அலசல்
Published:Updated:

பண்டிகை கால திருடர்கள்... மக்களே உஷார்!

பண்டிகை கால திருடர்கள்... மக்களே உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
பண்டிகை கால திருடர்கள்... மக்களே உஷார்!

செப்டம்பர் 24-ம் தேதி, பிரபல ஆன்லைன் இணையதளத்தில் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் 366 ரூபாய்க்கு சுடிதார் ஒன்றை ஆர்டர் செய்தார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைனில் சுடிதார் வாங்கிய மன்னார்குடிப் பெண்ணிடம், 6 லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி 52,000 ரூபாயை ஏமாற்றியிருக்கிறது ஒரு சைபர் க்ரைம் கும்பல். இந்த மோசடியோடு பண்டிகைக் கால பர்ச்சேஸைப் பயன்படுத்தி, ஆன்லைனில் திருடும் கும்பலின் கைவரிசைகள் குறித்த புகார்கள் பல தரப்பிலிருந்தும் குவிகின்றன...

தீபாவளி கொண்டாட குடும்பத்தோடு புது டிரஸ், பட்டாசுகள், இனிப்புகளை வாங்கும் மக்கள் கூட்டம் ஒருபக்கம் வணிக நிறுவனங்களில் அலைமோதுகிறது. மற்றொரு பக்கம் கூட்ட நெரிசலில் சிக்காமல் ஆன்லைன் மூலமாகப் புது டிரஸ்களை, பரிசுப்பொருட்களை ஆர்டர் செய்துகொண்டிருக்கிறார்கள் இன்னொரு தரப்பு மக்கள். இவர்களைத்தான் மோசடிக் கும்பல் குறிவைக்கிறது. ‘ஃபெஸ்டிவேல் ஆஃபர்’ என்ற பெயரில் போலியான விளம்பரங்களை இணையதளங்களில் பரவவிட்டு, அதை நம்பி உள்ளே நுழைபவர்களிடம் சில ஆயிரங்கள் தொடங்கி லட்சங்களைச் சுருட்டிக்கொண்டிருக்கிறது.

பண்டிகை கால திருடர்கள்... மக்களே உஷார்!

‘ஆறு லட்ச ரூபாய் கார் பரிசு...’ சுடிதார் வாங்கிய பெண்ணிடம் சீட்டிங்!

செப்டம்பர் 24-ம் தேதி, பிரபல ஆன்லைன் இணையதளத்தில் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் 366 ரூபாய்க்கு சுடிதார் ஒன்றை ஆர்டர் செய்தார். 27-ம் தேதி சுடிதார், தனலட்சுமியின் கைக்கு வந்தது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் இணையதளத்திலிருந்து பேசுவதாகக் கூறிய ராம்பிரகாஷ் பட்டேல் என்பவர், ‘தீபாவளி சர்ப்ரைஸாக உங்களுக்கு 6 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்திருக்கிறது’ என்று செல்போனில் கூறியுள்ளார். மகிழ்ந்த தனலட்சுமி, ‘எனக்கு கார் வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு, ‘காருக்கு பதில் பணமாக அனுப்புகிறோம்’ என்று கூறி தனலட்சுமியின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டிருக்கிறார் அந்த நபர்.

பின்னர் தனலட்சுமியிடம், ‘6 லட்சம் பரிசுத் தொகைக்கு ஜி.எஸ்.டியாக 20,000 ரூபாய் செலுத்த வேண்டும்’ என்று கூறி, மேலும் சில கணக்குகளைச் சொல்லி 52,000 ரூபாய் வரை கூகுள் பே மூலம் வாங்கியிருக்கிறார். அதன் பிறகு ‘பரிசுத் தொகையை சில தினங்களில் உங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிடுவோம்’ என்று தனலட்சுமிக்கு நம்பிக்கை கொடுத்திருக்

கிறார். பணம் வரும் என்று காத்திருந்த தனலட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராம்பிரகாஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனலட்சுமி, திருவாரூர் சைபர் கிரைம் குற்றப்பிரிவில் புகாரளித்திருக்கிறார்.

பண்டிகை கால திருடர்கள்... மக்களே உஷார்!

எஸ்.எம்.எஸ் லிங்க் - லோன் ஆப் கடன்கள்!

இதுகுறித்து வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம், “இந்த ஸ்டைல் சைபர் க்ரைம் மோசடி எல்லாக் காலங்களிலும் நடப்பதுதான். பண்டிகைகளை ஒட்டி, 50,000 ரூபாய் விலையுள்ள செல்போன், டிவி உள்ளிட்ட ஏதாவது ஒரு பொருளைக் குறைந்த விலைக்கு ஆஃபரில் தருகிறோம் என்று கூறி மோசடி செய்வார்கள். பொதுமக்கள் அதை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். அடுத்து சமூக வலைதளங்கள், எஸ்.எம்.எஸ்-க்கள் மூலம் லிங்க் ஒன்றை அனுப்பி, அதை வைத்து மோசடியில் ஈடுபடுவதுண்டு. அந்த லிங்கை ஓப்பன் செய்தால் அதிலுள்ள தகவல்கள் அனைத்தும் உங்களின் ஆசைகளைத் தூண்டி பணத்தை இழக்க வைக்கும். மேலும், போனில் பேசி ஸ்டாக் கிளியரன்ஸ் சேல் என்று கூறி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி.வியை பாதி விலைக்குத் தருவதாகக் கூறி ஏமாற்றுவார்கள். இவை எதையும் நம்ப வேண்டாம். பண்டிகைக் காலம் என்பதால் பணத்தேவைகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி லோன் ஆப்கள் மூலம் கடன் தருவதாகக் கூறி ஏமாற்றுவார்கள். மக்கள் இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்” என்றார்.

சைபர் க்ரைம் மோசடிகள் இப்படி புதுசு புதுசாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க, பழைய ஸ்டைலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெஸ்டிவல் திருடர்களும் கைவரிசைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். பண்டிகை காலத் திருடர்களைப் பிடிக்க போலீஸார் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறார்கள் என விசாரித்தோம்.

எஃப்.ஆர்.எஸ் கேமரா - நடமாடும் சி.சி.டி.வி!

“பண்டிகைத் திருடர்கள், திருட்டு வழக்கில் கைதானவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எஃப்.ஆர்.எஸ் என்று அழைக்கப்படும் பிரத்யேக கேமராக்களுடனும் சட்டைப் பையில் கேமராவைப் பொருத்தி ‘நடமாடும் சி.சி.டி.வி’-க்களைப்போல போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். எஃப்.ஆர்.எஸ் கேமராவில் ஏற்கெனவே உள்ள பழைய குற்றவாளிகளின் விவரங்கள் இருப்பதால் அத்தகைய நபர், மக்கள் கூட்டத்திலிருந்தால் உடனடியாகத் தகவல் தெரிந்துவிடும். இது தவிர, ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கிறோம். அதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே மைக் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

மோசடிப் பேர்வழிகள் புதுப்புது டெக்னிக்குகைகளைப் பயன்படுத்தினாலும் அவர்களின் வலையில் விழாமல் மக்கள்தான் அதீத எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!