Published:Updated:

புஸ்வாணமாகிவரும் பட்டாசுத் தொழில்... குமுறும் தொழிலாளர்கள்!

பட்டாசுத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
பட்டாசுத் தொழில்

ஆரம்பத்துல தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்காமல் நிறைய நிறுவனங்கள் வேலை வாங்கினாங்க. அதை எதிர்த்து சட்டரீதியாகவும், அமைப்புரீதியாகவும் போராட்டங்கள் நடத்தினோம்.

புஸ்வாணமாகிவரும் பட்டாசுத் தொழில்... குமுறும் தொழிலாளர்கள்!

ஆரம்பத்துல தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்காமல் நிறைய நிறுவனங்கள் வேலை வாங்கினாங்க. அதை எதிர்த்து சட்டரீதியாகவும், அமைப்புரீதியாகவும் போராட்டங்கள் நடத்தினோம்.

Published:Updated:
பட்டாசுத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
பட்டாசுத் தொழில்

பட்டாசுத் தொழிலில், நீதிமன்றங்கள் அடுத்தடுத்து விதித்துவரும் கட்டுப்பாடுகள், ஒட்டுமொத்தமாகத் தொழிலையே புஸ்வாணமாக்கிவிடும் அபாய கட்டத்துக்குத் தள்ளியிருப்பதாகப் புலம்புகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்!

புஸ்வாணமாகிவரும் பட்டாசுத் தொழில்... குமுறும் தொழிலாளர்கள்!

பட்டாசுத் தொழிலுக்குப் பிரசித்திபெற்ற விருதுநகர் மாவட்டத்தில், சிறியதும் பெரியதுமாக 1,070 பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எட்டு லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். இப்படிப்பட்ட தொழிலுக்குத் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணம், தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படாமல் சில தொழிற்சாலைகள் செயல்படுவதுதான். அத்துடன், சமீபகாலமாகச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவருவதால், பட்டாசுக்கு எதிரான குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நீதிமன்றங்களும் இந்தத் தொழிலுக்குப் பல்வேறு கடிவாளங்களைப் போட்டுவருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு சார்பாக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவினர், சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்துக்கு வந்து, பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினார்கள். பட்டாசுத் தொழில் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கில், சீக்கிரமே இறுதித் தீர்ப்பு வரவிருக்கும் சூழலில், அதிகாரிகளின் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், பட்டாசுத் தொழிலில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் குறித்து விசாரித்தோம்...

புஸ்வாணமாகிவரும் பட்டாசுத் தொழில்... குமுறும் தொழிலாளர்கள்!

சி.ஐ.டி.யூ பட்டாசு உற்பத்தித் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மகாலட்சுமியிடம் பேசினோம். “விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் எட்டு லட்சம் தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலை நம்பி குடும்பத்தை நடத்திட்டு வர்றாங்க. ஆனால், பட்டாசுத் தயாரிப்பின் மூலப்பொருளான பேரியம் உப்புக்குத் தடை, சரவெடிக்குத் தடைனு உச்ச நீதிமன்றம் போட்ட தடைகளால், இந்தத் தொழில் பெரும் பின்னடைவைச் சந்திச்சிருக்கு. எங்களுக்குப் பட்டாசுத் தொழிலைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யத் தெரியாது. அதனால்தான் ரொம்பவே பயந்துபோயிருக்கோம்.

ஆரம்பத்துல தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்காமல் நிறைய நிறுவனங்கள் வேலை வாங்கினாங்க. அதை எதிர்த்து சட்டரீதியாகவும், அமைப்புரீதியாகவும் போராட்டங்கள் நடத்தினோம். அதனால், இப்போ எல்லா நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளைச் செஞ்சு கொடுத்திருக்காங்க. ஒருசில நிறுவனங்களில் விதிமீறல்கள் இருந்தால், அதைக் கண்டுபிடித்து, கடுமையான தண்டனை கொடுக்கட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், எல்லாரோட வயித்துலயும் அடிக்கிற மாதிரி இந்தத் தொழிலையே முடக்கிவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. இது இந்த மண்ணோட தொழில். ஆரம்பத்துல கலர் மத்தாப்பு செய்யுறதுல ஆரம்பிச்சு, இன்னிக்கு விதவிதமா ஃபேன்சி ரகப் பட்டாசு செய்யுற அளவுக்குத் தொழில் வளர்ந்திருக்கு. தொழிலாளர்களும் இதுல ஈடுபாட்டோட வேலை செய்யறாங்க. இந்தத் தொழில் இல்லாமப் போறதை எங்களால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. அதனால், சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுத் தொழிலுக்கு நிரந்தர விலக்கு கொடுக்கணும். அப்பத்தான் எங்கள் பிரச்னைகள் தீரும்” என்றார் ஆதங்கத்துடன்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

பட்டாசு உற்பத்தியாளர்களிடம் பேசியபோது, “கள்ளச்சந்தையில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் சீனப்பட்டாசு விற்பனை காரணமாக, கடந்த ஓராண்டாகவே எங்களுடைய தொழில் பின்னடைவைச் சந்தித்துவருகிறது. அரசாங்கம் பசுமைப் பட்டாசு தயாரிக்கச் சொன்னாலும், அதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. உற்பத்திச் செலவும் சாதாரண பட்டாசைவிட இரண்டு மடங்கு ஆகிறது. காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் இதையெல்லாம் சொல்லித்தான் பட்டாசுத் தொழிலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், எங்களுக்கு இதைவிட்டால் வேறு தொழில் இல்லை என்பதை அரசும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்கள்.

மேகநாதரெட்டி
மேகநாதரெட்டி

இந்த விவகாரம் தொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் பேசினோம். ‘‘பட்டாசு ஆலைகளில் சரியான கட்டமைப்பு இல்லாதது, தொழிலாளர்களின் திறமைக் குறைபாடு, இயந்திரக் குறைபாடு, மருந்துப் பொருள்களைக் கைகளால் கலப்பது, பாதுகாப்பு இல்லாமல் பட்டாசுகளை உலரவைப்பது, உரிய பாதுகாப்பின்றி வேறு இடத்துக்குப் பட்டாசுகளை எடுத்துச் செல்வது போன்ற சமயங்களில் விபத்துகள் நடக்கின்றன. இதனால், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியிருக்கிறோம். மேலும் உரிய பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றாத 174 ஆலைகளின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்துசெய்துள்ளோம். அந்த ஆலைகள் குறைகளைச் சரிசெய்தால், மீண்டும் செயல்பட அனுமதி கொடுக்கப்படும். பட்டாசுத் தொழிற்சாலைகளில், தொடர் விபத்து நடப்பதைத் தடுக்கும்விதத்தில், பட்டாசுத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காகத் தேர்ந்த நிபுணர்களைக்கொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், விழிப்புணர்வு காணொளிக் காட்சிகளை வெளியிடவும் நிதி ஒதுக்கி தமிழக முதல்வர் சட்டசபையிலேயே அறிவித்துள்ளார்’’ என்றார்.

நீதிமன்றத் தீர்ப்பு ஒருவேளை பாதகமாக வந்தால், பரிதவிப்பிலிருக்கும் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்றுவழி செய்துகொடுக்க அரசு உடனடித் திட்டத்தை வைத்திருக்கவேண்டியது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism