Published:Updated:

‘‘வீட்டுக்குள் வந்து சாப்பிட்டார்கள்... டெத் சர்ட்டிஃபிகேட் கேட்டு மெசேஜ் அனுப்பினார்கள்...’’

ஃபைனான்ஸ் நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஸ் நிறுவனம்

ஃபைனான்ஸ் நிறுவனம் கொடுத்த டார்ச்சர்… கதறும் விவசாயி!

விவசாயம் செய்யப் பணமில்லாமல், தனது டிராக்டர் ஆவணங்களை அடமானம் வைத்து வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தாததால் ஒரு விவசாயிக்கு ‘சோழமண்டலம் ஃபைனான்ஸ்’ என்ற நிதி நிறுவனம் கொடுத்த டார்ச்சர்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அருகேயுள்ள குருவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். இவர், திருச்சி தில்லைநகரிலுள்ள சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் விவசாயத் தேவைக்காகத் தனது டிராக்டர் ஆவணங்களை அடமானமாக வைத்து, கடந்த 2019-ம் ஆண்டு 1,90,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதுவரை மூன்று தவணையாக 90,000 ரூபாய் செலுத்தியுள்ளார். ஊரடங்கால் கடந்த நான்கு மாதங்களாக வருவாயின்றி அடுத்தடுத்த தவணைகளை முருகானந்தத்தால் செலுத்த முடியாத நிலை. அதனால், ஃபைனான்ஸ் நிறுவனம் பல்வேறு இன்னல்களைக் கொடுத்ததாக ஆவேசப்படுகிறார் முருகானந்தம்.

‘‘வீட்டுக்குள் வந்து சாப்பிட்டார்கள்... டெத் சர்ட்டிஃபிகேட் கேட்டு மெசேஜ் அனுப்பினார்கள்...’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்ன நடந்தது? அவரிடம் பேசினோம். ‘‘நான் வாங்கிய கடனை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 31,500 ரூபாய் வீதம் 12 தவணைகளில் கட்ட வேண்டும் என்றனர். இதுவரை மூன்று தவணைகள் செலுத்திவிட்டேன். ஊரடங்கால் வேலை இல்லாததால், கையில் பணமில்லை. எனக்கு மட்டுமல்ல... எல்லா விவசாயிகளுக்கும் இதே நிலைதான். ‘லாக்டௌன் காலகட்டத்தில் எந்த நிதி நிறுவனமும் பணத்தைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது’ என்று அரசு கூறியுள்ளது. ஆனாலும், தினமும் நேரிலும் போனிலும் அவர்களின் டார்ச்சர் தொடர்ந்தது. இந்நிலையில், ஃபைனான்ஸ் கம்பெனியிலிருந்து, ‘நீ வாங்கின லோனை முடிக்கணும்னா, நீ செத்துட்டேனு உன்னோட டெத் சர்டிஃபிக்கேட்டை கொடு. லோனை க்ளோஸ் பண்ணிக்கிடலாம்’ என்று என்னோட செல்லுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாங்க. நான் மிரண்டுட்டேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதுமட்டுமல்ல, அந்த கம்பெனியின் கலெக்‌ஷன் ஏஜென்ட்டுகள் சிலர், ‘பணத்தைக் கொடுத்தால்தான் வீட்டைவிட்டுச் செல்வோம்’ என்று தினமும் காலையும் மதியமும் கடையிலிருந்து சாப்பாடு வாங்கிட்டு வந்து, என் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் ஊர்காரர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம், ‘கடனை வாங்கிட்டு முருகானந்தம் ஓடி ஒளிஞ்சிக்கிட்டான். அவனைப் பார்த்தீங்கன்னா நாங்க வந்துட்டுப் போனதாச் சொல்லுங்க’ என்று சொல்லத் தொடங்கினார்கள். டார்ச்சர் தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் சோழமண்டலம் ஃபைனான்ஸ்மீது புகார் கொடுத்துள்ளேன்’’ என்றார்.

முருகானந்தம், அய்யாரப்பன், இளங்கீரன்
முருகானந்தம், அய்யாரப்பன், இளங்கீரன்

சமூக ஆர்வலர் அய்யாரப்பனிடம் பேசினோம். ‘‘டிராக்டர் கடன் நிறுவனங்களின் சூழ்ச்சிவலை மிகவும் அபாயகரமானது. விவசாயிகளின் வீடு தேடி வந்து ஆசைவார்த்தை காட்டுவார்கள். ஆனால், வட்டி விவரங்களைத் தெளிவாகச் சொல்வதில்லை. 12 சதவிகிதத்துல தொடங்கி, வட்டிக்கு வட்டி, அபராத வட்டி என 36 சதவிகிதம் வரைக்கும் வட்டி வசூலிப்பார்கள். 4 லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கினால், சில ஆண்டுகளிலேயே வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆவணங்களிலுள்ள தகவல்கள் எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதால், என்ன ஏதென்று தெரியாமல் விவசாயிகள் கையெழுத்திட்டுவிடுகின்றனர்.

தவணை செலுத்தத் தவறினால் டிராக்டரைப் பறிக்கக் கூலிப்படை வைத்துள்ளனர். காவல்துறையினருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால், அவர்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 6,000 டிராக்டர்கள் விவசாயிகளிடமிருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளன’’ என்றார் வேதனையுடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரனிடம் பேசினோம். ‘‘சோழமண்டலம் ஃபைனான்ஸ் மட்டுமல்ல... பல்வேறு நிறுவனங்களும் டிராக்டரை அடமானம்வைத்துக் கொண்டு கடன் தருகின்றன. அத்தனை நிறுவனங்களின் செயல்பாடுகளும் ஒன்றுபோலவே இருப்பதுதான் வேதனை. கடந்த 2016-ம் ஆண்டு அரியலூரில் அழகர் என்ற விவசாயி டிராக்டர் கடன் வாங்கியிருக்கிறார். ஒரு சில தவணைத் தொகையைச் செலுத்த முடியாததால், அவரைக் கடுமையாகத் திட்டியிருக்கிறார்கள். அந்த மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அதேபோல, திருப்பூர் அருகேயுள்ள மானூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாமணி என்பவர் தனியார் வங்கி, கடன் வசூல் பிரிவு அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார்’’ என்றார் வருத்தத்துடன்.

சோழமண்டலம் ஃபைனான்ஸ் அதிகாரி களைப் பலமுறை தொடர்புகொண்டோம். பதிலளிக்கவில்லை. தில்லைநகரிலுள்ள அலுவலகத்துக்குச் சென்று கடன் பிரிவு அதிகாரி களிடம் பேசினோம். ‘‘இது சம்பந்தமாக எங்கள் சட்ட ஆலோசகர்களிடம்தான் நீங்கள் பேச வேண்டும். நாங்கள் பதிலளிக்க முடியாது’’ என்றார்களே தவிர, சட்ட ஆலோசகர்களின் தொடர்பு எண்களைக் கடைசிவரை தரவே இல்லை. அவர்கள் தரப்பின் விளக்கம் அளித்தால், வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

‘‘வீட்டுக்குள் வந்து சாப்பிட்டார்கள்... டெத் சர்ட்டிஃபிகேட் கேட்டு மெசேஜ் அனுப்பினார்கள்...’’

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் பேசினோம். ‘‘ `கொரோனா நேரத்தில் கடன் தவணைகளைச் செலுத்தச் சொல்லி யாரையும் வற்புறுத்தக் கூடாது’ என்று மத்திய, மாநில அரசுகள் நிதி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளன. அதைப் பொருட் படுத்தாமல் ஊரடங்கு நேரத்தில் விவசாயியிடம் அடாவடியாக நடந்துகொண்ட ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகளை, கந்துவட்டிப் புகாரின் பேரில் கைது செய்ய எஸ்.பி-யிடம் பரிந்துரை செய்கிறேன்’’ என்றார் காட்டமாக.

திருச்சி சரக டி.ஐ.ஜி-யான ஆனிவிஜயாவிடம் பேசினோம். ‘‘இது போன்ற விவகாரங்களில் தனிக்கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதை விரைந்து எடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை.