''கோரோனா உறுதியானதையடுத்து வீட்டில் தனிமையில் இருந்த கோபிநாத் தான் இறந்து விட்டால் தன் மனைவியையும், மகளையும் யாரும் பார்க்க மாட்டார்கள். என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது''
சேலத்தில் கொரோனா பயத்தால் தன் 5 வயது ஆசை மகளை கொன்று விட்டு தாய், தந்தை தூக்கிலிட்டு தற்கொலை செய்து இறந்திருப்பது சேலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கோபிநாத். வயது 31. மனைவி பவித்ரா வயது 28. இவர்களுக்கு நந்திதா என்ற 5 வயது மகள் உள்ளார். மாற்றுத் திறனாளியான கோபிநாத் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஸ்வீட் கடையில் கேஷியராக பணியாற்றி வந்தார். கோபிநாத்துக்கு கடந்த 9-ம் தேதி தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்துள்ளது. அதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனையில் கோபிநாத்துக்கு 5 சதவிகிதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். வீட்டுக்கு வந்த கோபிநாத், தன் மனைவி மகளோடு வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். நேற்று காலையிலிருந்து மதியம் வரை வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அதே பகுதியில் வசிக்கும் கோபிநாத்தின் தாய் செங்கமலம், வீட்டுக் கதவை தட்டிப் பார்த்திருக்கிறார். அப்போதும் யாரும் திறக்கவில்லை.
அதையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து வீட்டின் பின்புறக் கதவை உடைத்து பார்த்த போது கோபிநாத், பவித்ராவும் தூக்கில் தொங்கியவாறும், அவர்களுடைய 5 வயது மகள் நந்திதா தரையில் இறந்தும் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிநாத்தின் தாய் கதறி அழுதார். உடனே அன்னதானப்பட்டி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

இதுபற்றி அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் கூறியதாவது,`` கோபிநாத் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டார். கத்தியால் கைகளை கிழித்திருக்கிறார்கள். பிறகு சாணி பவுடர் கரைத்து குடித்திருக்கிறார்கள். அதன் பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள். கொரோனா உறுதியானதையடுத்து வீட்டில் தனிமையில் இருந்த கோபிநாத் தான் இறந்து விட்டால் தன் மனைவியையும், மகளையும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் இருந்ததாகவும் தகவல் கிடைக்கிறது. உண்மைக் காரணம் அதுதானா அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.