Published:Updated:

பற்றி எரியும் மிளகாய் வற்றல், ஏலக்காய், கிராம்பு, பட்டை!- 8 மணி நேரமாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்

8 மணி நேரமாகத் தொடர்ந்து தீ எரிவதால், அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது.

Eastan Masala Factory
Eastan Masala Factory

தனியார் மசாலா தொழிற்சாலை குடோன் பகுதியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து எரிந்துவருவதால், தேனியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பற்றி எரியும் மிளகாய் வற்றல், ஏலக்காய், கிராம்பு, பட்டை!- 8 மணி நேரமாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி அருகே உள்ளது ஈஸ்டன் மசாலா நிறுவனம். கேரளாவைச் சேர்ந்த இந்நிறுவனத்தில், மசாலாப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. காய்ந்த மிளகாய் வற்றல், ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு போன்ற மசாலாப் பொருள்கள் வைக்கப்படும் குடோனில், இன்று காலை 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்தவுடன், தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், காற்றின் வேகத்தால் தீ வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 8.40 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், அங்கிருந்தவை காய்ந்த மிளகாய் வற்றல் என்பதால் எளிதில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

பற்றி எரியும் மிளகாய் வற்றல், ஏலக்காய், கிராம்பு, பட்டை!- 8 மணி நேரமாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்

தேனி மாவட்டத்தின் 8 தீயணைப்பு வண்டிகளும், திண்டுக்கல்லில் இருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகளும், மதுரையில் இருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகளும் என மொத்தம் 12 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 100 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றுவருகிறார்கள். ஆனால், இப்போது வரை தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Vikatan

தகவலறிந்து, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்கணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர், “காய்ந்த மிளகாய் வற்றல் என்பதால், அதிக நெடி இருக்கிறது. மொத்தமும் குளிரூட்டப்பட்ட குடோன் என்பதால் மின்கசிவு, தீவிபத்திற்குக் காரணமாக இருக்கலாம். மொத்தம் ஆயிரம் டன் மிளகாய் வற்றல் இருக்கலாம். தீயைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கிறோம். அருகில் உள்ள நீர்நிலையிலிருந்து தண்ணீர் எடுத்துவருகிறோம்” என்றார்.

பற்றி எரியும் மிளகாய் வற்றல், ஏலக்காய், கிராம்பு, பட்டை!- 8 மணி நேரமாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்

சுமார் 100 கோடி வரையிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 8 மணி நேரமாகத் தொடர்ந்து தீ எரிந்துவருவதால், அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. அருகில் உள்ள கட்டடங்களுக்கும் தீ பரவாமல் இருக்க, போதிய ஏற்பாடுகளைச் செய்துவருகிறது தீயணைப்புத் துறை.