Published:Updated:

விருதுநகர்: `4 வருஷமா கூலி தரலை!’ - விரக்தியில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பட்டாசுத் தொழிலாளி

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

விருதுநகரில் நாலு ஆண்டுகளாகக் கூலி தராததால் மன உளைச்சலில் பட்டாசுத்தொழிலாளி மனைவி, மகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வடபட்டி புதூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்குத் திருமணமாகி, இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு மகள்களும் மனவளர்ச்சி குன்றியவர்கள். இவர், சிவகாசி அருகே சாமிநத்தம், ஈஞ்சார் விலக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான `கிருஷ்ணகுமார் பட்டாசு ஆலை’யில் போர்மேனாகப் பணியாற்றிவந்திருக்கிறார். அந்த ஆலையின் உரிமையாளர், நான்கு ஆண்டுகளாக இவருக்குத் தருவதாகச் சொன்ன ஊதியம் ரூ.2,88,000 கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மனைவி, மகளுடன் கருப்பசாமி
மனைவி, மகளுடன் கருப்பசாமி

இது பற்றி பட்டாசு ஆலை உரிமையாளரிடம் கேட்டபோது ஊதியத்தை அவர் கொடுக்க மறுத்திருக்கிறாராம். இது தொடர்பாக, மல்லி காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்திருக்கிறார். அப்போது மாதம் ரூ.6,000 வீதம் ஊதியம் வழங்குவதாக ஆலை உரிமையாளர் உறுதியளித்திருக்கிறார். ஆனால், கூறியபடி ஊதியத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால், மனவேதனை அடைந்த கருப்பசாமி, தனது மனைவி, மகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலுக்குள் வந்தபோது, திடீரென பைக்குள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், மனைவி, மகள் மீதும் உற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஓடிச் சென்று கருப்பசாமியைத் தடுத்து நிறுத்தி, மூவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். இதையடுத்து கருப்பசாமியிடம் பேசினோம்.

மண்ணெண்ணெய் ஊற்றிய கருப்பசாமியைத் தடுக்கும் போலீஸார்
மண்ணெண்ணெய் ஊற்றிய கருப்பசாமியைத் தடுக்கும் போலீஸார்

``நான், என் மனைவி, மாமனார் என குடும்பத்துல எல்லாருமே கிருஷ்ணகுமார் பட்டாசு ஆலையிலதான் வேலை பார்த்துட்டு வந்தோம். நான் இந்த ஆலையில போர்மேனா வேலை பார்த்தேன். எங்க முதலாளி, எனக்கு வீடு கட்டித் தர்றதாச் சொன்னதுனால கூலி வாங்காம வேலை பார்த்தேன். மனைவி, மாமனாரின் கூலியைவெச்சு வீட்டுச் செலவை கவனிச்சுக்கிட்டேன். நாலு வருசமாகியும் வீடும் கட்டித்தரலை. `வீடு வேண்டாம் என்னோட கூலியை மட்டும் கொடுங்கய்யா’ன்னு கேட்டதுக்கு, இப்போ தர்றேன் அப்போ தர்றேன்னு இழுத்தடிச்சார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விருதுநகர்: விதிமீறல்களுடன் இயங்கிய 70 பட்டாசு ஆலைகள் மூடல்! - `குண்டர் சட்டம் பாயும்’ என எச்சரிக்கை

ஒரு கட்டத்துல கூலியும் கிடையாது, ஒண்ணும் கிடையாதுன்னு சொல்லி தரக்குறைவாப் பேசி அனுப்பிட்டார். ஊர்த் தலைவரிடமும் கூலியைத் தரச்சொல்லிக் கேட்டேன். அவரும் முதலாளிக்கு ஆதரவாகவே பேசினாங்க. எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. மூத்த மகள் ரேணுகா 52 சதவிகிதமும், இளைய மகள் மோகனலெட்சுமி 50 சதவிகிதமும் மன வளர்ச்சி குன்றியவர்களாக இருக்காங்க. கூலி கிடைக்காததுனால குடும்பத்தை என்னால நடத்த முடியலை. கடந்த ஜூலை 26-ம் தேதி மல்லி போலீஸ் ஸ்டேஷன்ல முதலாளி முத்துக்குமார் மீது புகார் கொடுத்தேன். ஒரு மாசத்துக்கு எனக்குத் தர வேண்டிய ரூ.13,000-ஐ கேட்டேன்.

கருப்பசாமியை அழைத்துச் செல்லும் போலீஸார்
கருப்பசாமியை அழைத்துச் செல்லும் போலீஸார்

ஆனா, அவர் ஒரு மாசத்துக்கு ரூ.6,000 வீதம் நாலு வருசத்துக்கு ரூ.2,88,000-தான் தர முடியும்னு சொன்னார். ஆனா, அந்தப் பணத்தையும் தரலை. இதுவரைக்கும் ரெண்டு முறை கலெக்டர் ஆபீஸ்ல புகார் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. மனசு உடைஞ்ச நான் வேற வழியில்லாம மனைவி, மகளுடன் தீக்குளிக்க முடிவு செஞ்சேன்” என்றார். கருப்பசாமியிடம் மனுவைப் பெற்ற ஆட்சியர் இரண்டு நாள்களில் நடவடிக்கை எடுப்பதாகவும், வரவேண்டிய கூலி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி உறுதியளித்திருக்கிறார். பட்டாசுத் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு