Published:Updated:

“எங்களை பார்த்தால் ஏமாளி போல் தெரிகிறதா?” - ஓய்வூதிய விவகாரத்தில் அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டுகிறது அரசு.

“எங்களை பார்த்தால் ஏமாளி போல் தெரிகிறதா?” - ஓய்வூதிய விவகாரத்தில் அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டுகிறது அரசு.

Published:Updated:
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த தமிழக நிதியமைச்சரின் கருத்து, அரசு ஊழியர்களைப் போராட்ட மனநிலைக்குத் தள்ளியிருக்கிறது. இந்தப் பிரச்னையின் பின்னணி, தீர்வைப் பற்றிய அலசல் இது...

புதிய ஓய்வூதியத் திட்டம்

அதிகரித்துவரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைத்த மத்திய அரசு, புதிய திட்டத்தை 1-1-2004 முதல் அமல்படுத்தலாம் என்று அறிவித்தது. அதற்கு முன்பாகவே (1-4-2003-ல்), நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது தமிழ்நாடு அரசு.

“நாட்டிலேயே அரசு ஊழியர்களுக்காக அதிக நிதி செலவிடும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்ட்ன் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே போய்விடுகிறது” என்பதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கு அன்றைய அ.தி.மு.க அரசு சொன்ன காரணம்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட தொகை, முழு ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை கிடையாது. ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும். மீதி 40 சதவிகிதம் முதலீடு செய்யப்படும். குடும்ப ஓய்வூதியம் குறித்தும் வரையறுக்கப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போது ஓய்வூதியம் உயராது. தொகையையும் முன்கூட்டியே பெற முடியாது என்பதால் அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கிறார்கள்.

தி.மு.க கொடுத்த வாக்குறுதி

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று தொடர்ந்து வாக்குறுதி கொடுத்ததால், 2021 தேர்தலில் பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்கள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளித்தன. கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்திருப்பதால், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே பழைய ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘பழைய ஓய்வூதியம் சாத்தியம் இல்லை’ என்று அறிவித்தது அரசு ஊழியர்களை ஆத்திரப்படுத்தியது.

தி.மு.க ஆட்சி அரசு ஊழியர்களுக்குச் சாதகமான ஆட்சி என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், தனியார்மய ஆதரவாளர்களாகக் கருதப்படும் மத்திய பா.ஜ.க-வைவிட தீவிரமாக, தி.மு.க அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் புறக்கணிப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் கூடுதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளைவாக, கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுவதும் 1,500 இடங்களில் பல்வேறு சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதிய விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்தச் சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

இந்தப் பிரச்னை குறித்து தி.மு.க கூட்டணிக் கட்சியினர், அ.தி.மு.க மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினரிடம் பேசினோம்.

பீட்டர் அந்தோணிசாமி, அன்பரசு, ராபர்ட்
பீட்டர் அந்தோணிசாமி, அன்பரசு, ராபர்ட்

கார்ப்பரேட் நிர்வாகம் வேறு... அரசு நிர்வாகம் வேறு..!

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமியிடம் கேட்டபோது, “பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டுகிறது அரசு. எங்களை ஏமாளி என்றே அரசு நினைத்துவிட்டது. முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கும்போதெல்லாம், `கொஞ்சம் முன்பின் ஆனாலும் கட்டாயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம்’ என்று நம்பிக்கை கொடுத்தார். ஆனால், நிதியமைச்சரோ `சாத்தியமே இல்லை’ என்கிறார். முதல்வரை மீறி அமைச்சர் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறாரா அல்லது அவரது கருத்துதான் அரசின் முடிவா என்று எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. கார்ப்பரேட் நிர்வாகம் வேறு, அரசு நிர்வாகம் வேறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரச்னை பற்றி மீண்டும் முதல்வரிடம் பேசிவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை என்று முதல்வர் இன்னும் கூறவில்லை. முதல்வரின் முடிவுக்கு அமைச்சர் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். `பழைய திட்டத்தை அமல்படுத்தச் சாத்தியம் இல்லை என நான் கூறவில்லை’ என்று நிதியமைச்சரும் விளக்கமளித்துவிட்டார். எனவே, அது குறித்துப் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும் நன்றாக இருக்காது” என்று சமாளித்தார்.

“ஓய்வூதிய விவகாரத்தில் முதல்வர் அனுமதி இல்லாமல், நிதியமைச்சர் இவ்வாறு அறிவிக்க முடியாது. அவரைப் பேசவிட்டு, முதல்வர் ஆழம் பார்க்கிறார். அரசின்மீது கடும் கோபத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டைவிட பின்தங்கிய மேற்கு வங்கத்தில்கூட இன்னும் பழைய ஓய்வூதிய முறையே அமலில் இருக்கிறது. ‘திராவிட மாடல்’ பேசும் அரசு, உலகமய - தனியார்மய பொருளாதாரத்தைப் பின்பற்றுவது எப்படிச் சரியாகும்...” என்று கேட்கிறார் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு.

பேச்சில் திராவிடம்... செயலில் உலகமயமா..?

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத் தலைவர் ராபர்ட், “தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு முழுத் தொகையையும் செட்டில்மென்ட் செய்துவிட்டால், அவர்களிடமிருந்து ‘உங்களுக்கும் அரசுக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று எழுதி வாங்கப்படுகிறது. இது எங்கும் இல்லாத நடைமுறை. அரசைப் பார்த்து தனியாரும் இதேபோல் முடிவெடுத்தால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். புதிய திட்டப்படி, ஊழியர்களின் பிடித்தம் மற்றும் அரசின் பங்களிப்பு தொகை ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் இருப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால், இதில் ஒரு ரூபாய்கூட இன்னும் முதலீடு செய்யப்படவில்லை. ஆனால், பணம் இருக்கு இருக்கு என்று தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள்” என்றார் வேதனையுடன்.

தி.மு.க-வின் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறிய நிதியமைச்சர், ராஜஸ்தான் மாநிலம் பழைய திட்டத்துக்கு மாறியபோது இருந்த சிக்கல் குறித்துப் பேசினார். பி.எஃப்.ஆர்.டி.ஏ (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்)-விலிருந்து தனிநபர் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் அரசு தவிப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், தமிழக அரசு இதுவரை பி.எஃப்.ஆர்.டி.ஏ-வில் சேரவே இல்லையே... இல்லாத பிரச்னையை ஏன் அமைச்சர் கூறுகிறார்... மாநில சுயாட்சி பேசிவிட்டு, ஓய்வூதிய விவகாரத்தில் மட்டும் மத்திய அரசைக் கைநீட்டி, தி.மு.க சங்கங்களையும் சேர்த்து அரசு ஏமாற்றுகிறது” என்றார் சங்கடத்துடன்.

டி.ஜெயக்குமார், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கே.பாலகிருஷ்ணன்
டி.ஜெயக்குமார், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கே.பாலகிருஷ்ணன்

அ.தி.மு.க நிலைப்பாடு

“2016 தேர்தலில் வாக்குறுதி கொடுத்தும் ஏன் அ.தி.மு.க அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர முடியவில்லை?” என்று அன்றைய நிதி மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டோம். “தமிழ்நாட்டுப் பொருளாதாரம் கொரோனா காலகட்டத்தில் கடுமையாகச் சரிந்ததால், கடன் சுமை 3.55 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதைச் சரிசெய்ய அ.தி.மு.க அரசு கடுமையாகப் போராடியது. அரசு ஊழியர்களுக்குச் செய்ய வேண்டும் என்று எங்களுக்கும் ஆசைதான். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், அரசின் கடன் சுமை மேலும் அதிகரித்திருக்கும். அப்படியிருந்தும் 2017-ம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, அரசுப் பணியாளர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வழங்கினோம். அதனால், கொஞ்சம் பொறுமை காக்குமாறு அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் தொடர்ந்து பேசினோம். தமிழகத்தின் வருவாய், வரவு செலவு, கடன், கடன் வட்டி, பென்ஷன் நிதி என மொத்த நிதி நிலைமையும் எதிர்க்கட்சியாக இருந்த திமுக-வுக்குத் தெரியும். இருந்தபோதிலும், பசியில் அழும் பிள்ளைக்கு ‘கிலுகிலுப்பை’யைக் காட்டி ஏமாற்றுவதுபோல, அரசு ஊழியர்களைப் பழைய ஓய்வூதியத்தைக் காட்டி ஓட்டுக்காக ஏமாற்றிவிட்டது” என்றார்.

தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறும்போது, “தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமையையும், பழைய ஓய்வூதியத்தில் உள்ள சிக்கல்களையும்தான் நிதியமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கினார். ஆனால், முதல்வர் சொன்னால் அதை நான் செய்வேன் என்று உறுதியளித்திருக்கிறார். அ.தி.மு.க ஏற்றிய சுமையை தி.மு.க அரசு சுமந்துவருகிறது. எனவே, நிதி நிலைமையைப் புரிந்து, அரசின் மீது நம்பிக்கைவைத்து சிறிது காலம் அரசு ஊழியர்கள் பொறுமை காக்க வேண்டும். வாக்குறுதியிலிருந்து தி.மு.க ஒருபோதும் பின்வாங்காது” என்றார்.

சொன்னதைச் செய்வதுதான் நல்ல அரசுக்கு அழகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism