Published:Updated:

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் போலிக் கையெழுத்து... பெரு நிறுவனங்களுக்கு லைசென்ஸ்...

நாகர்கோவில்
பிரீமியம் ஸ்டோரி
News
நாகர்கோவில்

பற்றி எரியும் தீயணைப்புத்துறை!

தற்போதைய தீயணைப்புத்துறை இயக்குநர் கரன்சின்கா மற்றும் முன்னாள் இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோரது கையெழுத்தை போலியாகப் போட்டு, பன்னடுக்குக் கட்டடங்களுக்கு லைசென்ஸ் கொடுத்த விவகாரம் தற்போது எரிமலையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் முன்னணி தீயணைப்பு வீரர் சுந்தர்ராஜ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் தெரியவரும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன!

நாகர்கோவில் குலசேகரத்தில் செயல்பட்டு வரும் ஓர் அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் சி.கே.வேலாயுதம் நாயர். இவர், தீயணைப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகார் ஒன்றின் வழியேதான் இந்த விவகாரம் வெளிவந்திருக்கிறது. அவரது புகாரில், ``எங்களின் கல்விக் குழும வளாகத்தில் 17 கட்டடங்கள் உள்ளன. அந்தக் கட்டடங்களுக்குத் தீயணைப்புத் துறை லைசென்ஸ் கேட்டு சென்னையிலுள்ள இயக்குநர் அலுவலகத்துக்கு மனு அளித்தோம். இந்தச் சூழலில், சென்னையில் பணியாற்றும் முன்னணி தீயணைப்பு வீரரான சுந்தர்ராஜ் என்பவர், ஆய்வுக்காக நாகர்கோவில் வந்திருந்தார். ஆய்வு முடித்துச் சென்றவர், 16.7.2019-ல் தீயணைப்புத்துறை இயக்குநர் கையெழுத்து, முத்திரையுடன்கூடிய லைசென்ஸை வழங்கினார். ஓராண்டுக்குப் பிறகு அந்த லைசென்ஸைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் சுந்தர்ராஜ் எங்களை அணுகினார். இதையடுத்து 28.8.2020-ம் தேதி, புதுப்பிக்கப்பட்ட லைசென்ஸை வழங்கினார். மீண்டும் அடுத்த ஆண்டுக்கான லைசென்ஸை 13.8.2021-ம் தேதி அன்று புதுப்பித்துக் கொடுத்தார். இந்தச் சூழலில், எங்கள் குழுமத்தின் வேறு புதிய கட்டடங்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்காக, தீயணைப்புத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு மனு செய்திருந்தோம். 26.11.2021-ம் தேதி, தீயணைப்புத்துறையின் துணை இயக்குநர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகியோர் ஆய்வுக்காக எங்கள் கல்விக் குழும வளாகத்துக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள், எங்களிடமிருந்த தீயணைப்புத்துறை லைசென்ஸ் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, டிசம்பர் 8-ம் தேதி நாகர்கோவில் மாவட்டக் குற்றப்பிரிவின் இன்ஸ்பெக்டரிடம் புகாரளித்தனர். அதனால், எங்களுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்த முன்னணி தீயணைப்பு வீரர் சுந்தர்ராஜிடம் போனில் விசாரித்தோம். அதற்கு அவர் நேரில் வருவதாகக் கூறினார். இந்த லைசென்ஸ் விவகாரத்தில், என்னைப்போல இன்னும் சிலர் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன். எனவே உரிய விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சுந்தர்ராஜ்
சுந்தர்ராஜ்

இந்தப் புகாரை விசாரிக்கும்படி, தமிழக சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு கரன்சின்கா கடிதம் எழுதினார். விசாரணை நடத்தும்படி டி.ஜி.பி சைலேந்திர பாபு, குமரி மாவட்ட எஸ்.பி-க்கு அந்தக் கடிதத்தைப் பரிந்துரைத்தார். அதனடிப்படையில், முன்னணி தீயணைப்பு வீரர் சுந்தர்ராஜை குமரி மாவட்ட போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த விவகாரம் பூதாகரமாகியிருப்பதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுமத்துக்கு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமுள்ள பல பெரிய நிறுவனங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரபலமான சில ஜவுளி நிறுவனங்களின் கட்டடங்களுக்கு, தீயணைப்புத்துறையில் உயர் பதவியிலிருக்கும் சில கையூட்டு அதிகாரிகளின் உதவியோடு போலி லைசென்ஸ் வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் ஆதாரங்களுடன் வெளியாகியிருக்கின்றன.

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் போலிக் கையெழுத்து... பெரு நிறுவனங்களுக்கு லைசென்ஸ்...

தீயணைப்புத்துறையைச் சேர்ந்த சில நேர்மையான அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். “முன்னணி தீயணைப்பு வீரர் சுந்தர்ராஜ் ஓர் அம்புதான். அவர் மூலம் போலி லைசென்ஸ்களைக் கொடுத்து கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியிருக்கிறார்கள் சில அதிகாரிகள். 17 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களுக்குத் தீயணைப்புத் துறையிலிருந்து லைசென்ஸ் வாங்க வேண்டும். துறையிலிருந்து செய்யப்படும் ஆய்வில், அந்தக் கட்டடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்று கருதினால், அவற்றுக்கு லைசென்ஸ் வழங்கப்படாது. எனவே, பெரும்பாலும் தீயணைப்புத்துறை சார்ந்த உயரதிகாரிகள், அரசியல்புள்ளிகளைப் பயன்படுத்தி குறுக்குவழியில் லைசென்ஸ் பெறுவார்கள் கட்டட உரிமையாளர்கள். ஆனால், இந்த விவகாரம் வித்தியாசமானது. இதில் இயக்குநரின் கையெழுத்தும், தீயணைப்புத்துறையின் முத்திரையும் போலியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனத் தெரிய வந்திருக்கிறது.

கட்டடத்துக்கான எம்.எஸ்.பி லைசென்ஸைப் (Multi Storied Building Licence) பெற சென்னையிலுள்ள இயக்குநர் அலுவலகத்துக்கு வரும் விண்ணப்பங்களுக்கு ஒரு ஃபைல் நம்பர் கொடுக்கப்படும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட மண்டலத்தின் துணை இயக்குநர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகியோர் கொண்ட டீம், விண்ணப்பித்தவரின் இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி ரிப்போர்ட்டை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார்கள். அதன் அடிப்படையில்தான் லைசென்ஸ் வழங்கப்படும். இயக்குநர் பதவியில் தேசத்தலைவர் ஒருவரின் பெயரைக்கொண்ட அதிகாரி ஒருவர் இருந்தார். தற்போது அவர் ஓய்வுபெற்றுவிட்டார். அந்த அதிகாரியிடம் தீயணைப்புத்துறையில் பணியாற்றும் உண்மையின் பெயரைக்கொண்ட அதிகாரி, வெற்றிகரமான பெயரைக்கொண்ட அதிகாரி, பிரபல அறிவிப்பாளர் பெயர்கொண்ட அதிகாரி, அம்மன் பெயரைக்கொண்ட பெண் அதிகாரி, காதல் தோல்விப் படங்களில் அதிகம் நடித்த கதாநாயகனின் பெயரைக்கொண்ட அதிகாரி உள்ளிட்ட டீம்தான் முன்னணி தீயணைப்பு வீரர் சுந்தர்ராஜை அப்போதைய இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். பிறகு, சுந்தர்ராஜ் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள பல விதிமீறல் கட்டடங்களுக்கு இப்படியான போலி லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் போலிக் கையெழுத்து... பெரு நிறுவனங்களுக்கு லைசென்ஸ்...
ஐ.பி.எஸ் அதிகாரிகளின் போலிக் கையெழுத்து... பெரு நிறுவனங்களுக்கு லைசென்ஸ்...

இதற்காக முன்னணி தீயணைப்பு வீரர் சுந்தர்ராஜுக்கு வேலையே இல்லாத இடமாகப் பார்த்து பணி வழங்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக, கிண்டி ராஜ்பவன் அலுவலகத்திலேயே இவர் வேலை பார்த்துவந்தார். இவரின் சொந்த ஊர் சங்கரன்கோவில். அங்கு பிரமாண்டமாக வீடு ஒன்றைக் கட்டியிருக்கிறார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்துக்கு சென்னையிலிருந்து சுந்தர்ராஜுக்கு வேண்டப்பட்ட அந்த அதிகாரிகள் டீம் சென்றிருக்கிறது.

மற்றவர்களைவிட, உண்மையின் பெயரைக்கொண்ட அதிகாரியிடம் சுந்தர்ராஜ் அதிக அளவு விசுவாசமாக இருந்திருக்கிறார். அதனால் சுந்தர்ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டால், உடனடியாக உண்மையின் பெயரைக்கொண்ட அதிகாரி மேலதிகாரிகளிடம் பேசி அந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்துவிடுவார். அவர், கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ரிசார்ட்டுக்கு வந்தால் அனைத்து ஏற்பாடுகளையும் தீயணைப்பு வீரர்கள் செய்துகொடுத்து வந்திருக்கிறார்கள். மேலும் அந்த அதிகாரி, கொடைக்கானலில் நடத்தப்பட்டு வரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதலீடும் செய்திருக்கிறார். இன்னும் சில அதிகாரிகள் சினிமாதுறைக்கே ஃபைனான்ஸ் செய்துவருகிறார்கள். தமிழகம் முழுவதும் 56 கட்டடங்களுக்கு இந்த டீம் போலியான லைசென்ஸை வழங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது” என்றனர்.

``தவறுகள் எல்லாத் துறைகளிலும் சிறிதும் பெரிதுமாக நடக்கும்தான். ஆனால், துறை இயக்குநரின் கையெழுத்தை போலியாகப் போட்டும், முத்திரையைப் பயன்படுத்தியும் ஒன்றிரண்டல்ல... 56 கட்டடங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது, அத்துறைத் தலைமையின் அலட்சியத்தையே காட்டுகிறது’’ என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சுந்தர்ராஜ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள் ``சொந்த ஊரில் அவர் வீடு கட்டியிருப்பது உண்மைதான். ஆனால் அந்த வீட்டின் பெயரில் லோன் உள்ளது. அவரைப் பிடிக்காதவர்கள்தான் தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர்” என்றனர்.

இது குறித்துத் தீயணைப்புத்துறையின் இயக்குநர் கரன்சின்காவிடம் பேசப் பலமுறை முயன்றோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. குறுஞ்செய்தி மூலமாகவும், இமெயில் மூலமாகவும் அவரின் விளக்கத்தைப் பெறத் தகவல் அனுப்பியும் அவர் பதிலளிக்கவில்லை. நேரில் சென்றபோது அவரை அலுவலகத்தில் சந்திக்க முடியவில்லை. எனவே, அவரின் விளக்கத்தைப் பெற முடியவில்லை.

குமரி மாவட்ட போலீஸாரிடம் கேட்டபோது, “இந்த மோசடியில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சுந்தர்ராஜிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

ஆபத்துகளைத் தடுக்கும் துறையிலிருக்கும் இப்படியான ஆபத்தான அதிகாரிகளைக் களையெடுக்கவில்லையென்றால், நமக்கு ஆபத்துதான்!

*****

ஆபத்து!

சென்னை தி.நகர் பகுதியிலுள்ள பெரும்பாலான வணிக வளாகங்கள், தீயணைப்புத்துறையின் முறையான லைசென்ஸ் இல்லாமல், அரசியல் செல்வாக்கு கொண்டோரின் ஆதரவில் செயல்பட்டுவருகின்றன. அங்குள்ள வணிக வளாகங்களில் தீ விபத்து ஏற்பட்டால், ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பெரிய அளவில் ஆபத்து ஏற்படக்கூடும். அந்த வீதிகளில் தீயணைப்பு வாகனங்கள்கூட விரைந்து செல்ல முடியாது. அசம்பாவிதச் சம்பவங்கள் நேரும் முன் ஆக்‌ஷன் எடுக்கவேண்டியது மிகவும் அவசியம்!