ஹெல்மெட் போட்டுக்குவான். இந்தப் பழக்கத்தை சில மாதங்களா தவறாமல் கடைப்பிடிக்கிறோம்" என்கிற ஜனார்தனன், காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் பாராட்டிய தருணம் குறித்துப் பேசுகிறார்.

``நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை என் மகனுடன் நான் அயனாவரம் பகுதியில் இருசக்கர வாகனத்துல பயணம் செய்தேன். எங்களுக்கு அருகே அரசு வாகனம் ஒண்ணு வந்துச்சு. அதில் பயணம் செய்த அதிகாரி யாரோ, என் வண்டி நம்பரை போட்டோ எடுத்திருக்கார். என் வண்டி நம்பரை வெச்சு, என் செல்போன் நம்பரைக் கண்டுபிடிச்சிருக்காங்க. கொஞ்ச நேரத்துல, கமிஷனர் அலுவலகத்துல இருந்து எனக்கு அழைப்பு வந்துச்சு. இதெல்லாம் 15 நிமிடத்துல நடந்ததுதான். 

commissioner viswanathan with janarthanan, tushar hari
commissioner viswanathan with janarthanan, tushar hari

பிறகு, என் பையனுடன் கமிஷனர் விஸ்வநாதன் சாரை சந்திச்சேன். பையனும் நானும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்றதால அவர் எங்களைப் பாராட்டினார். நான் சொல்லிக்கொடுத்தபடி, கமிஷனரைப் பார்த்ததும் பையன் சல்யூட் அடிச்சான். கமிஷனர் சிரிச்சார். ஹெல்மெட்டைக் காட்டி, `இது என்னது? இதை எதுக்குப் பயன்படுத்தணும்?'னு பையன்கிட்ட கமிஷனர் கேட்டார். `இது ஹெல்மெட். இதைப் போடாம வண்டி ஓட்டினா, கீழ விழும்போது தலையில அடிபட வாய்ப்பிருக்கு'னு என் பையன் சொன்னான். அவனை வாழ்த்தி, சாக்லெட் கொடுத்துப் பாராட்டினார் கமிஷனர்" என்றார் நெகிழ்ச்சியுடன்.