Published:Updated:

மறைமுகத் தேர்தல்: பெண் கவுன்சிலர் சேலையை இழுத்ததால் பதற்றம்! - திமுக-வினர்மீது புகார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மறைமுகத் தேர்தல் நடந்த இடத்தின் அருகே சேலை இழுப்பு
மறைமுகத் தேர்தல் நடந்த இடத்தின் அருகே சேலை இழுப்பு

ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடந்தபோது பெண் கவுன்சிலர்களை வாக்களிக்கவிடாமல் தி.மு.க-வினர் தடுத்ததாகவும், சேலையைப் பிடித்து இழுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தென்காசி மாவட்டம், புளியரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு நேற்று மறைமுகத் தேர்தல் நடந்தது. தேர்தலில் அதிமுக ஆதரவாளரான சரவணன் என்பவரும், திமுக ஆதரவாளரான குருமூர்த்தி என்பவரும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.

கூட்டம் திரண்டதால் போலீஸ் குவிப்பு
கூட்டம் திரண்டதால் போலீஸ் குவிப்பு

ஊராட்சி மன்றத் தேர்தல் அரசியல் சார்புடன் நடப்பதில்லை என்றபோதிலும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் களமிறங்கியதால் இரு தரப்பிலும் கட்சி சார்ந்து ஆதரவாளர்கள் திரண்டு வந்திருந்தனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

புளியரை பஞ்சாயத்து வார்டு தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களில் எட்டுப் பேர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சரவணனுக்கு ஆதரவாகவும், நான்கு பேர் தி.மு.க-வைச் சேர்ந்த குருமூர்த்திக்கு ஆதரவாகவும் இருந்தார்கள். அதனால் சரவணன் வெற்றிபெறுவது உறுதியானதாக இருந்தது.

பெண் கவுன்சிலருக்கு நேர்ந்த அவலம்
பெண் கவுன்சிலருக்கு நேர்ந்த அவலம்

ஆனால், மறைமுக வாக்குப்பதிவு நடந்த புளியரை பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் அ.தி.மு.க ஆதரவு கவுன்சிலர்களை நுழையவிடாமல் தி.மு.க-வினர் தடுத்து நிறுத்தியதாகப் புகார் எழுந்தது. அதை அ.தி.மு.க-வினர் தட்டிக் கேட்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்த முயன்றார்கள். அந்த நேரத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சரவணனுக்கு ஆதரவாக வாக்களிக்க வந்திருந்த பெண் உறுப்பினரின் சேலையைச் சிலர் பிடித்து இழுத்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டன.

கூட்டத்தில் சிக்கிய பெண் கவுன்சிலர்
கூட்டத்தில் சிக்கிய பெண் கவுன்சிலர்

பதற்றம் காரணமாக துணைத் தலைவர் தேர்தலை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். தி.மு.க-வினர் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிவிட்டு தேர்தலை நிறுத்தியதாகக் குற்றம்சாட்டிய கடையநல்லூர் தொகுதியின் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான கிருஷ்ணமுரளி, தனது ஆதரவாளர்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ கூறுகையில், ``தேர்தல் நேரத்திலும் சரி, இப்போதும் சரி ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கிறார்கள். நான் பொறுமையாக இருந்து பார்த்தேன். ஆனால், ஒரு பெண்ணின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தி.மு.க-வினர் சேலையைப் பிடித்து இழுத்ததால்தான் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. மானத்தைவிடவும் வேறு என்ன வேண்டியிருக்கிறது?

சாலைமறியலில் ஈடுபட்ட கிருஷ்ணமுரளி
சாலைமறியலில் ஈடுபட்ட கிருஷ்ணமுரளி

இங்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும். உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும். எங்களுக்கு ஆதரவாக ஏழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஏழு பெருசா... நாலு பெருசா? உடனே துணைத் தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சாலைமறியலைக் கைவிட மாட்டோம்” என்றார்.

சாலைமறியல் காரணமாக புளியரை வழியாக கேரளாவுக்குச் செல்லும் சாலை முடங்கியது அதனால், எம்.எல்.ஏ-வும், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளருமான கிருஷ்ணமுரளியிடம் போலீஸாரும்ம் வட்டாட்சிய்ரும் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், துணைத் தலைவருக்கான தேர்தல் முறையாக நடத்தப்படும் என உறுதியளித்தனர்.

சாலைமறியல்
சாலைமறியல்

அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் மறியல் போராட்டம் காரணமாக சுமார் நான்கு மணி நேரத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதற்றம் காரணமாக துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கவுன்சிலர் சகாயமேரி காவல் நிலையத்துக்குச் சென்று தன்னிடம் அத்துமீறி செயல்பட்ட தி.மு.க-வைச் சேர்ந்த குருமூர்த்தி உள்ளிட்ட சிலர்மீது புகார் அளித்தார். போலீஸார் அவரது புகாரை வாங்க மறுத்ததாகக் கறப்படுகிறது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஆய்குடி செல்லப்பன் தலைமையிலான அ.தி.மு.க-வினர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்கள். அதன் பின்னரே புகாரை போலீஸார் ஏற்றுக்கொண்டனராம்.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகார் மனு
பாதிக்கப்பட்டவர் அளித்த புகார் மனு

காவல்துறையினரின் கண் முன்பாக நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அத்துடன், கவுன்சிலர் சகாயமேரிக்குக் கொலை மிரட்டல் இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் தெரிவித்தனர். போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு